23 August, 2014

கால வகையினானே-2,



      தனித்தமிழ் ஆர்வலர் திருமிகு அருளி அவர்களின் சொற்பொழிவினைக் கேட்கும் வாய்ப்பு இருபது-முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எனக்குக் கிடைத்தது. ஆங்கிலச் சொற்களில் பலவற்றிற்குத் தமிழ்தான் வேர் என்று கூறினார்.  பார் (bar) எனும் ஆங்கிலச் சொல்லின் வேர்ச்சொல் தமிழ் என்றும் கூறியவர், அதனை விளக்கிய விதம் இன்னும் என் நினைவில் இருக்கிறது.

      “BAR என்பதற்கு மது அருந்தும் இடம் என்றும், கம்பி அல்லது (இரும்புத்)தடி (IRON BAR) என்றும் ஆங்கிலத்தில் பொருள் உண்டு. தொடக்கக்காலத்தில் மது விற்பனைச் செய்யும் இடத்தில் மது அருந்த வருவோர்  மதுமயக்கத்தில் எவ்விதக் குழப்பமும் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக, குறுக்காக இரும்பினால் ஆன தடியைக் கட்டிவைத்து, உள்ளே புகாமல் தடைசெய்தனர். இரும்புத்தடி (IRON BAR) கொண்டு தடைசெய்யப்பட்ட இடம் என்பதால் அது BAR என அழைக்கப்பட்டது. இரும்புத்தடிக்கு, தமிழில் கடப்பாரை எனும் பெயர் வழக்கில் உண்டு. ஔவையார் தமது நல்வழியில் இனியவைக் கூறல் குறித்து கூறுவது -

            வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்
            பட்டுருவுங் கோல்பஞ்சில் பாயாது-நெட்டிருப்புப்
            பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
            வேருக்கு நெக்கு விடும்.

      இங்கு நெட்டிருப்புப் பாரை என்பது, இரும்பினால் ஆன கடப்பாரை என்பது அறிந்த உண்மை. இந்த இருப்புப்பாரை எனும் சொல்தான், IRON BAR என ஆகியது. எனவே பார்(BAR) எனும் ஆங்கிலச் சொல்லிற்கு வேர்ச்சொல் தமிழின் பாரை ஆகும்”. இது திருமிகு. அருளி அவர்கள் வழங்கிய தமிழ் அகழ்வு.

      தற்போது பெரிதும் பேசப்பட்ட வேட்டிக்கு வருவோம். நீன்டு நெய்த ஆடை வெட்டப்படுவதால் வேட்டி எனப்பெயர் பெற்றது என்று என் தமிழாசிரியர் எனக்குக் கற்பித்தார். அது சரி என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆனால், ஒரு வார இதழில் வேட்டி என்பது வேஷ்டி எனும் வடசொல்லின் தமிழ்ப்பெயர்ப்பு என்று ஒருவர் எழுத, அதனை மறுத்து மற்றொருவர் வேடு என்பதற்கு மறைத்தல் என்று பொருள். தன் அங்கத்தை மறைத்து கட்டப்பட்ட ஆடையானதால் அது வேடு எனவாகி பின்னர் வேட்டி எனவாகிற்று என்று எழுதியிருந்தார். அதுவும் முற்றிலும் சரியே. எனவே வேஷ்டி என்பதின் வேர்ச்சொல் வேட்டி எனும் தமிழ்ச்சொல்லே.

