28 August, 2014

சொல்ல மறந்த கலை


      ஒரு ஊர்ல . . . . என்றுதான் பெரும்பாலான கதைகள் அன்று தொடங்கின. அதனைச் சொல்வதற்கு பெரும்பாலும் பாட்டிகளும், சில சமயம் பாட்டன்களும் இருந்தனர். கேட்பதற்கு காதுகள் இருந்தன. ஒரு திரைப்படத்தினால் காட்சிப்படுத்த முடியாத சோலைகளும் வனங்களும் அவரவர் கற்பனையில் காட்சிப்படுத்தப்பட்டன. அரசன் நல்லவனாக இருப்பான் அல்லது கொடியவனாக இருப்பான். குடியானவன் நேர்மையானவனாக இருப்பான் அல்லது பொறாமைக்குணம் கொண்டவனாக இருப்பான். விலங்குகள் பழிதீர்க்கும் அல்லது புத்தி சொல்லும். எப்படி இருப்பினும் முடிவில் தீயவைத் தோற்கும், நல்லவை வெல்லும். கதையைக் கேட்டவன் அதை மற்றவனிடம் ஒப்புவிப்பான். மற்றவன் பிரிதொருவனிடம் ஒப்புவிப்பான். அது தொடர்ந்து ஒப்புவிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். கதையின் ஊடே சொல்லப்பட்ட ஒழுக்கமும் நீதியும் அலைவரிசை இல்லாமலேயே அவரவர் மனங்களில் பதிவாகும்.



      கதை என்பது கற்பனையாக இருந்தாலும், அதில் வரும் நிகழ்வுகள் உண்மை போலவே உரைக்கப்பட்டன. அதனால்தான், வில்லிபுத்தூரருக்குத் தெரியாத மகாபராதக் கிளைக்கதைகள் விறகு பொறுக்கும் கிழவிக்குத் தெரிந்திருந்தது. படிக்காத பாட்டிக்கு எங்கு கதையை நிறுத்த வேண்டும் எங்கு மீண்டும் தொடங்க வேண்டும் எனும் வித்தைகள் தெரிந்திருந்தது. நிறுத்திய இடத்திலிருந்து மறுநாள் கதை தொடங்கும்வரை, கதையைக் கேட்டவன், தன் கற்பனையில் கதை செய்வான். பட்டி விக்கிரமாதித்தனின் கதையைக் கேட்டவனுக்கு விக்கிரமாதித்தனின் தலை சுக்கு நூறாக வெடித்திடுமோ என்ற பயம் இருக்கும். அது சிந்திக்கும் ஆற்றலை விளையாட்டாய் சொல்லித் தரும் வித்தை.

      பள்ளிகளில், நீதி வகுப்பு என்ற பெயரில், கதை சொல்லுவதற்கென்றே பாடவேளைகள் இருந்தன,. புதிது புதிதாகக் கதைகள் சொல்லுவதற்கு, அம்புலிமாமா, கோகுலம், அணில் போன்ற சிறுவர் இதழ்களைத் தேடி அலைந்து, படித்து, கதைச் சொல்லும் போக்கு மாணவர்களிடம் இருந்தது. பஞ்சதந்திரம், பரமார்த்தகுருக்கதை, பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றவை கதையின் ஊடே நீதியைச் சொல்லிச் சென்றன. இன்று அத்தகைய கதைகளும் இல்லை, இதழ்களும் இல்லை, மாணவர்களும் இல்லை என்பதே உண்மை.

      எங்கு போயினர் அந்த கதைச் சொல்லும் பாட்டிகள். எங்கு போயினர் கதைக்கேட்ட சிறுவர்கள். தொலைந்து வெகுநாட்கள் ஆயிற்று.  வேகம் வேகம் என்று ஓடிக்கொண்டே வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த முரண்தொடர் போலவே.

      வாய்வழியே உண்டதை வாய்வழியே கழிக்கும் வவ்வால் போல், கல்வி என்பது மனனம் செய்து கக்குதல் எனும் மாற்றம் அடைந்தபின், புத்தகங்கள் பொதி மூட்டைகள் ஆனபின், தாய்மொழியில் பேசினால் தண்டனை என்று ஆனபின், விரல்கள் ஒடிய வீட்டுப்பாடம் தினிக்கப்பட்டபின், முட்டாள் பெட்டிக்கு  அடிமையானபின், விளையாட்டு என்பதும் கதைக் கேட்டல் என்பதும் வழக்கொழிந்துபோகாமல் என்ன செய்யும்.

