15 January, 2019


அனைவருக்கும் இனிய தைத் திருநாள் வாழ்த்துக்கள்!





21 January, 2018

ஆண்டாள் தான் காரணமா?


வியரசு கண்ணதாசன் இருந்த காலத்திலேயே தன்னைக் கவிப்பேரரசாக அறிவிக்கச் செய்த மாபெரும்(?) கவிஞரும் ஆங்கிலக் கலப்பே இல்லாமல் திரைப்படப் பாடல்கள் எழுதிவரும் தமிழ்த்தாயின் தவப்புதல்வருமான(?) வைரமுத்து, ஆண்டாளைப் பற்றி கூறிய கருத்து இன்று விவாதப் பொருளாகவும், போராட்டங்களாகவும் நடைபெற்று வருகிறது. 

வைரமுத்துவை எதிர்த்து நடந்து வரும் இந்தப் போராட்டங்களுக்கு அடிப்படைக் காரணம் ஆண்டாள் மட்டும்தானா?

இந்தியா பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் வாழ்ந்துவரும் மதச் சார்பற்ற நாடு. எவரும் எந்த மதத்தினையும் சார்ந்து வாழலாம். எல்லோருக்கும் பேச்சுரிமை உண்டு. இங்குதான் சிக்கல் எழுகிறது.

இருக்கும் பேச்சுரிமை என்பது பிறரைக் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். எந்த மதத்தினையும் இகழ்தல் என்பது இல்லாமல் இருக்க வேண்டும். எந்த கடவுள் நம்பிக்கையையும் தூற்றுதல் இல்லாமல் இருக்க வேண்டும்.

ஆனால் இங்கு காலம் காலமாக ஒரு குறிப்பிட்ட மதம் மட்டும் பொதுவெளியில் பகுத்தறிவு எனும் பெயரில் காயப்படுத்தப்பட்டுக்கொண்டே இருந்து வருகிறது. காயப்படுத்துபவர்கள், எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்களோ அதே கண்ணோட்டத்தில் பிற மதங்களைப் பார்ப்பதில்லை. பார்த்தால் என்ன பின் விளைவுகள் வரும் என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால் இவர்கள் காயப்படுத்தும் மதம் பெரும்பான்மையினருக்கு உடையதாக இருந்தாலும், தைரியமாக காயப்படுத்துவார்கள், அதே வேளையில் மற்ற மதத்தினருடன் தோளோடு இணைந்து ‘பகுத்தறிவு” பேசுவார்கள். பகுத்தறிவு என்றால் பொதுவில் வைக்க வேண்டும், ஆனால் இவர்கள் இதனை பெரும்பான்மை உள்ள மதத்தின் மீது மட்டுமே வைக்க, வைக்க அதன் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு ‘இவர்களின் மீது கோபம் எனும் அழுத்தம் அழுந்திக் கொண்டே இருந்து வருகிறது’. கட்சி, ஆட்சி, படைபலம், என பின்விளைவுகளைக் கண்டு எதிர்க்க திறனற்று இருப்பவர்கள், வைரமுத்து போன்ற ஆட்கள் மாட்டும்போது பொங்கி எழுந்து விடுகிறார்கள். அதுமட்டுமல்ல இனிமேல் யாரும் இதுபோல் தேவையற்று எங்கள் மதம் சார்ந்த நம்பிக்கையில் தலையிடாதீர்கள் எனும் ஒரு எச்சரிக்கை மணியாகவும் இதை ஒலிக்கிறார்கள்.


சரி, வைரமுத்துவை எதிர்த்தால் மட்டும் பிரச்சனை வராதா என்றால் நிச்சயம் வராது என்ற நம்பிக்கைதான். ஏனென்றால், வைரமுத்துவிற்கு அவர் சார்ந்திருக்கும் கட்சியிலும் சரி, திரை உலகத்திலும் சரி அவ்வளவு நல்ல பெயர். அவ்வளவு பேர் அவருக்காக போராட தயாராக இருக்கிறார்கள்.

