06 September, 2014

எலக்கணம் புரியவில்ல


வணக்கமுங்க,

      தமிழ் பெருமக்கள், தமிழ் ஆசிரியருங்க, எல்லோருக்கும் வணக்கமுங்க.

      நான் ஒரு ரொம்ப சாதாரண நாட்டுப்புறத்தானுங்க. எங்க பாட்டன் முப்பாட்டன் எல்லோரும் தமிழ்தாங்க பேசனாங்க. நானும் தமிழ்தாங்க பேசறேன். எனக்கு வேற எந்த மொழியும் தெரியாதுங்க. என்னைப் பொதுவா கிராமத்தான்னு சொல்லுவாங்க.

      பெரியவங்க உங்களுக்கு ஒரு விண்ணப்பமுங்க. எனக்கு மனசுல பட்டதெல்லாம் இங்க சொல்லனும்னு ஆசைப்படறுனுங்க. ஏதாவது தப்பா சொன்னா மன்னிச்சிடுங்க.

      நான் கிராமத்துல படிச்சவனுங்க. ஆனாவ மணல்ல எழுதி எழுதி பழகி படிச்சவனுங்க. எப்படியோ தட்டுத்தடுமாறி பள்ளிக்கூட படிப்ப முடிச்சிட்டுனுங்க. அந்த காமராசர் மகராசன் மதியானம் சோறு போட்டாருங்களா, அதனால எங்கப்பாரு என்னைய பள்ளிக்கூடம் அனுப்பிவச்சி படிக்க வச்சாருங்க, இல்லன்னா நானும் தற்குறியாத்தான் இருந்திருப்பேனுங்க.

      நான் படிக்கிற காலத்துல, தமிழ், கணக்கு, விஞ்ஞானம், சரித்திரம், பூகோளம் எல்லாத்தையும் தமிழ்லதாங்க படிச்சேன். ஏபிசிடி சொல்லித்தர மட்டும் தனி வாத்தியார் உண்டுங்க.

      எங்க பள்ளிக்கூடத்துல சுமாரா படிக்கிற பசங்கள்ள நானும் ஒருத்தனுங்க. எல்லா பாடத்துலயும் நெறைய மதிப்பெண் வாங்குவங்க. ஆனா எவ்வளவு நல்லா எழுதினாலும், தமிழ்ல மட்டும் கொஞ்சமாத்தான் மதிப்பெண் போடுவாங்கங்க. கேட்டா, தப்பில்லாம, எலக்கண சுத்தமா எழுதினாத்தான் மதிப்பெண் உண்டுன்னு சொல்லுவாங்க. மத்த பாடத்திலேயும் இதேமாதிரிதான் எழுதுவேன், ஆனா அவங்க நெறைய மதிப்பெண் போடும்போது, தமிழ்ல மட்டும் ஏன் போடமாட்டேன்றாங்கன்னு தெரியாமலேயே படிச்சேனுங்க.

      தமிழ்ல உரைநடை, செய்யுள்னு சொன்னதெல்லாம் படிச்சிடுவேனுங்க. ஆனா அந்த இலக்கணம் தானுங்க எனக்கு கொஞ்சமும் வராதுங்க. வாத்தியார் ஒழுங்கா சொல்லித்தரலியா, இல்லா நான் ஒழுங்கா படிக்கலியான்னு இன்னைக்கு வரைக்கும் எனக்கு கொழப்பமா இருக்குங்க. நான் பரவாயில்லிங்க. நல்லா படிச்ச இளங்கோ, கந்தசாமி இவங்கக்கூட தமிழ்ல முழு மதிப்பெண் வாங்க மாட்டாங்கங்க. கேட்டா, தமிழ்ல முழுமதிப்பெண் போடக்கூடாதுன்னு சட்டம் இருக்குன்னு வாத்தியார் சொல்லுவாருங்க.

      சரி, நான் சொல்லவந்தத சொல்லிடுறேன். அதான் இலக்கண பாடத்தைப் பத்திதான். நான் படிச்சதைப் பத்திதான். தமிழ்ல அஞ்சு இலக்கணம் உண்டாம். எழுத்து, சொல்லு, பொருளு, யாப்பு அப்புறம் அணி. ஆனா உரைநடைக்குன்னு ஏனுங்க இன்னும் இலக்கணம் இல்ல. இப்ப ஏதாவது உரைநடை இலக்கணும்னு புதுசா கொண்டுவந்திருக்கிங்கலா?. 