      மூன்றுபேர் கொண்டது குடும்பம் என்று ஆனபின், சகிப்புத்தன்மைகள் இல்லையென்றானபின், முதியோர்க்கென்று இல்லங்கள் வந்தபின், பாட்டி என்பவர் ஒருவகை உறவினர் என்றானபின், கதைகள் சொல்ல பாட்டிகள் ஏது?

      தாய்மொழி என்பது இரண்டாம் மொழியானபின், தாய்மொழியின்றியும் கல்வி பயிலலாம் என்றானபின், தாய்மொழியில் படிக்கத் தெரியாது என்பது பெருமையானபின், எந்த மொழியில் கதையைச் சொல்வது அல்லது கேட்பது?
கதை சொல்லும் கலை இப்போது சொல்ல மறந்த கலை.

அடுத்து…. நாட்டுதும் யாம் ஓர்

25 August, 2014

வாசித்தல் பற்றிய செய்தி

09.08.2014 - வாசி... வாசி... தலைப்பிட்ட வாசித்தல் பற்றிய பதிவினைப் பார்க்கவும். அதே கருத்தை தமிழக உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். அதுபற்றிய செய்தி இதோ.



23 August, 2014

கால வகையினானே-2,



      தனித்தமிழ் ஆர்வலர் திருமிகு அருளி அவர்களின் சொற்பொழிவினைக் கேட்கும் வாய்ப்பு இருபது-முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எனக்குக் கிடைத்தது. ஆங்கிலச் சொற்களில் பலவற்றிற்குத் தமிழ்தான் வேர் என்று கூறினார்.  பார் (bar) எனும் ஆங்கிலச் சொல்லின் வேர்ச்சொல் தமிழ் என்றும் கூறியவர், அதனை விளக்கிய விதம் இன்னும் என் நினைவில் இருக்கிறது.

      “BAR என்பதற்கு மது அருந்தும் இடம் என்றும், கம்பி அல்லது (இரும்புத்)தடி (IRON BAR) என்றும் ஆங்கிலத்தில் பொருள் உண்டு. தொடக்கக்காலத்தில் மது விற்பனைச் செய்யும் இடத்தில் மது அருந்த வருவோர்  மதுமயக்கத்தில் எவ்விதக் குழப்பமும் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக, குறுக்காக இரும்பினால் ஆன தடியைக் கட்டிவைத்து, உள்ளே புகாமல் தடைசெய்தனர். இரும்புத்தடி (IRON BAR) கொண்டு தடைசெய்யப்பட்ட இடம் என்பதால் அது BAR என அழைக்கப்பட்டது. இரும்புத்தடிக்கு, தமிழில் கடப்பாரை எனும் பெயர் வழக்கில் உண்டு. ஔவையார் தமது நல்வழியில் இனியவைக் கூறல் குறித்து கூறுவது -

            வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்
            பட்டுருவுங் கோல்பஞ்சில் பாயாது-நெட்டிருப்புப்
            பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
            வேருக்கு நெக்கு விடும்.

      இங்கு நெட்டிருப்புப் பாரை என்பது, இரும்பினால் ஆன கடப்பாரை என்பது அறிந்த உண்மை. இந்த இருப்புப்பாரை எனும் சொல்தான், IRON BAR என ஆகியது. எனவே பார்(BAR) எனும் ஆங்கிலச் சொல்லிற்கு வேர்ச்சொல் தமிழின் பாரை ஆகும்”. இது திருமிகு. அருளி அவர்கள் வழங்கிய தமிழ் அகழ்வு.

      தற்போது பெரிதும் பேசப்பட்ட வேட்டிக்கு வருவோம். நீன்டு நெய்த ஆடை வெட்டப்படுவதால் வேட்டி எனப்பெயர் பெற்றது என்று என் தமிழாசிரியர் எனக்குக் கற்பித்தார். அது சரி என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆனால், ஒரு வார இதழில் வேட்டி என்பது வேஷ்டி எனும் வடசொல்லின் தமிழ்ப்பெயர்ப்பு என்று ஒருவர் எழுத, அதனை மறுத்து மற்றொருவர் வேடு என்பதற்கு மறைத்தல் என்று பொருள். தன் அங்கத்தை மறைத்து கட்டப்பட்ட ஆடையானதால் அது வேடு எனவாகி பின்னர் வேட்டி எனவாகிற்று என்று எழுதியிருந்தார். அதுவும் முற்றிலும் சரியே. எனவே வேஷ்டி என்பதின் வேர்ச்சொல் வேட்டி எனும் தமிழ்ச்சொல்லே.

