21 January, 2018

ஆண்டாள் தான் காரணமா?


வியரசு கண்ணதாசன் இருந்த காலத்திலேயே தன்னைக் கவிப்பேரரசாக அறிவிக்கச் செய்த மாபெரும்(?) கவிஞரும் ஆங்கிலக் கலப்பே இல்லாமல் திரைப்படப் பாடல்கள் எழுதிவரும் தமிழ்த்தாயின் தவப்புதல்வருமான(?) வைரமுத்து, ஆண்டாளைப் பற்றி கூறிய கருத்து இன்று விவாதப் பொருளாகவும், போராட்டங்களாகவும் நடைபெற்று வருகிறது. 

வைரமுத்துவை எதிர்த்து நடந்து வரும் இந்தப் போராட்டங்களுக்கு அடிப்படைக் காரணம் ஆண்டாள் மட்டும்தானா?

இந்தியா பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் வாழ்ந்துவரும் மதச் சார்பற்ற நாடு. எவரும் எந்த மதத்தினையும் சார்ந்து வாழலாம். எல்லோருக்கும் பேச்சுரிமை உண்டு. இங்குதான் சிக்கல் எழுகிறது.

இருக்கும் பேச்சுரிமை என்பது பிறரைக் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். எந்த மதத்தினையும் இகழ்தல் என்பது இல்லாமல் இருக்க வேண்டும். எந்த கடவுள் நம்பிக்கையையும் தூற்றுதல் இல்லாமல் இருக்க வேண்டும்.

ஆனால் இங்கு காலம் காலமாக ஒரு குறிப்பிட்ட மதம் மட்டும் பொதுவெளியில் பகுத்தறிவு எனும் பெயரில் காயப்படுத்தப்பட்டுக்கொண்டே இருந்து வருகிறது. காயப்படுத்துபவர்கள், எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்களோ அதே கண்ணோட்டத்தில் பிற மதங்களைப் பார்ப்பதில்லை. பார்த்தால் என்ன பின் விளைவுகள் வரும் என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால் இவர்கள் காயப்படுத்தும் மதம் பெரும்பான்மையினருக்கு உடையதாக இருந்தாலும், தைரியமாக காயப்படுத்துவார்கள், அதே வேளையில் மற்ற மதத்தினருடன் தோளோடு இணைந்து ‘பகுத்தறிவு” பேசுவார்கள். பகுத்தறிவு என்றால் பொதுவில் வைக்க வேண்டும், ஆனால் இவர்கள் இதனை பெரும்பான்மை உள்ள மதத்தின் மீது மட்டுமே வைக்க, வைக்க அதன் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு ‘இவர்களின் மீது கோபம் எனும் அழுத்தம் அழுந்திக் கொண்டே இருந்து வருகிறது’. கட்சி, ஆட்சி, படைபலம், என பின்விளைவுகளைக் கண்டு எதிர்க்க திறனற்று இருப்பவர்கள், வைரமுத்து போன்ற ஆட்கள் மாட்டும்போது பொங்கி எழுந்து விடுகிறார்கள். அதுமட்டுமல்ல இனிமேல் யாரும் இதுபோல் தேவையற்று எங்கள் மதம் சார்ந்த நம்பிக்கையில் தலையிடாதீர்கள் எனும் ஒரு எச்சரிக்கை மணியாகவும் இதை ஒலிக்கிறார்கள்.


சரி, வைரமுத்துவை எதிர்த்தால் மட்டும் பிரச்சனை வராதா என்றால் நிச்சயம் வராது என்ற நம்பிக்கைதான். ஏனென்றால், வைரமுத்துவிற்கு அவர் சார்ந்திருக்கும் கட்சியிலும் சரி, திரை உலகத்திலும் சரி அவ்வளவு நல்ல பெயர். அவ்வளவு பேர் அவருக்காக போராட தயாராக இருக்கிறார்கள்.

ஆக, ஆண்டாள் இன்று ஒரு கருவி, அவ்வளவுதான்.