      நான் படிச்சது, எனக்குள்ள கொழப்பம் எல்லாத்தையும் சொல்லிடறுனுங்க.

எழுத்திலக்கணம்:
      எழுத்துன்னா, உயிர் எழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய் எழுத்து அப்புறம் அந்த மூணு புள்ளி வைப்பாங்களே அந்த ஆயுத எழுத்து. அவ்வளவுதான் எனக்குத் தெரியும். அதை எப்படி எழுதனும்னும் தெரியும். ஆனா இதெல்லாம் இல்லாம சார்பெழுத்துனு சொல்லுவாங்க பாருங்க அங்கதான் எனக்கு கொழப்பம் வரும். உயிர்மெய்யும் ஆயுதமும் சார்பெழுத்துன்னு சொல்லுவாங்க. அதுக்கு எழுத்தெல்லாம் இருக்கும். ரொம்ப சரி. ஆனா, இந்த அளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், குறுக்கம் இதுக்கெல்லாம் எழுத்தே இருக்காது. ஆனா அத புரிஞ்சிதான் படிக்கனும்னு தமிழ் வாத்தியார் சொல்லுவார். அதுக்கு சொல்லித்தர உதாரணம் ரொம்ப கொழப்பமாவும் இருக்கும், ரெண்டு மூனு உதாரணத்திற்கு மேலயும் இருக்காது. சொன்னதையே தான் திரும்ப திரும்ப சொல்லுவாங்க. அளபடைக்கு எடுப்பதூஉம், கொடுப்பதூஉம் அப்படின்னு வர திருக்குறளத்தான் சொல்லுவாங்க. நான் அதுமாதிரி ஏதாவது எழுதினா, சொல்லுக்கு நடுவுல உயிர் எழுத்து வரக்கூடாதுன்னு வாத்தியார் தப்பு போடுவாறு. ஆனா திருக்குறள்ள மட்டும் வந்தா சரின்னு சொல்லுவாறு. இன்னிக்கிவரைக்கும் சார்பெழுத்துன்னா சரியா புரியலிங்க.

சொல் இலக்கணம்
      சொல்லிலக்கணம் கொஞ்சம் புரிஞ்ச மாதிரியும் இருக்கும், புரியாத மாதிரியும் இருக்கும். பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல், வினையைக் குறிக்கும் சொல் வினைச்சொல். இது மனசுல பதிஞ்சிடுச்சி. ஆனா இந்த உரிச் சொல், இடைச் சொல் எனக்கு இன்னமும் புரியலிங்க. வேற்றுமை உருபு, உவமை உருபு இதெல்லாம் வந்தா இடைச்சொல் அப்படின்னு சொல்லிக்குடுத்தாங்க. சால, நனி, கூர், கழி, தவ  வந்தா உரிச்சொல் அப்படின்னும் சொல்லிக்குடுத்தாங்க. ஆனா, விளக்கமாவும் தெளிவாவும் சொல்லித்தரலிங்க. வேற்றுமையைப் பத்தி சொல்லித்தரும்போது, ஐ, ஆல், கு, இன், அது, கண் இதை மட்டும் இரண்டிலிருந்து ஏழுவரைக்கும் ஞாபகம் வச்சிக்க சொன்னாங்க. பகுபத இலக்கணத்தில, பகுதியும் விகுதியும் மட்டும்தான் புரிஞ்சிதுங்க, இந்த இடை நிலை, சந்தி, சாரியை அதெல்லாம் என்னென்னு இப்பவரைக்கும் புரியலிங்க. அது பரவாயில்லிங்க, இந்த கிறு, கின்று, ஆநின்று இதை எதுக்கோ ஞாபகம் வச்சிக்க சொன்னாங்க, அது எதுக்குன்னு இன்னமும் தெரியலிங்க. அதனால, தேர்வுல எழுதும்போது, எல்லாத்தையும் மாத்தி மாத்தி எழுதி தப்பு வாங்கிட்டேனுங்க.

பொருள் இலக்கணம் 
      பொருள் அப்படின்னு சொன்னதும், பணம், செல்வம் அப்படின்னு நெனெச்சி இருந்தேனுங்க. ஆனா, அகம், புறம் அப்படின்னு சொல்லிக் கொடுத்தாங்க. ஒழுக்கமா இருக்கிறது எப்படி, வீரமா இருக்கிறது எப்படி, இது இரண்டும்தானுங்க, அகமும் புறமும் சொல்ற இலக்கணம். அப்புறம் ஏனுங்க அப்படி குழப்பனாங்க. வஞ்சித்தினை, முல்லைத் தினை அப்படின்னு என்னென்னமோ சொல்லுவாங்க. வினைத் தெரியும் அது என்னங்க தினை. கம்பு, கேழ்வரகு மாதிரி அது ஒரு தானியமாங்க?  