      சென்ற மாதம், திருச்சியில் நடைபெற்ற ஒரு சொல்லரங்கிற்குச் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது. அது வேறொரு துறையைச் சார்ந்த, பொதுவாக கடவுள் மறுப்புக் கொள்கையாளர்களால் ஒதுக்கப்படும்,   ஒரு துறையைச் சார்ந்த சொல்லரங்கு. அதுபற்றி இங்கு எழுதவில்லை. ஆனால் அதில் உரையாற்றிய ஒருவர் ‘பசுவை பா பா (BA BA) என்று கூப்பிட்டால்தான் வரும். பா பா (PA PA)  என்று கூப்பிட்டால் ஏறெடுத்தும் பார்க்காது, ஆனால் தமிழில் ப (PA) உண்டே தவிர ப (BA) என்ற எழுத்து இல்லை. ஆனால் சமஸ்கிருத  மொழியில் ஒலிக்கேற்ப நான்கு ப உண்டு” என்றார். அவர் சமஸ்கிருதத்தைப் போற்றிப் புகழ அதைக்கூறியிருக்கலாம். அதற்காக அவர் தமிழைக் கையிலெடுத்திருக்கலாம்.

      ஆனால் அவர் சொன்னதில் ஒரு உண்மை என்னவெனில், நாம் பேச்சு மொழியில் ஒலிக்கும் எல்லாப் பதத்திற்கும் வரிவடிவில் எழுத்துக்களைக் கொண்டிருக்கவில்லை என்பது உண்மையே. இன்றைய அறிவியல் மற்றும் பொருளியல் வளர்ச்சியில், புதிது புதிதாகச் சொற்களை உருவாக்கி அதைத் தமிழாக்கிக் கொள்கிறேம். கணிணியும், பேருந்தும் இன்று எவர்க்கும் புரியும் புதியத் தமிழ் சொற்கள். இது தொல்காப்பியக் காலத்திலோ அல்லது நன்னூல் காலத்திலேயோ புழக்கத்தில் இருந்த சொற்கள் அல்ல. இன்று பேச்சு அல்லது எழுத்தில் உள்ள பெரும்பாலான சொற்கள், தொல்காப்பியக் காலத்தில் இல்லாதவையே. தமிழ் மொழிக்கே உரிய எண்களை நாம் பயன்படுத்துவதில்லை. தமிழ் அறிஞர்களைத் தவிர வேறு யாருக்கும் அது தெரியாது. ஆனால் கூர்ச்சர மக்கள் (குஜராத்தியர்கள்) தங்களது கணக்குகளை எழத தங்களது மொழியில் உள்ள வரிவடிவ எண்களையே பயன்படுத்துகிறார்கள். ஆனால் நாம் இரண்டாயிரம் ஆண்டிற்கு முற்பட்ட, பயன்பாட்டில் இருந்த தமிழ் எண்களை விட்டொழித்துவிட்டு உலகொடு ஒத்துவாழ, அரேபிய எண்களைப் பயன்படுத்துகிறோம்.

      நாம் அதே சமயம், சில ஒலிகளுக்குரிய, ஆனால் தமிழில் வரிவடிவம் இல்லாத எழுத்துக்களுக்கு, நம்மிடம் உள்ள, ஏறக்குறைய ஒத்த ஒலியுடைய எழுத்துக்களைப் பயன்படுத்துகிறோம். அது சரியான உச்சரிப்பைத் தருமா என்பது கேள்விக்குறியே. எடுத்துக்காட்டாக, மேலே குறிப்பிட்ட பார் (bar) என்பதற்கும் பார் (par) என்பதற்கும் பா எனும் வரிவடிவத்தை மட்டுமே பயன் படுத்துகிறோம். பொதுவில் நாம் சொல்லுவது என்னவென்றால், பார் (bar) எனும் சொல் தமிழே அல்ல எனும்போது, பா(ba) என உச்சரிக்க அவசியம் எழவில்லை என்பதே.