ஆக, ஆண்டாள் இன்று ஒரு கருவி, அவ்வளவுதான்.

24 September, 2017

அப்பா!



என்னை விதைத்து

நல் உரமிட்டு வளர்த்து

அவையத்துள்

முன்னம் நிறுத்தி

தந்தை மகற்காற்றும் உதவியினை

நன்று செய்தனை!

இன்னும் ஒரு பிறவியிலும்

உன் மகனாய்

நான் பிறக்க

என்ன தவம்

செய்வேன்


அப்பா!




22 January, 2017

நாங்கள் நடத்திய போராட்டம்:

நாங்கள் நடத்திய போராட்டம்:

அது நடந்தது 2006. புத்தாண்டின் தொடக்கத்தில் புதுச்சேரி அரசு அல்லோகலப் பட்டுக் கொண்டிருந்தது. ஆம், அமைச்சக ஊழியர்கள் அனைவரும் சட்டசபை எதிரில் உள்ள பூங்காவில் ஒன்று கூடி மூன்று மாதங்கள் நடத்திய மிகப்பெரும் போராட்டம்.

கொஞ்சம் பின்னோக்கி போவோம்.

புதுச்சேரியில் உள்ள அமைச்சக ஊழியர்கள் பல்லாண்டுகாலமாக வஞ்சிக்கப்பட்டு வந்து கொண்டிருந்தார்கள். அதாவது இரண்டாவது ஊதியக் குழு வரையில் நல்ல அடிப்படை ஊதியம் வாங்கி வந்தவர்கள், குறிப்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், செவிலியர்கள் ஆகிய இவர்களைக் காட்டிலும் உயர் அடிப்படை ஊதியம் பெற்று வந்தவர்கள், பின்னர் மிகவும் வஞ்சிக்கப்பட்டு, தொடர்ந்து வந்த ஊதியக்குழுவில் புறக்கணிக்கப்பட்டார்கள். அது இன்றுவரையில் தொடர்கிறது என்பது இருக்கட்டும், 2006-க்கு வருவோம். அன்றைய தேதியில்(2006), இள நிலை எழுத்தர்களின் ஊதியமானது 950 அடிப்படை ஊதியமாக இருக்க, எடுத்துக் காட்டாக - இவர்களைவிட முன்பு குறைவாக வாங்கிவந்த ஆசிரியர்கள், செவிலியர்களின் அடிப்படை ஊதியமானது, 4000, 5000 என உயர்ந்திருந்தது. இந்தச் சூழலில் புதுவை அரசனாது, ஒரு நபர்க்குழு என ஒன்றை அறிவித்து, பல பதவிகளுக்கு உயர் அடிப்படை ஊதியத்தை அமைத்து கொடுத்தது. ஆனால் அமைச்சக ஊழியர்கள் வைத்த கோரிக்கையினை தொடர்ந்து புறக்கனித்து வந்தது. அப்போது புதுவையில் இயங்கி வந்த மூன்று பெரிய ஊழியர் சங்கங்கள், திடீரென விழித்துக் கொண்டு, அமைச்சக ஊழியர்களை ஓரணியில் திரட்டி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. அதில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. கோரிக்கைகளைப் பார்த்து வியந்து போய், புதுவை மாநிலத்திலேயே முதல் முறையாக, அனைத்து அமைச்சக ஊழியர்களும் ஒன்று திரண்டு ஊழியர் சங்கங்களின் பின்னால் அணிவகுத்து நின்றோம். எங்கள் கனவுகளில் மிகை மதிப்பு அடிப்படை ஊதியம் கிடைத்துவிட்டதாக புல்லரித்து கிடந்தோம். ஆனால் நடந்தது வேறு.