யாப்பு இலக்கணம்
      இது உங்கள மாதிரி இருக்கிற பெரியவங்களுக்கு தேவையான இலக்கணங்க. செய்யுள் எழுதறதப்பத்திய இலக்கணங்க. நாங்கெல்லாம் தருமி மாதிரி யாராவது எழுதி வச்ச செய்யுள படிக்கிற ஆளுங்க. எங்களுக்குப்போய், எழுத்து, அசை, சீர், அடி, தளை, தொடை அப்படின்னு, மருத்துவம் படிக்கிற புள்ளைங்களுக்கு உடல் உறுப்பை சொல்லித்தர மாதிரி சொல்லி பயமுறுத்திட்டாங்க. வாக்கியத்தையே ஒழுங்கா தப்பில்லாம எழுதத்தெரியாத எங்களைச் செய்யுள் எழுதச் செய்து புலவராக்கற நல்ல முயற்சிங்க. இத ஒழுங்கா படிச்சிருந்தா, இன்னைக்கு தமிழ் நாட்டுல எல்லோருமே புலவராத்தானுங்க இருந்திருக்கனும். ஆனா ஏங்க அப்படி இல்ல?

அணி இலக்கணம்
      எனக்கு புடிச்ச இலக்கணங்க. பத்துவகையான அணி இருக்குதுன்னு படிச்சேனுங்க. ஒவ்வொரு அணிக்கும் ஒரு உதாரணம் சொன்னா போதுங்க. மதிப்பெண் போட்டுடுவாங்க. தூய மத்தொலி, வாரேல் என, தேவரனையர் கயவர், செஞ்ஞாயிறு, முகத்தாமரை, ஆடிக்குடத்தடையும். இதெல்லாம் ஒவ்வொரு அணிக்கும் ஒரு உதாரணம். சரிதானுங்களா? நான் படிக்கும்போது, என்ன உதாரணம் சொன்னாங்களோ அதே உதாரணம் தாங்க இப்பவும் புள்ளைங்க படிக்கிற பாடத்தில இருக்கு.  புதுசா எதுவும் இல்லிங்களா?

மறுபடியும் வணக்கமுங்க.

      இதைக் கொஞ்சம் கேளுங்க. நமக்குதான் இலக்கணம் புரியல. நம்ப புள்ளைங்களுக்காவது புரியட்டும் அப்படின்னு, கிராமத்த விட்டு வெளிய வந்து, நகரத்துல படிக்க வச்சேனுங்க. காலம் மாறிப்போச்சுங்க. நம்ம பேச்ச யாரும் கேக்கலிங்க. ஆனாலும், மொழிப் பாடத்தைத் தமிழ்லதான் படிக்கனும்னு நான் கொஞ்சம் அழுத்தமா சொல்லிட்டதால, தமிழை மொழிப்பாடமா எடுத்து புள்ளைங்க படிச்சிதுங்க. வகுப்புல மதிப்பு பட்டியல் தருவாங்க இல்லிங்கலா, அதுல பத்து இல்ல பதினொன்னு தாங்க வரும். ஏன்னு கேட்டா, எல்லா பாடத்திலேயும் நெறைய மதிப்பெண், ஆனா மொழி பாடத்துல, தமிழில்லாத மொழி எடுத்த மத்த புள்ளைங்க மதிப்பெண் அதிகம் வாங்கிட்டதாகவும், தமிழ்ல முழு மதிப்பெண் எடுக்க முடியல, அப்படின்னு சொன்னிச்சிங்க. இது பெரிய தேர்விலேயும் தொடர்ந்திடுச்சிங்க. மேல்நிலை வகுப்புல மத்த மொழிப்பாடம் படிக்கிற புள்ளைங்களுக்கு இரண்டு ஆண்டுக்கும் சேர்த்து ஒரே ஒரு புத்தகம்தானாம். பத்தாம் வகுப்புவரை அந்த மொழியை படிக்காத புள்ளைங்க கூட பதினொன்னாம் வகுப்பில் அந்த மொழியை படிக்கமுடியுமாம்,  ஆன தமிழ் படிக்கிற புள்ளைங்களுக்கு, செய்யுள், உரை நடை, இலக்கணம், துணைப்பாடம் அப்படின்னு ஏகப்பட்ட சுமையாம்.  நெறைய மதிப்பெண் எடுக்க முடியலன்னு எம் புள்ளைங்க எம் மேல இப்பவும் கோவமாவே இருக்காங்க.