      அவசியமா இல்லையா என்பதைவிட, நம் தமிழில் அந்த ஒலிக்குறிப்பிற்கு வரிவடிவம் இல்லை என்பதுதான் உண்மை. அதுபோல், வேஷ்டி எனும் சொல்லில் ஷ் எனும் ஒலிக்குறிப்பிற்கு வரிவடிவம் தமிழில் இல்லை என்பதால், ட் எனும் வரிவடிவத்தைப் பயன்படுத்துகிறோம். வேட்டி தமிழ்ச் சொல் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால் வேட்டி என்பதும் வேஷ்டி என்பதும் உச்சரிப்பில் வித்தியாசப்படுகிறது அல்லவா?

      அங்கக் குறிப்புகள் – ஓசை – ஒலியெழுப்பல் – குரல் – குழு வார்த்தைகள் – பொது வார்த்தைகள் – ஒலி எழுத்துக்கள் – வரி எழுத்துக்கள் - சொற்கள் – மொழி – இலக்கியம் - இலக்கணம் என மொழியானது பரிணாம வளர்ச்சி அடைகிறது. சில சொற்கள் வழக்கொழிகின்றன, சில சொற்கள் வாழ்கின்றன, சில சொற்கள் புதிதாய் பிறக்கின்றன. காலத்திற்கேற்ப வரிவடிவங்கள் மாற்றம் அடைகின்றன. ஆனால் தமிழில் ஒலிகளுக்கேற்ப வரிவடிவங்களைப் புதிதாக வடிக்கவில்லை என்பதே உண்மை. தொன்றுதொட்டு வரும் எழுத்துக்களுக்கு மட்டுமே வரிவடிவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

      நம் தமிழறிஞர்களின் கருத்து என்னவெனில், புதிய அல்லது வேற்று மொழிச் சொற்களுக்கு, தமிழில் ஒலிக்குறிப்பு இல்லா எழுத்துக்களுக்கு, தமிழ்ச் சொற்களைப் புதிதாக ஆக்கம் செய்துவிட்டால் போதும் என்பதுதான். ஆக்சிஜன் என்பதை உயிர்வளி என்று மொழியாக்கம் செய்தீர்கள். நைட்ரஜன், பென்சீன், சோடியம் என்பதை எப்படி மொழியாக்கம் செய்வீர்கள் அல்லது எப்போது செய்வீர்கள். இன்று மழலைகளுக்குச் சூட்டப்படும் பெயர்களில் பெரும்பாலானவை ‘இடுகுறிப் பெயர்களாகவே’ உள்ளன. லத்தீஷ், மித்ரேஷ், லக்ஷ்மி, லோகித் இவையெல்லாம் தமிழர்கள் தங்கள் மழலைகளுக்குச் சூட்டிய பெயர்கள். அனைத்துச் சான்றிதழ்களிலும் பதியப்பட்ட பெயர்கள். இதை எப்படி மொழியாக்கம் செய்யமுடியும்.

      தமிழ் மொழியின்மேல் பற்றிருந்தால் தமிழனாக இருந்தால் நல்ல தமிழில் பெயர் சூட்டட்டும் என்று கூறும் அறிஞர் பெருமக்கள் இருக்கிறார்கள். தமிழ் நாட்டிலேயே பிறந்து, வளர்ந்த முகமதியப் பெண், நூர்ஜகான் என பெயர்க் கொண்டிருந்தால் அவர் தமிழர் இல்லை என்று சொல்ல முடியுமா? அல்லது  தமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்து தமிழ் பேசும் ஒரு கிறுத்துவ மகன் அகஸ்ட்டின் என பெயர்க் கொண்டிருந்தால் அவர் தமிழர் இல்லை என்று சொல்ல முடியுமா?

      இன்று தமிழன் என்பவன் எவ்வொரு தனி மதத்தையும் சார்ந்திருக்கவில்லை. அனைத்து மதங்களையும் உள்ளடக்கியே தமிழினம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தத்தமது மதக் கடவுள்கள், அருளாளர்கள், வழிநடத்தியோர் ஆகியோரின் பெயர்களைத் தமது பிள்ளைகளுக்குச் சூட்டி மகிழ்கின்றனர். அப்பெயர்கள் தமிழ் வழிப் பெயர்கள் இல்லை என்பதும் உண்மை. ஆனால் அவர்களைப் அப்பெயர் சொல்லித்தானே அழைக்க வேண்டியிருக்கிறது. நூர்ஜகான் என்பதை நூர்சகான், அகஸ்ட்டின் என்பதை அகசுட்டின், லத்தீஷ் என்பதை லத்தீசு, இஸ்மாயில் என்பதை இசுமாயில், ஜுலியஸ் என்பதை சூலியசு என்றெல்லாம் தமிழ் வரி எழுத்துக்களாக்கி அழைத்தால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? அது தனி மனித சுதந்திரத்தைப் பறிப்பதுபோல் ஆகாதா? அப்படி வரிவடிவாக்கி எழுதினாலும் நல்ல தமிழ்ச் சொற்களாகிவிடுமா? [எனது பிள்ளைகளுக்கு நான் நல்லதமிழில்தான் பெயர் சூட்டியுள்ளேன் – கவிநிலவன் – தென்றல்தேவி]