 மூன்று ஊழியர் சங்கங்கள் ஒன்று கூடி நடத்திய குழுவானது, “தாழி உடைந்த கதையாக” போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்பு “வழுக்கல்” பேச்சு நடத்த தொடங்கியது. அதாவது, “அரசு நமது கோரிக்கையை பரிசீலிக்கிறேன் என்று சொல்லிவிட்டது, எனவே நாம் போராட்டத்தினைக் கலைத்து விடுவோம்” எனக் கூறியது. இதுவரையில், போராட்டம் என்றால் என்னவென்றே தெரியாத, எந்த சங்க அமைப்பிலும் இல்லாத எங்களுக்கு, இவர்களின் பதில் எரிச்சலையும், கோபத்தினையும் ஏற்படுத்தியது.

நான் அன்றிரவு போராட்ட வாசகங்கள் கொண்ட, எழுச்சி மிகு  நீண்டதொரு கவிதை வடிவிலான வாக்கியங்களை உருவாக்கினேன். மறுநாள் காலை, மூன்று ஊழியர்சங்கங்களும், ஒன்று கூடி போராட்டத்தினை விலக்கிக் கொள்வது குறித்து விவாதித்து முடிவெடுப்பது போல் சற்று தொலைவில் தனியாக நாடகம் நடத்திக் கொண்டிருந்தபோது,  நான் அங்கு கூடியிருந்த என் சக அமைச்சக ஊழியர்கள் மத்தியில், நான் எழுதிய வாக்கியங்களை வாசிக்க ஆரம்பிக்க, ஒத்தக் கருத்துடைய அனைத்து ஊழியர்களும் ஒன்று கூடி ஆதரித்து, கோரிக்கை நிறைவேறாத நிலையில் போராட்டத்தினை தொடர வேண்டும் என்று வெகுண்டெழுந்தனர்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத, அந்த மூன்று ஊழியர் சங்கங்களும், போராட்டத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து விட்டு, வெளியேறிவிட்டனர்.

நாங்கள் தலைமையில் இல்லாமல், வழி நடத்துவோர் இல்லாமல் தனித்து விடப்பட்டோம். அதைத்தான் அரசும் அவர்களும் எதிர்பார்த்தனர்.

ஆனால் “சில வேடிக்கை மனிதரைப்போல் வீழ்வோம் என நினைத்தாயோ” என நாங்கள் ஒன்று கூடி, ஒரு குழு அமைத்து, போராட்டத்தினை தொடர்ந்து நடத்துவது எனத் தீர்மானித்தோம்.

முதல்வர், துனைநிலை ஆளுனர், தில்லியில் உள்துறை அமைச்சகம் என அனைத்து நிலைகளிலும் பேச்சு வார்த்தை நடத்தி, ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு போராட்டத்தினை நடத்தினோம்.

இதில் குறிப்படத்தக்க செய்தி என்னவென்றால், எங்களில் யாருக்கும் சங்க நடவடிக்கைகள், போராட்டங்கள் ஆகியவற்றில் முன் அனுபவமே கிடையாது. எந்த சங்கத்திலும் உறுப்பினர்களும் கிடையாது. ஆனாலும் போராட்டம் ஒரு கட்டு கோப்பாக, எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியாகவே தொடர்ந்தது. எங்கள் முகங்கள், ஊடகங்களில் தெரிய ஆரம்பித்தது.

போராட்டத்தின் முடிவானது, அடிப்படை ஊதியக் கட்டமைப்பு என்பதிலிருந்து விலகி, மத்தியில் உள்ளது போல் பதவிக் கட்டமைப்பு எனும் நிலைக்கு மாற்றம் அடைந்து வெற்றி பெற்றோம். அதுவரையில், இள நிலை எழுத்தராக பணியில் சேரும் ஒருவர், பெரும்பாலும் முது நிலை எழுத்தராக ஓய்வு பெறும் நிலைதான் இருந்தது. அதனை மாற்றி, எட்டு, பதினைந்து ஆண்டுகளில் அடுத்தக்கட்ட பதவி உயர்வு கிடைக்கும் வகையில், பதவிகளை மறுசீரமைப்பு செய்து, வெற்றியடைந்தோம்.