      ஐயா, தமிழ் எம் மொழிதாங்க. எனக்கு எழுத படிக்கத் தெரியனுங்க. அதையும் தப்பில்லாம எழுத படிக்கத் தெரியனுங்க. தமிழ் நாட்டுல எல்லோரும் புலவரா இருக்கறதைவிட தமிழரா இருக்கிறது முக்கியமுங்க. தொல்காப்பியம், நன்னூல், தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை அப்படின்னு எத்தனை இலக்கண நூல் வேண்டுமானாலும் இருக்கட்டுங்க. ஆனா, அதுல எழுத்தும் சொல்லும் தவிர மத்ததெல்லாம் செய்யுளுக்கு முக்கியமுங்க. ஆனா இரண்டு நூற்றாண்டா புழக்கத்திலிருக்கிற, உரை நடைக்கு ஏங்க இன்னமும் இலக்கணம் எழுதல நீங்க?

      நடைமுறை வாழ்க்கையோடு இணைந்த தமிழ், உரை நடை தமிழ்தானுங்க. அப்பாவுக்கு கடிதம் எழுதறதிலிருந்து, வேலைக்கு மனு போடறவரைக்கும் உரை நடைத் தமிழ் தானுங்க தேவைப்படுது. நம்ம தமிழ் புள்ளைங்க இன்னைக்கு நல்ல படிச்சி நல்லா வாழறது பெருமையாத்தானுங்க இருக்கு. ஆனா தமிழைத் தப்புத்தப்பா எழுதுவதைப் பார்க்கும்போது கவலையா இருக்குதுங்க. புள்ளிவச்ச எழுத்து எங்கு கூடுதலா போடனும், போடக்கூடாது அப்படின்னு தெரிய மாட்டுதுங்க. இரண்டு சுழி ன்-க்கும் மூணு சுழி ண்-க்கும் வித்தியாசம் தெரியாம எழுதுதுங்க. சின்ன ல- வுக்கும் பெரிய ள- வுக்கும் வித்தியாசம் தெரியலிங்க. தகராறுவுக்கு சின்ன ர-வா பெரிய ற-வா அப்படின்னு கேட்டா, தகராறு சின்னதா இருந்த சின்ன - ர, பெரிசா இருந்தா பெரிய – ற, அப்படின்னு கிண்டல் பன்னுதுங்க. எல்லாம் இந்த படப்பொட்டியில பட்டிமன்றம் பார்த்து பேசற பேச்சுங்க.

ஐயா, இந்த நாட்டுப்புறத்தான் சில செய்தி சொல்லலாமுங்களா?


v  இலக்கணம் கசப்பா இருக்கக் கூடாதுங்க. எளிமையா புள்ளைங்களுக்கு எப்போதும்  புரியற மாதிரி பாடம் வைங்க.

v  இலக்கணத்தில் இருக்கிற எல்லா நுணுக்கங்களையும் பள்ளிப்பாடத்திலேயே தினிக்க நினைக்காதிங்க.

v  இலக்கண பாடத்திலிருக்கிற பழைய உதாரணங்களைத் தூக்கிப் போட்டுவிட்டு, புதுசா உதாரணங்களை உருவாக்கிக் கொடுங்க.

v  எல்லோரையும் கவிஞனா ஆக்க முயற்சிப்பதைவிட, நல்ல தமிழ் மாணவன் உருவாகி வெளியில் வர முயற்சி செய்யுங்க.

v  தமிழைத் தப்பில்லாம எழுதப்படிக்க பாடத்திட்டம் வையுங்க.

v  இலக்கணம் ஐந்துவகை என்பதை ஆறாக்கி, உரை நடையை செம்மையாகவும், எளிதாகவும் செய்திட, உரை நடை இலக்கணம் என்ற புதிய இலக்கணத்தை உருவாக்கி அதைப் பள்ளியில் பாடமா வையுங்க.

போயிட்டு வரட்டுங்களா?

நம்பிக்கையோடு நாட்டுப்புறத்தான் என்கிற கிராமத்தான்



அடுத்து…. முயன்றால் கவிதை

No comments:

Post a Comment