      சென்ற மாதம், திருச்சியில் நடைபெற்ற ஒரு சொல்லரங்கிற்குச் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது. அது வேறொரு துறையைச் சார்ந்த, பொதுவாக கடவுள் மறுப்புக் கொள்கையாளர்களால் ஒதுக்கப்படும்,   ஒரு துறையைச் சார்ந்த சொல்லரங்கு. அதுபற்றி இங்கு எழுதவில்லை. ஆனால் அதில் உரையாற்றிய ஒருவர் ‘பசுவை பா பா (BA BA) என்று கூப்பிட்டால்தான் வரும். பா பா (PA PA)  என்று கூப்பிட்டால் ஏறெடுத்தும் பார்க்காது, ஆனால் தமிழில் ப (PA) உண்டே தவிர ப (BA) என்ற எழுத்து இல்லை. ஆனால் சமஸ்கிருத  மொழியில் ஒலிக்கேற்ப நான்கு ப உண்டு” என்றார். அவர் சமஸ்கிருதத்தைப் போற்றிப் புகழ அதைக்கூறியிருக்கலாம். அதற்காக அவர் தமிழைக் கையிலெடுத்திருக்கலாம்.

      ஆனால் அவர் சொன்னதில் ஒரு உண்மை என்னவெனில், நாம் பேச்சு மொழியில் ஒலிக்கும் எல்லாப் பதத்திற்கும் வரிவடிவில் எழுத்துக்களைக் கொண்டிருக்கவில்லை என்பது உண்மையே. இன்றைய அறிவியல் மற்றும் பொருளியல் வளர்ச்சியில், புதிது புதிதாகச் சொற்களை உருவாக்கி அதைத் தமிழாக்கிக் கொள்கிறேம். கணிணியும், பேருந்தும் இன்று எவர்க்கும் புரியும் புதியத் தமிழ் சொற்கள். இது தொல்காப்பியக் காலத்திலோ அல்லது நன்னூல் காலத்திலேயோ புழக்கத்தில் இருந்த சொற்கள் அல்ல. இன்று பேச்சு அல்லது எழுத்தில் உள்ள பெரும்பாலான சொற்கள், தொல்காப்பியக் காலத்தில் இல்லாதவையே. தமிழ் மொழிக்கே உரிய எண்களை நாம் பயன்படுத்துவதில்லை. தமிழ் அறிஞர்களைத் தவிர வேறு யாருக்கும் அது தெரியாது. ஆனால் கூர்ச்சர மக்கள் (குஜராத்தியர்கள்) தங்களது கணக்குகளை எழத தங்களது மொழியில் உள்ள வரிவடிவ எண்களையே பயன்படுத்துகிறார்கள். ஆனால் நாம் இரண்டாயிரம் ஆண்டிற்கு முற்பட்ட, பயன்பாட்டில் இருந்த தமிழ் எண்களை விட்டொழித்துவிட்டு உலகொடு ஒத்துவாழ, அரேபிய எண்களைப் பயன்படுத்துகிறோம்.

      நாம் அதே சமயம், சில ஒலிகளுக்குரிய, ஆனால் தமிழில் வரிவடிவம் இல்லாத எழுத்துக்களுக்கு, நம்மிடம் உள்ள, ஏறக்குறைய ஒத்த ஒலியுடைய எழுத்துக்களைப் பயன்படுத்துகிறோம். அது சரியான உச்சரிப்பைத் தருமா என்பது கேள்விக்குறியே. எடுத்துக்காட்டாக, மேலே குறிப்பிட்ட பார் (bar) என்பதற்கும் பார் (par) என்பதற்கும் பா எனும் வரிவடிவத்தை மட்டுமே பயன் படுத்துகிறோம். பொதுவில் நாம் சொல்லுவது என்னவென்றால், பார் (bar) எனும் சொல் தமிழே அல்ல எனும்போது, பா(ba) என உச்சரிக்க அவசியம் எழவில்லை என்பதே.

      அவசியமா இல்லையா என்பதைவிட, நம் தமிழில் அந்த ஒலிக்குறிப்பிற்கு வரிவடிவம் இல்லை என்பதுதான் உண்மை. அதுபோல், வேஷ்டி எனும் சொல்லில் ஷ் எனும் ஒலிக்குறிப்பிற்கு வரிவடிவம் தமிழில் இல்லை என்பதால், ட் எனும் வரிவடிவத்தைப் பயன்படுத்துகிறோம். வேட்டி தமிழ்ச் சொல் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால் வேட்டி என்பதும் வேஷ்டி என்பதும் உச்சரிப்பில் வித்தியாசப்படுகிறது அல்லவா?