இந்த போராட்டத்தில், எங்களுக்கு உதவ வந்த எந்த அரசியல் கட்சியினரையும் நாங்கள் அனுமதிக்கவில்லை, வேறு எந்த அமைப்புகளையும் அனுமதிக்கவில்லை. ஒரு கட்டுகோப்பான நிலையில், எங்களிடம் இருந்த நியாமான நம்பிக்கைக் கலந்த ஒற்றுமையே எங்களை வெற்றியடையச் செய்தது.

நாங்கள் போராட்டத்தில் வெற்றிபெற்றபோது, ஒரு முது நிலை அமைப்பாளர் கூறிய கருத்து இதுதான் –

“போராட்டத்திற்கு எவ்வளவு பேரை ஆதரவுக்குக் களத்தில் கொண்டுவருகிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அவர்களுக்கு சிறு காயமும் (பாதிப்பும்) இல்லாமல், போராட்டத்தில் இருந்து வெற்றியுடன் வெளியேற்ற வைப்பதும் முக்கியம்”

இதுதான் சத்தியமான உண்மை. இது எந்த காலத்திற்கும், எந்த பொதுவான எழுச்சி மிகு போராட்டத்திற்கும், பொருந்தக் கூடியது.

இது தற்போதைய ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கும் பொருந்தும்.


[அது சரி, உங்கள் போராட்டக் குழு இப்போது என்னாயிற்று எனக் கேட்கிறீர்களா? அது தற்போது இன்னொமொரு “சங்கமாக” வடிவம் மாறிவிட்டது. என்னைப் பொருத்தவரையில், தவறான, நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை முன்வைத்து ஊழியர்களின் நாக்கில் தேன் தடவக்கூடாது என்பதில் தெளிவாக இருந்ததால், அச்சங்கத்தினை விட்டு வெளியில் வந்து, நீண்ட நெடு ஆண்டுகள் ஆகிவிட்டன. சட்ட சபை எதிரில் உள்ள பூங்கா இப்போது பூட்டு போடப்பட்டு, எந்த போராட்டத்திற்கும் அங்கு அனுமதி கிடையாது].

06 December, 2016

கண்ணுறங்கு மகளே கண்ணுறங்கு




கண்ணுறங்கு மகளே கண்ணுறங்கு
கால மகள் மடிமீது கண்ணுறங்கு
விண்ணுலகம் செல்வதற்கு கண்ணுறங்கு
விளையாடும் அலையோரம் கண்ணுறங்கு


இன்னுமொரு பெண் இதுபோல் பூமியிலே
இனி பிறக்கப் போவதில்லை கண்ணுறங்கு
எண்ணமெல்லாம் தமிழ் மக்கள் என்றவளே
எழிலாகத் துயில் கொண்டு கண்ணுறங்கு


வற்றியதோர் காவிரியின் கரையெல்லாம்
வளமாக்க வந்தவளே கண்ணுறங்கு
கட்டியதோர் முல்லையணை நீர் கிடைக்க
களம் புகுந்து வென்றவளே கண்ணுறங்கு


ஆறாது துயர்கொண்டு அழுகின்ற மக்களெல்லாம்
மாறாதா காதலினால் மனமுருகி வேண்டுவதைக்
கேளாத செவிகொண்டு கண்மூடி கிடப்பவளே
மீளாத துயில் இதுதான் கண்ணுறங்கு கண்ணுறங்கு
  

பற்றியதோர் கையின்றி தவிக்கின்ற குழந்தைகள்போல்
திக்கறியா மக்களுக்கு திசைகாட்ட வேண்டுமிங்கே
பெற்றெடுக்கா பிள்ளைகளைக் கொண்டவளே பெருமகளே
பிறப்பெடுத்து மீண்டும் வர கண்ணுறங்கு கண்ணுறங்கு


