கடவுள் என்ற ஒரு வார்த்தையை
வைத்துக் கொண்டுதான்,
ஆத்திகமும்
நாத்திகமும்
மோதிக்கொண்டு
இருக்கின்றன.
எது கடவுள் அல்லது யார் கடவுள் என்று தீர்மானிப்பதில்
இன்னமும் குழப்பம் நீடிப்பதாகவே
உள்ளது.
எதுவும் பொதுவில் பகிரப்பட்டு,
பெரும்பான்மையினரால்
ஏற்றுக் கொள்ளும்போது
மட்டுமே அது உண்மையாக இருக்கலாம்
எனும் நிலை ஏற்படுகிறது.
அறிவியல் கொள்கை என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட
‘பெருவெடிப்புக்
கொள்கை’க்கூட பெரும்பான்மையினரால்
ஏற்றுக்கொள்ளப்பட்டாலும்,
இன்னும் வெகுசிலரால்
ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
அக்கருத்து
மதவாதிகளால்
மட்டுமல்ல, இன்னும் சில அறிவியல் பெருமக்களாலும்
ஏற்றுக் கொள்ளப்படாத
நிலையிலேயே
உள்ளது. இருப்பினும்
அது பொதுவாக எல்லோராலும்
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால்,
நாமும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளோம்.
அறிவியலாகட்டும்
அல்லது மதங்களாகட்டும்
எதுவும் கொள்கைச் சார்ந்ததே. சில பல கோட்பாடுகளைச்
சுட்டிக் காட்டி அறிவியல் கருத்துக்களை
நிரூபிக்க முற்படுவதுபோல்,
மதக்கோட்பாட்களும்
அப்படித்தான்.
ஆனாலும் அறிவியலுக்கும்
மதத்திற்குமான
தகராறு பன்னெடுங்காலமாகவே
தொடர்ந்துகொண்டிருக்கிறது.
மனித இனம் தோன்றியது சுமார் பத்து இலட்சம் ஆண்டுகளுக்கு
முன்புதான்
என அறிவியல் சொன்னாலும்,
மனிதனின் படைப்பு பற்றி மதங்களின்
கருத்தோ எப்பொழுதும் வேறுவிதமாகத்தான்
இருந்தன, இப்பொழுதும்
இருக்கின்றன.
படைப்பிற்காக
ஒரு கடவுள் இருப்பதாகவும்,
அவரே ஒவ்வொருவரையும்
படைப்பதாகவும்,
அவர்களது தலைவிதியை நிர்ணயிப்பதாகவும்
–ஒரு மதம் கூறுகிறது.
கடவுள் ஒரே ஒரு ஆணையும், பெண்ணையும்
மட்டும் இணையாகப் படைத்து இந்த
உலகில் உலாவ விட்டதாகவும்,
அவர்களின் மூலம், இன்று அனைத்து மனித இனமும்
தோன்றியதாக
– ஒரு மதம் கூறுகிறது
உருவமே இல்லாத ஒரு கடவுள், உருவம் உள்ள ஆணையும் பெண்ணையும் படைத்ததாக – ஒரு மதம் கூறுகிறது.
வேறு சில மதங்கள் வேறு விதமாகக் கூறுகின்றன.
ஆனால் அறிவியலோ, அமினோ அமிலம், ஒரு செல் உயிரினம், பல் செல் உயிரினம் என பரினாம வளர்ச்சி அடைந்து, அதன் தொடர் நிகழ்வாக மனித இனம் உண்டாகியதாகக்
கூறுகிறது. அந்த அறிவியல் கருத்தைத்தான்
பல உயிரியல் மேதைகள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
அந்த மேதைகள் எல்லா மதத்திலும்
உள்ளனர்.
ஆனால், தமது மதம் சார்ந்த கோட்பாடு தோற்றுவிடக்கூடாது
என்பதாலேயே,
இதைக் கண்டிப்பாக
மறுக்க வேண்டும் என்று மதவாதிகள் எதிர்க்கிறார்கள்.