      அங்கக் குறிப்புகள் – ஓசை – ஒலியெழுப்பல் – குரல் – குழு வார்த்தைகள் – பொது வார்த்தைகள் – ஒலி எழுத்துக்கள் – வரி எழுத்துக்கள் - சொற்கள் – மொழி – இலக்கியம் - இலக்கணம் என மொழியானது பரிணாம வளர்ச்சி அடைகிறது. சில சொற்கள் வழக்கொழிகின்றன, சில சொற்கள் வாழ்கின்றன, சில சொற்கள் புதிதாய் பிறக்கின்றன. காலத்திற்கேற்ப வரிவடிவங்கள் மாற்றம் அடைகின்றன. ஆனால் தமிழில் ஒலிகளுக்கேற்ப வரிவடிவங்களைப் புதிதாக வடிக்கவில்லை என்பதே உண்மை. தொன்றுதொட்டு வரும் எழுத்துக்களுக்கு மட்டுமே வரிவடிவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

      நம் தமிழறிஞர்களின் கருத்து என்னவெனில், புதிய அல்லது வேற்று மொழிச் சொற்களுக்கு, தமிழில் ஒலிக்குறிப்பு இல்லா எழுத்துக்களுக்கு, தமிழ்ச் சொற்களைப் புதிதாக ஆக்கம் செய்துவிட்டால் போதும் என்பதுதான். ஆக்சிஜன் என்பதை உயிர்வளி என்று மொழியாக்கம் செய்தீர்கள். நைட்ரஜன், பென்சீன், சோடியம் என்பதை எப்படி மொழியாக்கம் செய்வீர்கள் அல்லது எப்போது செய்வீர்கள். இன்று மழலைகளுக்குச் சூட்டப்படும் பெயர்களில் பெரும்பாலானவை ‘இடுகுறிப் பெயர்களாகவே’ உள்ளன. லத்தீஷ், மித்ரேஷ், லக்ஷ்மி, லோகித் இவையெல்லாம் தமிழர்கள் தங்கள் மழலைகளுக்குச் சூட்டிய பெயர்கள். அனைத்துச் சான்றிதழ்களிலும் பதியப்பட்ட பெயர்கள். இதை எப்படி மொழியாக்கம் செய்யமுடியும்.

      தமிழ் மொழியின்மேல் பற்றிருந்தால் தமிழனாக இருந்தால் நல்ல தமிழில் பெயர் சூட்டட்டும் என்று கூறும் அறிஞர் பெருமக்கள் இருக்கிறார்கள். தமிழ் நாட்டிலேயே பிறந்து, வளர்ந்த முகமதியப் பெண், நூர்ஜகான் என பெயர்க் கொண்டிருந்தால் அவர் தமிழர் இல்லை என்று சொல்ல முடியுமா? அல்லது  தமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்து தமிழ் பேசும் ஒரு கிறுத்துவ மகன் அகஸ்ட்டின் என பெயர்க் கொண்டிருந்தால் அவர் தமிழர் இல்லை என்று சொல்ல முடியுமா?