25 November, 2016

மூன்றாவதாக தொலைந்து போனவன்



புதுச்சேரியில் உள்ள மோதிலால் நேரு தொழில் நுட்பக் கல்லூரியில், வணிகவியல் பட்டயக் கல்வி 1978-79 தொகுப்பில் பயின்ற நாங்கள் மொத்தம் 30 பேர். முப்பது பேரில் முதலில் தொலைந்து போனவன் சடகோப இராமானுஜன். இருபத்தைந்து வயதிற்குள் தன்னைத்தானே தொலைத்துக் கொண்டான். அடுத்து, ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போனவன், பச்சையப்பன். அவனைத் தொலைத்தது தொடர் குடி எனும் மது. முதலாமவன் தொலைந்தபோது, எங்களுக்கு வருத்தம் இருந்தது. இரண்டாமவன் தொலைந்தபோது, வருத்தமும் சற்று வெறுப்பும் இருந்தது. ஆனால் நேற்று (24.11.16) அதிகாலை மூன்றாவதாக ஒருவன் தொலைந்து போனான். அவன் பெயர் சுந்தரராஜன். கோத்தாரி சுகர் & கெமிகல், அரியலூர் நிறுவனத்தில் பணிக்குழு மேலாளர் (Personnel Manager) ஆக பணிபுரிந்து வந்தவன். விடியற்காலையில் ஏற்பட்ட மாரடைப்பு அவனைத் தொலைத்து விட்டது. பணிக்கு தானக சென்றவன், நேற்று புதுச்சேரிக்கு “அதுவாக” கொண்டுவரப்பட்டான். இன்று காலை அவன் உடலை எங்கள் நண்பர்கள் குழு ஒன்றுகூடி தொலைத்து விட்டது. இனி அவன் புகைப்படங்களில் மட்டுமே சிரித்துக் கொண்டிருப்பான். எங்கள் குழுவில் விரைவில் (22 வயதில்) திருமணம் நடந்தது அவனுக்குத்தான், அதுபோல் விரைவில் இயற்கையாய் சென்றவனும் அவன்தான்.


முதல் இரண்டுபேர் தொலைந்துபோனதில் ஏற்படாத வருத்தமும் பயமும் இப்போது இவன் மூன்றாவதாக தொலைந்தபோது எங்களுக்கு ஏற்பட்டு விட்டது. நன்றாக பேசிக் கொண்டிருந்தவன், நடையைக் கட்டிவிட்டான். எங்களுக்குள் பேசிக் கொண்டோம். வயது 50-க்கு மேல் ஆகிவிட்டாலே, நடைகட்ட வேண்டிய காலம் என்பதை அவனின் மறைவு எங்களுக்குள் ஏற்பட்டுவிட்டது. எங்களின் நண்பர்களில் ஒருவன் சொன்னான், “நண்பா, இனிமேல் யாரிடமும், அவன் பகைவனாக இருந்தாலும் வெறுப்புக் காட்டப்போவதில்லை, வாழ்க்கை அவ்வளவுதான், இனிமேல் மறுபடியும் பிறக்கவா போகிறோம், அப்படியே பிறந்தாலும் யார் எங்கே பிறக்கப்போகிறோம் என்று தெரியாது”. யதார்த்தமான உண்மை. மூன்றாமவனின் பிரிவு எங்களை வேதாந்தி ஆக்கிவிட்டது. மெல்ல கலைந்து பிரிந்தோம். அடுத்து நான்காவதாக தொலையப்போவது யார் என்று தெரியவில்லை. கணக்கில் நானும் இருக்கலாம். 

06 August, 2016

காமராசர் - யதார்த்த மனிதரின் சிந்தனைகள்

மதம் மற்றும் சாதிகள் தொடர்பாக   பெருந்தலைவர் காமராசரின் கருத்துக்களை வானவில்-67வது இதழில் படித்ததை பகிர்ந்துள்ளேன்.