      இதில் உண்மை என்னவெனில், இவ்வாறான இடுகுறிப் பெயர்களை மொழியாக்கம் செய்தல் எளிதல்ல. அவை எளிதல்ல என்பதைவிட அது அவர்களின் தனிமனித உரிமையைப் பறிக்கும் செயலாகும். சங்க காலந்தொட்டு பிறமொழிக்கலப்பு என்பது வடமொழியாக மட்டுமே இருந்தது. ஆனால் இன்று உலகமொழிகளாக இருக்கிறது. மாறிவரும் உலகில் அவற்றை ஏற்க வேண்டிய நிலையும் சூழலும் உள்ளது.

      அவ்வாறெனில், சில சொற்களை மொழிபெயர்க்கலாம், சில சொற்களை ஒலிபெயர்க்கலாம். எல்லவற்றையும் மொழிபெயர்ப்பதோ அல்லது ஒலிபெயர்ப்பதோ இயலாத செயல். ஒலிபெயர்ப்பு எனும் நிலைவரும்போது, அனைத்து ஒலிகளுக்கும் தமிழில் வரிவடிவம் இல்லை என்பதே உண்மை. அதனால் தான், பிறமொழி எழுத்துக்களில் சிலவற்றை (ஜ, ஸ, ஹ, ஷ) ஒலிக்காகப் பயன்படுத்தி வருகிறோம்.

      எனது விண்ணப்பம் என்னவெனில், பிறமொழி எழுத்துக்களைப் பயன்படுத்துவதைவிட, ஏன் நாமே புதிய எழுத்துக்களைத் தமிழில் ஏற்படுத்தக்கூடாது. இவ்வாறு கருத்து சொன்னால், என்னை அடுமடையன் என்று சிலர் சொல்லக்கூடும். ஆனால், தமிழானது, காலந்தோரும் மாறுதல் பெற்றே வந்துள்ளது.


1.   தொல்காப்பியக்கால தமிழ்ச் சொற்கள் அனைத்தும் இன்றில்லை.
2.   இன்றுள்ள நல்ல தமிழ்ச் சொற்கள் அன்று இல்லை (எ.கா. கணிணி)
3.   தொல்காப்பியக்கால தமிழ் வரிவடிவம் இன்றில்லை.
4.   ஏ, ஓ போன்ற நெடில் ஒலிக்குறிப்புகளுக்கு தனி வடிவம் அன்றில்லை.
5.   மெய்யெழுத்துக்களுக்கு மேற்புள்ளி அன்றில்லை.
6.   சார்பெழுத்துக்கள் தொல்காப்பியத்தில் மூன்று, ஆனால் பின்னர் வந்த நன்னூலில் பத்து.
7.   தமிழானது, கிரந்தம், வட்டெழுத்து என பல்வேறு வரிவடிவங்களைக் கொண்டிருந்தது.
8.   தமிழுக்கென்று நிறுத்தற்குறிகள் ( . , ; : “ “ ?) அன்றில்லை.
9.   உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுள் இளங்கோவிற்கு முன்பு கிடையாது.
10.  உரைநடைத்தமிழ் வீரமாமுனிவர் ஏற்படுத்தியது.
11.  பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
12.  தமிழின் உயிர்மெய் எழுத்துக்கள் அத்தனையும் பயன்படுத்தப்படுவதில்லை. எ.கா. -  ங, ஞ, ய போன்றவற்றின் உயிர்மெய் வரிசையில் உள்ள எழுத்துக்கள்
13.  இல்லாத ஒலிக்குறிப்புகளுக்கு, வடமொழியின் வரிவடிவங்கள் பெரும்பாலோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, தமிழானது காலந்தோறும் ஏதேனும் மாற்றங்களைப் பெற்றே வளர்ந்து வருகிறது. அதனால்தான் தமிழை “வளர்தமிழ்” என்று வினைத்தொகையால் அழைக்கிறோம்.

