இப்
புவியில் வாழும் உயிர்களை அவற்றின் உணர்திறன் அடிப்படையில் ஒன்று முதல் ஆறு அறிவு வரை
வகைப்படுத்திக் கூறுகிறது தொல்காப்பியம். அதன் பொருளாதிகாரத்தில், முதற்பாடல்
(571) இவ்வாறு உரைக்கிறது.
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.
உயிரியல்
தோற்றக் கருத்தின்படி, அமினோ அமிலங்கள் உயிர் மூலகூற்றின் முதல்படி. பின்னர் அதிலிருந்துதான்
‘தன்னைப் பிரதியெடுத்தல்’ எனும் நிகழ்வில், உயிரினங்கள் தங்களை உருவாக்கிக் கொண்டுள்ளன.
ஐந்தாம் அறிவு வரையில் தம்மை உயர்த்தி வாழ முற்பட்ட உயிரினங்களில் இருந்துதான் மனிதன்
தோன்றினான். ஆறாம் அறிவைப் பெருவதற்குத் தன்னை உட்படுத்திக் கொண்டான். அங்க அசைவுகளால்
தன் இனத்தவரைத் தொடர்பு கொண்டவன், பின்னர் ஒலி எழுப்பித் தொடர்பு கொண்டான். ஒலியை வார்த்தையாக்கி
அதனை பிறர் உணரும் பொருளாக்கி வாசிக்கத் தொடங்கியபோதுதான் மொழி வளர்ச்சி அடையத் தொடங்கியது.
தமிழும் வாசிப்பில் வளர்ந்த தொல் மொழி.
தமிழ்
மொழியின் வாசிப்பு – பேச்சு மொழியும் எழுத்து மொழியும் கொண்ட இருவகைக் கோர்வை. பேச்சு-மொழி
என்பது வட்டாரங்களுக்கு ஏற்ப மாறுபட்டது. ஆனால் எழுத்து-மொழி என்பது இலக்கண வறைமுறைகளுக்கு
உட்பட்டது.
எனவே,
எழுத்து-மொழியின் வாசிப்பு ஒரு மொழியின் கட்டுக்கோப்பான, செழுமையான வளர்ச்சிக்கு மிக
அவசியமான ஒன்று. இதைக் கருத்தில் கொண்டுதான் அன்றைய கல்வியாளர்கள், மாணவர்களின் வாசிப்புத்
திறனுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்தனர்.
வகுப்பில்
மாணவனை எழுந்து நின்று வாசிக்கச் சொல்லி, முறைப்படுத்தினர். செய்யுள்களை மனனம் செய்து
கூறச் செய்தனர். ள, ல, ற, ர, ழ, ய, ந, ண, ன போன்ற எழுத்துக்களைக் கொண்ட சொற்களைப் படித்துக்காட்டி
அச் சொற்களின் பொருள் வேறுபாட்டினையும் உரைத்தனர். நான் ஆரம்ப வகுப்பில் (40 ஆண்டுகளுக்கு
முன்) படித்த வரிகள் இன்றும் என் நினைவில் உள்ளன.
ஆற்றின்
ஓரம் கரை - ஆடையில் உள்ளது கறை
வலைஞர்
வீசுவது வலை - தையல் அணிவது வளை
இந்த
வரிகளை வாய்விட்டு உச்சரிக்கும்போது ஏற்படும் ஒலி வேறுபாட்டினை வாசிக்கும் மாணவனும்
உணர்ந்தான், அதனைக் கேட்கும் மாணவர்களும் உணர்ந்தனர். அதனைத் தனது பேச்சு மொழியிலும்
இயல்பாகப் பயன்படுத்தும் நிலையும் ஏற்பட்டது. எந்த வட்டாரா மொழிப்பேசும் மாணவனாக இருந்தாலும்,
அவனால் ழகரம் தவறின்றி உச்சரிக்கப்பட்டது. மொழி ஆசிரியர்களும் அதற்கு பெருந்துணையாக இருந்தனர்.
ஆனால்
இன்று தமிழ் வாசிப்பு என்பது தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாகத்தான் இருக்கிறது
(அது தமிழ் வாசிப்பே இல்லை என்பது வேறு). தற்போதும் பள்ளிப் பாடத்திட்டங்களில் இவை
இருந்தாலும், போகிற போக்கில் சொல்லித்தரும் பாடமாகத்தான் இருக்கிறது. ஏனெனில் மொழிப்பாடம்
என்பது இரண்டாம் மொழியாகத்தான் இருக்கிறது. அதுவும் விருப்பத் தேர்வாகத்தான் இருக்கிறது.
தமிழை மொழிப்பாடமாகத் தேர்ந்தெடுப்பது ஏதோ இயலாத மாணவர்கள் படிக்கும் பாடமாகத்தான்
இருக்கிறது.
அன்று
பாடங்களை வாய்விட்டுப் படிக்கும் முறை இருந்தது. படிப்பவனுக்கும் பெருமையாக இருந்தது.
பெற்றோர்க்கும் பெருமையாக இருந்தது. படிக்கும்போது பிழையாகப் படித்தால் திருத்தம் செய்யும்
சூழலும் இருந்தது. ஆனால் இன்று பள்ளிகளில் “சத்தம் போட்டு படிக்காதே” என்று மாணவனைத்
தடுக்கும் போக்குதான் உள்ளது. வாசிக்கத் தடை போட்டால் வார்த்தைகளை உச்சரிக்கும் பழக்கம்
எப்படி ஏற்படும். உச்சரிக்கும் பழக்கம் இல்லையெனில் நல்ல தமிழ் எப்படிக் கிடைக்கும்?
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம் – என்றார் ஔவை.
நாப்பழக்கம் இல்லாமல் செந்தமிழ் இல்லை. புரிந்து
படித்து மனதில் நிறுத்துதல் இல்லாமல் கல்வி இல்லை.
வாசிப்பு
நின்று போனால், சுவாசிப்பும் நின்று போகும் அபாயம் உள்ளது. எனவே மாணவர்களுக்குத் தமிழை
வாசிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டியக் கடமை கல்வியாளர்களுக்கு அதிகம் உண்டு. என்னைப்
போன்றவர்களுக்கும் உண்டு.
தமிழை
வாசிக்கக் கற்றுக் கொடுப்போம்.
… அடுத்து – என் தமிழ் ஆசிரியர்கள்
சென்ற பதிவின் முடிவில் அடுத்து … வேட்டி.. என்று
குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அன்றைய தினம் தமிழக சட்டசபையில் வேட்டி அணிவதற்கான சட்ட
முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால், வேட்டியினைப் பதிவு செய்யவில்லை. ஆனாலும்
அடுத்த பதிவில் “வேட்டி” சிறப்பிக்கப்படும்.
|
தங்களை தொடர ஆரம்பித்ட்டுள்ளேன்.
ReplyDeleteதங்களின் வலைப்பூவில் இணைத்துக்கொள்ள முடியவில்லை - (join this site). அதை சரி செய்தால் நன்றாக இருக்கும்.
மிக்க நன்றி. தாங்கள் தொடர ஆரம்பித்துள்ளீர்கள் என்பதைவிட என்னுடன் கைக்கோர்த்துள்ளீர்கள் என்பதே மிக்க சரி. இணைய முடியாமை என்பது கூகுளில் உள்ள தற்காலிகக் குறைபாடு என எண்ணுகிறேன். விரைவில் சரிசெய்யப்படும் என நம்புவோம்.
Delete