      இன்று தமிழன் என்பவன் எவ்வொரு தனி மதத்தையும் சார்ந்திருக்கவில்லை. அனைத்து மதங்களையும் உள்ளடக்கியே தமிழினம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தத்தமது மதக் கடவுள்கள், அருளாளர்கள், வழிநடத்தியோர் ஆகியோரின் பெயர்களைத் தமது பிள்ளைகளுக்குச் சூட்டி மகிழ்கின்றனர். அப்பெயர்கள் தமிழ் வழிப் பெயர்கள் இல்லை என்பதும் உண்மை. ஆனால் அவர்களைப் அப்பெயர் சொல்லித்தானே அழைக்க வேண்டியிருக்கிறது. நூர்ஜகான் என்பதை நூர்சகான், அகஸ்ட்டின் என்பதை அகசுட்டின், லத்தீஷ் என்பதை லத்தீசு, இஸ்மாயில் என்பதை இசுமாயில், ஜுலியஸ் என்பதை சூலியசு என்றெல்லாம் தமிழ் வரி எழுத்துக்களாக்கி அழைத்தால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? அது தனி மனித சுதந்திரத்தைப் பறிப்பதுபோல் ஆகாதா? அப்படி வரிவடிவாக்கி எழுதினாலும் நல்ல தமிழ்ச் சொற்களாகிவிடுமா? [எனது பிள்ளைகளுக்கு நான் நல்லதமிழில்தான் பெயர் சூட்டியுள்ளேன் – கவிநிலவன் – தென்றல்தேவி]

      இதில் உண்மை என்னவெனில், இவ்வாறான இடுகுறிப் பெயர்களை மொழியாக்கம் செய்தல் எளிதல்ல. அவை எளிதல்ல என்பதைவிட அது அவர்களின் தனிமனித உரிமையைப் பறிக்கும் செயலாகும். சங்க காலந்தொட்டு பிறமொழிக்கலப்பு என்பது வடமொழியாக மட்டுமே இருந்தது. ஆனால் இன்று உலகமொழிகளாக இருக்கிறது. மாறிவரும் உலகில் அவற்றை ஏற்க வேண்டிய நிலையும் சூழலும் உள்ளது.

      அவ்வாறெனில், சில சொற்களை மொழிபெயர்க்கலாம், சில சொற்களை ஒலிபெயர்க்கலாம். எல்லவற்றையும் மொழிபெயர்ப்பதோ அல்லது ஒலிபெயர்ப்பதோ இயலாத செயல். ஒலிபெயர்ப்பு எனும் நிலைவரும்போது, அனைத்து ஒலிகளுக்கும் தமிழில் வரிவடிவம் இல்லை என்பதே உண்மை. அதனால் தான், பிறமொழி எழுத்துக்களில் சிலவற்றை (ஜ, ஸ, ஹ, ஷ) ஒலிக்காகப் பயன்படுத்தி வருகிறோம்.

      எனது விண்ணப்பம் என்னவெனில், பிறமொழி எழுத்துக்களைப் பயன்படுத்துவதைவிட, ஏன் நாமே புதிய எழுத்துக்களைத் தமிழில் ஏற்படுத்தக்கூடாது. இவ்வாறு கருத்து சொன்னால், என்னை அடுமடையன் என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால், தமிழானது, காலந்தோரும் மாறுதல் பெற்றே வந்துள்ளது.


1.   தொல்காப்பியக்கால தமிழ்ச் சொற்கள் அனைத்தும் இன்றில்லை.
2.   இன்றுள்ள நல்ல தமிழ்ச் சொற்கள் அன்று இல்லை (எ.கா. கணிணி)
3.   தொல்காப்பியக்கால தமிழ் வரிவடிவம் இன்றில்லை.
4.   ஏ, ஓ போன்ற நெடில் ஒலிக்குறிப்புகளுக்கு தனி வடிவம் அன்றில்லை.
5.   மெய்யெழுத்துக்களுக்கு மேற்புள்ளி அன்றில்லை.
6.   சார்பெழுத்துக்கள் தொல்காப்பியத்தில் மூன்று, ஆனால் பின்னர் வந்த நன்னூலில் பத்து.
7.   தமிழானது, கிரந்தம், வட்டெழுத்து என பல்வேறு வரிவடிவங்களைக் கொண்டிருந்தது.
8.   தமிழுக்கென்று நிறுத்தற்குறிகள் ( . , ; : “ “ ?) அன்றில்லை.
9.   உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுள் இளங்கோவிற்கு முன்பு கிடையாது.
10.  உரைநடைத்தமிழ் வீரமாமுனிவர் ஏற்படுத்தியது.
11.  பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
12.  தமிழின் உயிர்மெய் எழுத்துக்கள் அத்தனையும் பயன்படுத்தப்படுவதில்லை. எ.கா. -  ங, ஞ, ய போன்றவற்றின் உயிர்மெய் வரிசையில் உள்ள எழுத்துக்கள்
13.  இல்லாத ஒலிக்குறிப்புகளுக்கு, வடமொழியின் வரிவடிவங்கள் பெரும்பாலோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, தமிழானது காலந்தோறும் ஏதேனும் மாற்றங்களைப் பெற்றே வளர்ந்து வருகிறது. அதனால்தான் தமிழை “வளர்தமிழ்” என்று வினைத்தொகையால் அழைக்கிறோம்.