      ஆக, எனது வேண்டுகோள் எல்லாம், தமிழர்களின் தற்போதைய பயன்பாட்டில் உள்ள அனைத்து ஒலிக்குறிப்புகளுக்கும், தமிழில் வரிவடிவங்கள் உருவாக்க வேண்டும் என்பதுதான். எப்படி உருவாக்குவது என்பதற்கு தொல்காப்பியத்தைத் துணைக் கொள்ளுங்கள். அதாவது கோடுகள், கொம்புகள், சுழிகள் முதலியவற்றை அகரமெய்யில் இட்டு உயிர்மெய் எழுத்துக்கள் உருவாக்கியதுபோல், தமிழ் அறிஞர்கள், புதிய வரிவடிவங்களை உருவாக்கவேண்டும். சுழி, பிறை, பொட்டு என்பனவற்றை இணைத்து உருவாக்குதல் நலம். அவ்வாறு உருவாக்கும் வரிவடிவங்களை பிறழ்மொழி எழுத்து அல்லது தமிழ்ப்போலி அல்லது ஒலிப்போலி எனும் தலைப்பில் தொகுத்துவிடுங்கள். பொதுவாக, வல்லின எழுத்துக்களுக்குதான் மெல்லின ஓசையுடைய வரிவடிவங்கள் தேவைப்படுகின்றன.


பிறழ்மொழி எழுத்து அல்லது தமிழ்ப்போலி அல்லது ஒலிப்போலி –
வரிவடிவம் தேவைப்படுபவை
வல்லின எழுத்துக்கள்
மெல்லின ஓசை வேண்டுபவை
(ஓசையின் பொருட்டு ஆங்கில எழுத்துக்கள்)
Ga, Ha
Sha, Ja
Da
Dha
Ba, Fa
ரகரம் இருப்பதால் தேவையில்லை


      மேலே உள்ளவை ஒரு எடுத்துக்காட்டிற்காக தொகுக்கப்பட்டவை. இவையன்றி வேறு ஏதேனும் ஒசைக்கு வரிவடிவம் தேவை என்றாலும் அறிஞர் பெருமக்கள் ஆய்தல் வேண்டும். இவ்வாறு செய்வதால் தமிழ் தனது இயல்பை இழந்துவிடாது. மாறாக பிறமொழி எழுத்துக்களைக் கடன்பெற்று பயன்படுத்துவதில் இருக்கும் சுமை நீங்கும். தமிழில் மெல்லினத்திலும், இடையினத்திலும் மெல்லிய வேறுபாட்டிற்காக முறையே, ந, ண, ன மற்றும் ள, ல இருக்கும் நிலையில், வல்லினத்தில் உள்ள எழுத்துக்களுக்கு வேறுபாட்டினை உணர்த்திட ஏன் புதிய எழுத்துக்களை உருவாக்கக் கூடாது.

      அவ்வாறு உருவாக்கும்போது, எழுத்தின் வடிவம் மாறாமல், ஆனால் சிறு குறியீடுகளை மட்டும் பயன்படுத்தி, உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக, ‘க’வின் இடையே ஒரு சிறு குறுக்குக்கோடு இடுவதன் மூலம் () அல்லது சிறு சுழி இடுவதன் மூலம் (0க) அதன் மற்றொரு ஒலிவடிவத்தை ஏற்படுத்தலாம். இதை அறிஞர்பெருமக்கள் ஆராய்ந்து முடிவு செய்யவேண்டும்.

      ஒரு கருத்தாக, இவ்வாறு செய்வது தமிழ் எழுத்துக்களைக் கணிணியில் உருவாக்குவதில் சிக்கலாகும் என சிலர் கூறமுற்படுவர். அதை தமிழ்க் கணிணி வல்லுனர் இடையே விட்டுவிடுங்கள். வேண்டியதைச் செய்துதருவர். தற்போது கணிணியில் இருக்கும் நூல்கள் இம்மாற்றத்தால் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் கூறுவர். அதுவும் சரியன்று. இருப்பதை மாற்றச் சொல்லவில்லை. புதிய வடிவங்கள், தற்போது இல்லாத ஓசை வடிவங்களுக்கு மட்டுமே.

