ஔவை – பாலும் தெளிதேனும்
பாகும் பருப்பும் என நான்கினைக் கொடுத்து மூன்று தமிழ் கேட்ட தமிழ் மூதாட்டி. பல்வேறுக்
காலங்களில் பல்வேறு ஔவை இருந்ததாக படித்திருக்கிறேன். எத்தனை ஔவை இருந்தார்கள் என்பது முக்கியமல்ல. ஆனால், ஔவை சொன்ன மொழிகள் அத்தனையும் அமுதம்.
தமிழ் வழிக்கல்வி
என்பது மிகப் பெரும் பாக்கியம். உணர்ந்து படித்தல் அதில் மட்டுமே முடியும். அதுவும்
அன்றையத் தமிழ்ப் பாடம் என்பது களஞ்சியத் திரட்டு. ஆத்திச் சூடி, கொன்றைவேந்தன், மூதுரை
போன்ற ஔவையின் அறநெறிக் கருத்துகள் பசுமரத்தில் பாய்ந்த ஆணி.
ஆத்திச் சூடி –
எளிய தமிழில் எழுதப்பட்ட அறநெறிக் கோவை. முதல் வரி –
அறம் செய
விரும்பு
மிகச் சிறிய வாக்கியம். அறம் – செய – விரும்பு அவ்வளவுதான். தருமம் செய் – இது சிறார்களுக்குப்
போதுமான விளக்கம். தருமத்தின் நோக்கத்தினைச் சிறார்களுக்குப் பள்ளியில் போதித்தனர்.
ஆனால், இன்று ஆழ்ந்து
யோசிக்கையில் இது சிறார்களுக்கான போதனையாகத் தெரியவில்லை. சிறு வயதிலேயே ஒரு கருத்தை
மனத்தில் பதிக்க வேண்டும் என்று சொல்லியதாகத்தான் தோன்றுகிறது.
அறம் – இதன் பொருள் என்ன?
பொதுவில், அறம்
என்பதற்கு தருமம் என்று பொருள் கொண்டாலும், அறத்திற்குப் பல்வேறு பொருட்கள் இருப்பதாகவேத்
தோன்றுகிறது. ஒரு பொருட் பன்மொழி.
சரி, எவற்றையெல்லாம்
அறத்திற்குப் பொருளாகக் கொள்வது. அது மிக எளிது. எவை எல்லாம் தனிமனித ஒழுக்கத்தின்
கீழ் வருகின்றனவோ அவையெல்லாம் அறம். இந்தக் கருத்து உயர் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டுமல்லவா?
ஆம் ஒப்புதல் பெறப்பட்டதுதான். அதுவும் வான்புகழ் வள்ளுவரால் ஒப்புதல் பெறப்பட்டது.
முப்பால் எனும்
திருக்குறளில் முதற்பால் – அறத்துப்பால். அறத்துப் பாலின் அதிகாரங்கள் மொத்தம் முப்பத்து
எட்டு.
பாயிரம்
1. கடவுள் வாழ்த்து
2. வான் சிறப்பு
3. நீத்தார் பெருமை
4. அறன் வலியுறுத்தல்
இல்லறவியல்
5. இல்வாழ்க்கை
6. வாழ்க்கைத் துணைநலம்
7. மக்கட்பேறு
8. அன்புடைமை
9. விருந்தோம்பல்
10. இனியவை கூறல்
11. செய்ந்நன்றி அறிதல்
12. நடுவுநிலைமை
13. அடக்கம் உடைமை
14. ஒழுக்கம் உடைமை
15. பிறன் இல் விழையாமை
16. பொறை உடைமை
17. அழுக்காறாமை
18. வெஃகாமை
19. புறங்கூறாமை
|
20. பயனில சொல்லாமை
21. தீவினை அச்சம்
22. ஒப்புரவு அறிதல்
23. ஈகை
24. புகழ்
துறவறவியல்
25. அருள் உடைமை
26. புலால் மறுத்தல்
27. தவம்
28. கூடா ஒழுக்கம்
29. கள்ளாமை :
30. வாய்மை
31. வெகுளாமை
32. இன்னா செய்யாமை
33. கொல்லாமை
34. நிலையாமை
35. துறவு
36. மெய் உணர்தல்
37. அவா அறுத்தல்
ஊழியல்
38. ஊழ்
|
இவற்றில் வரும்
அதிகாரத் தலைப்புகளை ஒப்பு நோக்குங்கள். பாயிரத்தில் உள்ள நான்கு அதிகாரங்கள் உட்பட,
எல்லாம் தனி மனித ஒழுக்கம் சார்ந்தவைதான். எனவே அறம் என்பது தனிமனித ஒழுக்கம் சார்ந்த
பண்புகள். அதனால்தான் வள்ளுவப் பெருந்தகை, இவற்றை அறத்துப்பாலின் கீழ் வகைப்படுத்தியுள்ளார்.
எனவே அறம் என்பது தனிமனித ஒழுக்கம்.
அடுத்து – செய எனும்
சொல்.
இங்கு ஔவையார்,
செய் என்று கட்டளை இடவில்லை. செய என்றுதான் கூறுகிறார். அதாவது செய்வதற்கு அல்லது பேணுதற்கு
என்று பொருள் பட உரைக்கிறார்.
அடுத்து – விரும்பு
எனும் சொல்.
தனி மனித ஒழுக்கம்
என்பது பிறர் கட்டளையிட்டுச் செயல்படுத்தும் செயல் இல்லை. கட்டளையிட்டாலும் கடைபிடித்தல்
என்பது தனி மனிதன் தன்னை உணர்ந்து செய்யும் செயல். தான் விரும்பிச் செயல்படுத்த வேண்டும்.
எனவே தான் ஔவையார் விரும்பிக் கடைப்பிடி என்று உரைக்கிறார்.
தன்னையறிந்து தனிமனித
ஒழுக்கத்தை விரும்பிக் கடைப்பிடி அல்லது செய் என்பதே ஔவையின் அமுத மொழியான “அறம்
செய விரும்பு” உரைக்கிறது. அதனால்தான் அதனை ஆத்திச் சூடியில் முதல் வரியாகப் படைத்துள்ளார்.
“அறம்
செய விரும்புவோம்”.
அடுத்து ….. வேட்டி
……
No comments:
Post a Comment