தாங்கள்தான்
அறிவியல் மேதைகள் என்பதுபோல்
நாத்திகவாதிகளோ,
மதங்களை நையாண்டி செய்து அறிவியற் கருத்துக்களை
பரப்ப முயற்சிக்க,
மத நம்பிக்கையாளர்கள்
அதை ஏற்க மறுப்பதால்,
கருத்து முழுமையாக சென்று சேராமல், முடங்கி விடுகிறது. ஏனென்றால் இன்று உலகில் மிகப்பெரும்பான்மையினர்,
ஏதோ ஒரு மதத்தைச் சார்ந்தே இருக்கின்றதால்,
நாத்திகவாதியின்
கருத்துக்கள்
பெரும்பாலும்
புறந்தள்ளப்படுகின்றன.
அதே நேரத்தில், மதம் என்பது இயற்கை விதிமுறை அல்ல, அதாவது கிழக்கே சூரியன் உதிப்பது, நிலவு தேய்ந்து வளர்வது, உயிர்கள் தோன்றி மறைவது என்பனபோல், அது இயல்பாகத் தோன்றியதோ அல்லது இயல்பாக நடந்தேறும்
நிகழ்வோ அல்ல.
ஆதி மனிதன் இயற்கையைக்
கண்டு அஞ்சி நடுங்கினான்
என்றுதான் படித்திருக்கிறோம்.
அந்த இயற்கையைக்
கடவுளாகக் கண்டதில் தவறில்லை. அதனையே மனிதன் பின் நாட்களில் பல்வேறு கடவுள்களாக
அவதாரம் செய்வித்தான்.
கடவுள் யார் என்பதில் கருத்து வேறுபாடுகள்
இருக்கலாம்.
ஆனால் மனிதர்களால்
தான் மதம் உருவாகியது
என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மதமோ அல்லது மார்க்கமோ அது உண்டா அல்லது இல்லையா; சரியா அல்லது தவறா என்று இங்கு விவாதம் தேவையில்லை.
ஆனால் அறிவியல் கருத்துக்களை
அல்லது அறிவியல் தேற்றங்களை(theory),
மதங்களோடு தொடர்பு படுத்தி தங்கள் மதத்தினை அறிவியல் சார்ந்தது எனக் காட்டிக் கொள்ள முயற்சிப்பது
சரியல்ல.
ஒரு அறிவியல் தேற்றத்தை தமது மதத்தோடு தொடர்புபடுத்தி
நிரூபிக்க முயலும்போது,
மற்ற மதத்தினர் அதனை ஏற்க மறுக்கின்றனர்.
அதனை எவ்வாறு இழிவுபடுத்தி
நிராகரிக்கலாம்
என்பதில் முழு முனைப்புக்
காட்டுகின்றனர்.
நாத்திகவாதிகளோ
தோலுரித்து
தொங்கவிடுவதற்கு
அதில் உள்ள பொருந்தா விதிகளைத் தோண்டி எடுத்து, தூற்றுகின்றனர்.
சரி, பொருந்தா விதிகளுக்கு
விளக்கம் சொல்லுங்கள்
என்று அந்த மதவாதிகளைக்
கேட்டால், அது விளக்க முடியாத, விளங்க முடியாத கடவுளின் தத்துவம் என்று அதனைத் தொடர்பவர்கள்
தப்பிக்கப்
பார்க்கிறார்கள்.
உலகில் எல்லோருமே ஆத்திகர்கள்
தான் – தங்களின் நம்பிக்கையை
ஆய்வுக்கு உட்படுத்த மறுக்கும், அல்லது மறுபரிசீலனைச்
செய்ய மறுக்கும், அனைவருமே ஆத்திகர்கள்
தான். ஒருவர் “அ” எனும் கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருப்பார். இன்னொருவர்
‘இ’ எனும் கடவுள் நம்பிக்கையைக்
கொண்டவராக இருப்பார். பிரிதொருவர்
‘உ’ எனும் கடவுள் நம்பிக்கையைக்
கொண்டவராக இருப்பார். நான்காமவர்,
கடவுளே இல்லை எனும் நம்பிக்கையைக்
கொண்டவராக இருப்பார். ஆகவே அவரவர் தத்தமது நம்பிக்கையில்
விடாப்பிடியாக
இருப்பதால்,
நம்பிக்கை எனும் அளவீட்டில்
அனைவருமே ஆத்திகர்கள்
தான்.