27 July, 2016


முதலாம் ஆண்டு நினைவு நாள்


என்னை நான் அறிய
எனக்குள்
கனவுகளை விதைக்கச்
சொன்னவரே
உம்மை
வணங்குதல்
எம் பேறு 

15 July, 2016

காமராசர்


சின்ன குழந்தைகளுக்கு - முதலில்

உண்ண உணவு அளியுங்கள் - பிறகு

எண்ணும் எழுத்தும் கற்பிக்கலாம் - என்ற

யதார்த்தவாதியின் பிறந்த நாள்




28 July, 2015

அப்துல் கலாம் - கண்ணீர் அஞ்சலி





அக்னிச் சிறகு
      ஓய்ந்து விட்டதா?

அதன் சுவாசம்
      நின்று விட்டதா?

கடமையைச் செய்வதே
      தன் கடமை என்ற
      பாரதத் தாயின்
      தலைமகன்
      தன் மூச்சை நிறுத்திக்   
      கொண்டாரா?

ஏவுகணைத் தந்தை
      ஓய்வெடுத்துக் கொண்டாரா?

கனவு மெய்ப்பட வாழ்ந்தவர்
      கனவாகிப் போனாரா?

வல்லரசு தேசம் காண
      கனவு காணச் செய்தவர்
      காணாமலேயே கண்ணுறங்கி விட்டாரா?

மதம் கடந்த மனித நேயன்
      உயிர் கடந்து போனாரா?

தமிழன் தலைதனைத்
      தரணியில் நிமிர செய்த
      தலைமகன்
      தலை சாய்ந்து போனாரா?

கேள்விகளைக் கேள்செவி கொண்டு
      கேட்டு பதிலுரைத்த
      வேள்வித் தீ அணைந்து போனதா?


எல்லா கேள்விகளுக்கும்
      ‘இல்லை’ எனும் பதிலை
      யாரேனும் சொல்லுங்கள்

கனவென விழித்தெழுந்து
      ஓடிப் போய்
      அவர் கை குலுக்கி வந்திடுவேன்.

எதனையோ கனவுகள்
      மாணவர் நெஞ்சங்களில்

எத்தனையோ கேள்விகள்
      எல்லோர் மனங்களிலும்

விடை கிடைக்க காத்திருக்க

      சொல்லாமல் கொள்ளாமல்

விடை பெற்று சென்றதென்ன
      திருமகனே


யதார்த்த மனிதனே
      துவளும் நெஞ்சங்களுக்கு
      தூண்டா விளக்கே

கனவின் கருப் பொருளை
      மெய்ப்பட உரைத்த மேதையே

ஆழிசூழ் உலகை
      அன்புடன் நேசித்தாய்

வாழும் பூமி
      வளம் காண யோசித்தாய்

அதனால்தான்
      உமது இறுதி மூச்சிலும்
      மாணவர்கள் மத்தியில்
      புவி பற்றி வாசித்தாய்


ஆனால் யோசித்துப் பார்க்காமல்
      கால தேவன் உன்னை
      யாசித்து கொண்டு சென்றான்


அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன்
      அப்துல் கலாமே

நான் யதார்த்தத்தை உணருகின்றேன்
      உங்கள் பாதத்தில் தலைவைத்து
      கண்ணீர் பூக்களைச் சொரிகின்றேன்

வேறென்ன செய்ய முடியும்

      விம்மி அழுவதைத் தவிர.

21 February, 2015

உலகத் தாய் மொழி தினம் - தாய் மொழி என்பது என்ன?



            இன்று (21.02.2015) உலகத் தாய் மொழி தினம். இது பற்றியப் பதிவுகள் ஏதேனும் உள்ளனவா என்று வலை திரட்டிகளில் (தமிழ்மணம், தேன் கூடு) தேடினேன். எதுவும் கிடைக்கவில்லை. சரி நாமே அது பற்றி ஒரு பதிவு போடுவோம் என்று முடிவிற்கு வந்தேன்.