        இக்கட்டுரை, பலரால் ஒதுக்கப்படலாம், தூற்றப்படலாம், விலக்கப்படலாம் அல்லது வெகு சிலரால் ஏற்கவும்படலாம். கருத்துச் சுதந்திரம் எவர்க்கும் உண்டு. முன்பே கூறியதுபோல் நான் தமிழை மெத்தப் படித்தவன் இல்லை. நான் படித்த துறையே வேறு. தமிழ்  என்மொழி என்பதால், என் மொழியின் வளர்ச்சியில் எனக்கும் பங்குண்டு என்பதால், என் கருத்தை இங்கு பதிவு செய்திருக்கிறேன். அவ்வளவுதான். விதைப்பது எல்லாம் விளைவது இல்லை. ஆனால் நிச்சயம் உரமாகும்.

            "பழையன கழிதலும் புதியன புகுதலும்
            வழுவல கால வகையினானே'



அடுத்து … சொல்ல மறந்த கலை

18 August, 2014

கால வகையினானே . . .



      இந்த பிரபஞ்சம் அகண்டு விரிந்த அளவிலா முடியாத அற்புதம். இதில் மீச்சிறு துளிதான் இந்த பூமி. இதில் மனித இனம் தோன்றியது சுமார் பத்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் என்பது அறிவியlலாளர்கள் கருத்து.  [ ஆனால் 1.4 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் தாடை எலும்புகள் இந்தியாவில் சிவாலிக் குன்றுகளிலும் வடமேற்கு கென்யா நாட்டிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக – தமிழ் விக்கி இணையதளத்தில் பதியப்பட்டுள்ளது]. இதில் தமிழ் இனம் எப்போது தோன்றியது என்பதில் பல்வேறு கருத்துக்கள் இருப்பினும், தமிழ் இனம் மிகத் தொன்மையானது என்பதில் கருத்துவேறுபாடு எவர்க்கும் இல்லை.  

      உலகில் தொன்மையான மொழிகளில் ஒன்றாகத் தமிழ் இருக்கிறது. எந்த மொழியும் ஒலி வடிவமும் வரிவடிவமும் சிறப்புறக் கட்டமைக்கப்பட்டிருந்தால் மட்டுமே அது தன்னை நிலை நிறுத்திக் கொண்டு நீடு வாழ முடியும். தமிழின் “தொல்” காப்பியம் எது என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் “தொல்” இலக்கண நூல் என்று தொல்காப்பியத்தைக் குறிப்பிடுகிறோம். வாழ்வின் சூழலுக்கு ஏற்ப அதனை நெறிப்படுத்த விதிமுறைகள் வகுக்கப்படுகின்றன. அதுபோல், இலக்கியம் கண்டபின்புதான் இலக்கணம் வகுக்கப்பட்டிருக்க வேண்டும். இலக்கியம் கண்டபின் இலக்கணம் கண்டது தொல்காப்பியம். எனவே, தொல்காப்பியத்திற்கு முன்பே தமிழ் செம்மொழியாக இருந்திருக்கிறது.

      ஆனால் அன்று இருந்த தமிழ், அது ஒலி வடிவமாக இருக்கட்டும் அல்லது வரி வடிவமாக இருக்கட்டும், காலந்தோறும் மாற்றம் அடைந்துகொண்டேதான் இருக்கிறது. அன்றைய இலக்கியங்களில் பயின்று வந்துள்ள சொற்கள் ஒலி வடிவமாக பேச்சு மொழிக்குப் பயன்படுத்தப்பட்ட சொற்களாகத்தான் இருந்திருக்க முடியும். அவை இலக்கண வரம்பிற்கு உட்பட்டு செய்யுட்களில் அளபெடுத்தோ, குன்றியோ அல்லது புணர்ந்தோ சிறு மாற்றம் அடைந்திருக்கலாமேயன்றி, அவைதான் பேச்சு வழக்கில் இருந்திருக்க முடியும். காலந்தோரும் ஏற்பட்ட மாற்றங்களினால் அச் சொற்கள் மாற்றம் அடைந்திருக்க வேண்டும், அல்லது விலக்கியிருக்க வேண்டும் அல்லது புதிய சொற்கள் படைக்கப்பட்டிருக்க வேண்டும். அதுபோலவேதான் எழுத்துக்களும் காலந்தோறும் மாற்றம் அடைந்திருக்கின்றன.

      பொதுவுடைமைக் கொள்கையில் பயன்படுத்தப்படும் வாக்கியம் – “மாற்றம் என்ற சொல்லைத் தவிர மற்ற அனைத்தும் மாறக்கூடியது”. எனும் புகழ் பெற்ற வாக்கியமாகும். எனவே காலந்தோறும் “மாறுதல் என்பதில் மாறுதல் இல்லை”.