உலகில் எல்லோருமே நாத்திகர்கள்
தான் – பிறரின் நம்பிக்கையை
ஆய்வுக்கு உட்படுத்த நினைக்கும்,
அல்லது அந்த
நம்பிக்கையை
மறுக்கும், அனைவருமே நாத்திகர்கள்
தான். “அ”
எனும் கடவுள் நம்பிக்கை கொண்ட ஒருவர் - ‘இ’. அல்லது “உ” எனும் கடவுளே இல்லை எனச் சொல்லுவார்.
அவரைப்போலவே,
மற்றவர்கள்
தத்தமது கடவுளைத் தவிர மற்றக் கடவுள்கள் இல்லை என்பர்.. நான்காமவர்,
கடவுளே இல்லை என்பவர். ஆகவே அவரவர் பிறரது நம்பிக்கையை
நம்பாமல் இருப்பதால்,
நம்பிக்கை எனும் அளவீட்டில்
அனைவருமே நாத்திகர்கள்
தான்.
ஆத்திகமும்
நாத்திகமும்
தத்தம் வழியே போய்க் கொண்டிருந்த
பொழுது, அதனைத் தங்கள் பங்கிற்கு கையாளத் தொடங்கியவர்கள்
நமது அரசியல் வாதிகள். எதிர்ப்பு அல்லது ஆதரவு என்று ஒரு தனிமனிதன் நிலைப்பாடு
கொள்ளும் வரையில் எவ்வித பிரச்சனையும்
எழுவதில்லை.
அவனுக்கு ஒரு குழு பக்கபலமாக இருக்கிறது
எனும் சூழல் வரும்போது, அவன் தன்னை வீரனாகக் காட்டிக் கொள்ள முயல்கிறான்.
இதனை ஆங்கிலத்தில்
‘Student mobs’ என்று
சொல்வார்கள்.
அதே நிலைதான் இப்பொழுது ஆத்திகத்திற்கும்
நாத்திகத்திற்கும்
இடையே ஏற்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சித்
துறையின் தலைவராக இருந்தவர். மங்கள்யானை
செவ்வாய்க்கு
அனுப்பியக்
குழுவிற்குத்
தலவராக இருந்தவர். இந்தியாவை உலக நாடுகளிடையே
தலை நிமிரச் செய்தவர். அவர் திரு. இராதகிருஷ்ணன் எனும் விண்ணியல் அறிஞர். இந்த பிரபஞ்சம் உருவான விதமும், நமது சூரியக் குடும்பமும்,
அதில் கோள்களுக்கான
தூர அளவும், மங்கள்யான்
எனும் அறிவியல் விண்கலம் எப்படி, எப்போது செவ்வாய்க்கு
செல்லும் என்பதும் அறிவியலின்
அடிப்படையில்
அறிந்த வானியல் அறிஞர். அவர்கீழ் பல்நூறு அறிவியலாளர்கள்.
அவர்களில் ஆத்திகரும்
உண்டு நாத்திகரும்
உண்டு. பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும்
உண்டு. அவர்கள் துணையுடன் வெற்றிகரமாக
மங்கள்யானை
செவ்வாய்க்கு
அனுப்பிவைத்தார்.
அதன் பின் என்ன செய்தார் தெரியுமா? மறுநாள் நேராக திருப்பதிக்கு
சென்று ‘ஏழுமலையானைத்’
தரிசித்தார்.
அவர் அறிவியல் என்பது வேறு நம்பிக்கை என்பது வேறு என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார்.
தமது நம்பிக்கையை
அவர் எவர் மீதும் திணிக்கவில்லை.
அவர் திருப்பதிக்குச்
சென்றது அவரது தனிமனித சுதந்திரம்.