      ஆக, எனது வேண்டுகோள் எல்லாம், தமிழர்களின் தற்போதைய பயன்பாட்டில் உள்ள அனைத்து ஒலிக்குறிப்புகளுக்கும், தமிழில் வரிவடிவங்கள் உருவாக்க வேண்டும் என்பதுதான். எப்படி உருவாக்குவது என்பதற்கு தொல்காப்பியத்தைத் துணைக் கொள்ளுங்கள். அதாவது கோடுகள், கொம்புகள், சுழிகள் முதலியவற்றை அகரமெய்யில் இட்டு உயிர்மெய் எழுத்துக்கள் உருவாக்கியதுபோல், தமிழ் அறிஞர்கள், புதிய வரிவடிவங்களை உருவாக்கவேண்டும். சுழி, பிறை, பொட்டு என்பனவற்றை இணைத்து உருவாக்குதல் நலம். அவ்வாறு உருவாக்கும் வரிவடிவங்களை பிறழ்மொழி எழுத்து அல்லது தமிழ்ப்போலி அல்லது ஒலிப்போலி எனும் தலைப்பில் தொகுத்துவிடுங்கள். பொதுவாக, வல்லின எழுத்துக்களுக்குதான் மெல்லின ஓசையுடைய வரிவடிவங்கள் தேவைப்படுகின்றன.


பிறழ்மொழி எழுத்து அல்லது தமிழ்ப்போலி அல்லது ஒலிப்போலி –
வரிவடிவம் தேவைப்படுபவை
வல்லின எழுத்துக்கள்
மெல்லின ஓசை வேண்டுபவை
(ஓசையின் பொருட்டு ஆங்கில எழுத்துக்கள்)
Ga, Ha
Sha, Ja
Da
Dha
Ba, Fa
ரகரம் இருப்பதால் தேவையில்லை


      மேலே உள்ளவை ஒரு எடுத்துக்காட்டிற்காக தொகுக்கப்பட்டவை. இவையன்றி வேறு ஏதேனும் ஒசைக்கு வரிவடிவம் தேவை என்றாலும் அறிஞர் பெருமக்கள் ஆய்தல் வேண்டும். இவ்வாறு செய்வதால் தமிழ் தனது இயல்பை இழந்துவிடாது. மாறாக பிறமொழி எழுத்துக்களைக் கடன்பெற்று பயன்படுத்துவதில் இருக்கும் சுமை நீங்கும். தமிழில் மெல்லினத்திலும், இடையினத்திலும் மெல்லிய வேறுபாட்டிற்காக முறையே, ந, ண, ன மற்றும் ள, ல இருக்கும் நிலையில், வல்லினத்தில் உள்ள எழுத்துக்களுக்கு வேறுபாட்டினை உணர்த்திட ஏன் புதிய எழுத்துக்களை உருவாக்கக் கூடாது.