            தாய் மொழி என்பது என்ன? என்பதில் தொடங்குவோம். ஒரு குழந்தை தனது முதல் வார்த்தையினைத் தாயிடமிருந்தே பெறுகிறது. அதுஅம்மாஎன்பதாகத்தான் இருக்கும். அம்மா என்பது தமிழ் மொழியாக இருந்தாலும் உலகில் பெரும்பாலான மொழிகள் அனைத்திலும் அம்மா என்பதும்எனும் ஓசையின் தொடர்புடனேயே இருக்கிறது. வேறொரு வலைப்பதிவிற்காக அண்டம் பற்றிய செய்திகளைத் தொகுத்தபோது, அண்டம் என்பது ஓசை இல்லாதது என முன்பு கூறியிருந்த அறிவியலாளர்கள், தற்போது, அண்டமானதும்எனும் மெல்லிய ஓசையுடன் இருப்பதாகக் கூறியுள்ளனர். எனவே தாயிற்கும் அண்டத்திற்கும் படைப்பில் தொடர்புண்டு எனக் கொள்வோம்.

      ஒரு மனிதன் எத்தனை மொழிகளில் புலமைப் பெற்றிருந்தாலும், அவனது சிந்தனை என்பது எப்போதும் அவனது தாய்மொழியில்தான் இருக்கும். அதாவது அவன் எந்த மொழியுடன் வளர்ந்து வருகின்றானோ அந்த மொழியில்தான் அவன் சிந்தனையின் செயல்பாடு இருக்கும். அதாவது, பிறந்த மொழியைக்காட்டிலும் அவன் பேசி வளர்ந்த மொழிதான் அவனுக்குச் சிந்தனை மொழியாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு தமிழ் பேசும் தாய்க்குப் பிறந்த குழந்தையின் தாய் மொழி எப்பொழுதும் தமிழாகத்தான் இருக்கும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. ஏனெனில், அந்தக் குழந்தை பிறந்த உடனேயே அல்லது அதற்கு புரிந்துகொள்ளும் காலம் வருவதற்குள்ளாகவே, அது வேறொரு மொழி பேசுபவரிடம் வளரத் தொடங்குமானால், அது நிச்சயம் தமிழை மறந்து போவதுடன், தமிழ் தன் தாய்மொழி எனும் உணர்வே இல்லாமல் வாழத் தலைப்படும். அப்போது அதன் சிந்தனை மொழி என்பது அது எங்கு வாழத் தலைப்பட்டதோ அதுவாகத்தான் இருக்கும்.
           
            இப்பொழுது ஒரு கேள்வி எழுகிறது. தாயின் மொழியும் சிந்தனை மொழியும் ஒன்றா? பல்வேறு சூழல்களில் அது நிச்சயம் வேறு வேறாக இருக்கலாம். அப்படி எனில் தாய்மொழிக்குச் சிறப்பா அல்லது சிந்தனை மொழிக்குச் சிறப்பா?
           
            தாய்மொழியே சிந்தனை மொழியாக இருக்கும்போது அதற்கு சிறப்பு மிக அதிகம். தாயின் மொழி வேறாக இருந்து ஒருவருக்கு சிந்தனை மொழி வேறாக இருக்குமானால், அந்த சிந்தனை மொழிதான் அவருக்குத் தாய் (வளர்ப்புத்தாய்) மொழி எனலாம். அதனால்தான் தாய்மொழிக் கல்வி வேண்டும் என்கிறோம். [இது பற்றி ஒரு விரிவான பதிவினைப் பின்னர் பதிவிடுகிறேன்].
           
            உலகத் தாய்மொழித் தினத்தில் நம் தாய் மொழியை வணங்குவதோடு, உலகின் அனைத்து தாய் மொழியாளருக்கும் நம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.