அதே நேரத்தில் ‘ஏழுமலையான்
கருணையினால்
எல்லாம் வெற்றிகரமாக
முடிந்தது’ என்று அறிக்கை கொடுத்திருந்தால்
அது அவர் கீழ் பணியாற்றிய
அத்தனை பேருக்கும்
அவர் செய்த துரோகம் ஆகியிருக்கும்.
ஆத்திகம் நாத்திகம் இரண்டிற்கும்
இடைபட்ட நிலை என்று ஒன்று உண்டு. கடவுள் இருந்தால் என்ன இல்லாவிட்டால்
என்ன, நான் இருக்கிறேன்,
என்னுடன் என் மனிதர்கள் இருக்கிறார்கள்.
நம் கடனை நாம் செய்வோம் எனும்
இயல்பான பிரிவினர். உண்மையில் இவர்களால்தான்
இந்த உலகம் இயங்கி கொண்டிருக்கிறது
என்பேன்.
ஆத்திகக் கருத்துக்கள்
என்று தோன்றியதோ அன்றிலிருந்தே
நாத்திகக் கருத்துக்களும்
இருந்துகொண்டுதான்
இருக்கிறது.
ஒவ்வொரு விசைக்கும்
எதிர் விசை. சூழ்நிலையின்
காரணமாக அதன் வீச்சின் அளவில் வித்தியாசம்
இருந்திருக்கலாம்.
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
என்று சொன்ன திருமூலர் அக்காலத்தில்
மிகச்சிறந்த
நாத்திகர் என்று சொல்லுவார்கள்.
அறிவியல் கருத்துக்கள்
பொதுவாக அனைவராலும்
ஏற்றுக் கொள்ளப்படும்போது,
அறிவியலின்
அடிப்படையில்
உள்ளதாகக் கூறிக்கொள்ளும்
நாத்திக கருத்து ஏன் பெரும்பாலோரால்
ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
நம்பிக்கையைச்
சிதைக்காத எந்தக் கருத்தும் ஏற்றுக் கொள்ளப்படும்.
நாத்திகம் நம்பிக்கையைச்
சிதைக்கும்
வேலையை முதன்மையாகச்
செய்து கொண்டிருக்கிறது.
ஆத்திகமோ அல்லது நாத்திகமோ, அது நம்மை நெறிப் படுத்திச் செல்ல வேண்டும். அதைவிடுத்து,
நம்பிக்கையை
விலை பேசி, நம்மை வீழ்ச்சிக்குக்
கொண்டு செல்லக் கூடாது.
ஆத்திகத்தைச்
சொல்லி ஏமாற்றுகிறார்கள்,
அதனைத் தடுப்பதே நாத்திகத்தின்
வேலை என்கிறீர்களா?
நாத்திகத்தைக்
கையிலெடுத்து
அரசியல் செய்து ஏமாற்றுகிறார்களே?
மூளையை மழுங்கடிக்கும்
வேலையைச் செய்கிறார்களே?
அதை ஏன் தடுப்பதில்லை?.
ஏமாற்றுதல்
எங்கேயும் இருந்துகொண்டுதான்
இருக்கிறது.
விழிப்புணர்வு
ஏற்படுத்த வேண்டியது நமது கடமைதான். நம்பிக்கையைச்
சிதைக்காமல்.
எந்த சட்டையைப் போடவேண்டும்
என்பது என் விருப்பம். அது பிறர் கண்களை உறுத்தாத வரையில். இதைத்தான் எல்லோரும் போட வேண்டும் என்று நான் வலியுறுத்துவதும்
தவறு. இதை யாரும் போடக்கூடாது
என்று நீங்கள் வலியுறுத்துவதும்
தவறு.
ஆத்திகமும்
அப்படித்தான்,
நாத்திகமும்
அப்படித்தான்.
அது அவரவர் தனி விருப்பம். அது நம்மை பாதிக்காத வரையில்.
அது சரி, நீங்கள் ஆத்திகரா நாத்திகரா என்கிறீர்களா?
தசாவதாரம் படத்தில் கடைசியில் வரும் வாக்கியம் தான் எனக்குப் பிடிக்கும்.
“நான் எங்கே இல்லேன்னு சொன்னேன் … இருந்தால் நல்லா இருக்கும்”.
No comments:
Post a Comment