      அவ்வாறு உருவாக்கும்போது, எழுத்தின் வடிவம் மாறாமல், ஆனால் சிறு குறியீடுகளை மட்டும் பயன்படுத்தி, உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக, ‘க’வின் இடையே ஒரு சிறு குறுக்குக்கோடு இடுவதன் மூலம் () அல்லது சிறு சுழி இடுவதன் மூலம் (0க) அதன் மற்றொரு ஒலிவடிவத்தை ஏற்படுத்தலாம். இதை அறிஞர்பெருமக்கள் ஆராய்ந்து முடிவு செய்யவேண்டும்.

      ஒரு கருத்தாக, இவ்வாறு செய்வது தமிழ் எழுத்துக்களைக் கணிணியில் உருவாக்குவதில் சிக்கலாகும் என சிலர் கூறமுற்படுவர். அதை தமிழ்க் கணிணி வல்லுனர் இடையே விட்டுவிடுங்கள். வேண்டியதைச் செய்துதருவர். தற்போது கணிணியில் இருக்கும் நூல்கள் இம்மாற்றத்தால் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறுவர். அதுவும் சரியன்று. இருப்பதை மாற்றச் சொல்லவில்லை. புதிய வடிவங்கள், தற்போது இல்லாத ஓசை வடிவங்களுக்கு மட்டுமே.

        இக்கட்டுரை, பலரால் ஒதுக்கப்படலாம், தூற்றப்படலாம், விலக்கப்படலாம் அல்லது வெகு சிலரால் ஏற்கவும்படலாம். கருத்துச் சுதந்திரம் எவர்க்கும் உண்டு. முன்பே கூறியதுபோல் நான் தமிழை மெத்தப் படித்தவன் இல்லை. நான் படித்த துறையே வேறு. தமிழ்  என்மொழி என்பதால், என் மொழியின் வளர்ச்சியில் எனக்கும் பங்குண்டு என்பதால், என் கருத்தை இங்கு பதிவு செய்திருக்கிறேன். அவ்வளவுதான். விதைப்பது எல்லாம் விளைவது இல்லை. ஆனால் நிச்சயம் உரமாகும்.

            "பழையன கழிதலும் புதியன புகுதலும்
            வழுவல கால வகையினானே'



அடுத்து … சொல்ல மறந்த கலை

3 comments:

  1. ஆகச்சிறந்த ஒர் ஆய்வுக்கட்டுரை. தமிழ் – காலத்திற்கேற்றார்போல் தன்னை தகவமைத்துக்கொள்ளும் திறன் படைத்தது. எனினும் அடுத்த நூற்றாண்டுக்கு தமிழை கொண்டு செல்லும் பொறுப்பு தமிழர்களுக்கு உண்டு. அந்த வகையில் மிகத்தேவையான மாற்றங்களை தமிழில் மேற்கொள்ளும் உரிமையும் உடையவராகிறோம். எனவே இக்கட்டுரையில் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களை தமிழறிஞர்கள் சீராய்வு செய்து தமிழை மேலும் தழைத்தோங்க செய்ய ஆவண செய்வார்கள் என்று நம்புகிறேன். கட்டுரையாளரின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகளும் பாரட்டுகளும்..

    ReplyDelete
  2. மிக்க நன்றி.

    ReplyDelete
  3. அருமையான ஆய்வுக்குரிய கருத்துகளை அனாயாசமாக அள்ளிவீசிக்கொண்டே போகிறீர்கள்... அருமை நண்பரே. “காய்தல் உவத்தல் அகற்றி“ - அதாவது, “பழந்தமிழில் எல்லாமிருக்கின்றன“ எனும் அலட்சியக் குரலுக்கும், “தமிழில் புதியன ஏதுமில்லை“ எனும் அலட்டல் குரலுக்கும் இடையில் நின்று, கொள்ளுவன கொண்டு, தள்ளுவன தள்ளி இன்றைய தேவைக்கேற்ப சிந்தித்திருப்பது பாராட்டத்தக்கது. தங்கள் தமிழ்ப் பணி தொடரட்டும். நன்றி.

    ReplyDelete