      இதைத்தான் பவனந்தி முனிவரும் தமது நன்னூலில் –
            "பழையன கழிதலும் புதியன புகுதலும்
            வழுவல கால வகையினானே'

தொல்காப்பியர் தமிழ் எழுத்துக்களை வகைப்படுத்தும்போது –
      முதலெழுத்துக்கள் – உயிர் (12) + மெய் (18) = 30 என்றும்,
   சார்பெழுத்துக்கள் – ஆய்தம், குற்றியலிகரம், குற்றியலுகரம் = 3 என்றும், வகைப்படுத்துகிறார். மெய்யெழுத்துக்கள் உயிரொடு இணைந்து, புள்ளி நீங்கி அகர ஒலி பெறுதலும், ஏனைய உயிரெழுத்துக்களுடன் இணையும்போது, கோடு, சுழி முதலியனப் பெற்று அவற்றின் ஒலியினை இணைந்து பெறுவதாகவும் உரைக்கிறார். எனவே, உயிர்மெய் எழுத்துக்கள் 12 x 18 = 216.

      நான் தமிழை மெத்தப்படித்தவன் இல்லையென்றாலும், எனக்கு எழும் சந்தேகம் என்னவெனில், உயிர்மெய் எழுத்திற்கு வரிவடிவம் உரைக்கப்படும் அதே வேளையில், அதற்கு மூலமான உயிர் எழுத்திற்கும் மெய்யெழுத்திற்கும் வரிவடிவம் உரைக்கப்படவில்லை.  சார்பெழுத்து எனப்படும் எழுத்து வகைகளில், ற்குமட்டும் வரிவடிவம் உரைக்கப்படும் அதே வேளையில் பிற சார்பெழுத்தான குற்றியலிகரம், குற்றியலுகரத்திற்கு வரிவடிவம் உரைக்கப்படவில்லை. ஏன் எனில், மேற்சொன்ன உயிர் மற்றும் மெய் எழுத்துக்களுக்கு வரிவடிவம் என்பது அப்போது வழக்கத்தில் உள்ளதை அப்படியே எடுத்தாள்வதாக இருந்திருக்கலாம். அவ்வாறெனில், குற்றியலிகரத்திற்கும், குற்றியலுகரத்திற்கும் அக்காலத்தில் தனிக்குறியீடு இருந்திருக்க வேண்டும் என்பது தின்னம். அவை காலப்போக்கில் விடுபட்டுப்போயிருக்கலாம் அல்லது விடுவிக்கப்பட்டிருக்கலாம்.  தொல்காப்பியரின் கருத்துப்படி, மாத்திரை என்பது இரண்டிற்கு மிகக்கூடாது. ஆனால் கால் மாத்திரை அளவில் கூட எழுத்துக்கள் உச்சரிக்கப்படவேண்டும் எனும்போது அத்தகைய வேறுபாட்டினை எளிதில் உணர்த்த, எழுத்துக்களின் வரிவடிவங்களில் சிறு மாற்றங்கள் இருந்திருக்கலாம். அவை காலப்போக்கில் வழக்கொழிந்து போயிருக்கலாம். காலந்தோரும் தமிழின் வரிவடிவம் மாறிக்கொண்டேதான் இருக்கிறது.



      தமிழ் நெடுங்கணக்கானது, எழுத்துக்களை, பின்வருமாறு வகைப்படுத்துகிறது:-
முதலெழுத்து, சார்பெழுத்து, உயிரெழுத்து, மெய்யெழுத்து, ஆய்த எழுத்து, குற்றியலிகரம், குற்றியலுகரம், உயிர்மெய் எழுத்துகள், உயிரளபெடை, ஒற்றளபெடை, ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம், வல்லினம், மெல்லினம், இடையினம், சுட்டெழுத்து, வினா எழுத்து, போலி எழுத்து என்பன.
     
      இவற்றில் அளபெடைகள் – மாத்திரை நீண்டும், குறுக்கங்கள் – மாத்திரைக் குறைந்தும் ஒலிக்கப்படவேண்டும் என்பதால், அவற்றிற்கும் அக்குறிப்பிட்ட எழுத்துக்களின் வரிவடிவங்களில் சிறு மாற்றங்கள் இருந்திருக்கலாம்.

மாமுனிவர்


      மேற்புள்ளியிடப்பட்ட எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் என்பது தொல்காப்பியம் காலந்தொட்டே இருந்துவந்தாலும், இடையில், மெய்யெழுத்துக்கள் புள்ளியின்றே எழுதப்பட்டுவந்துள்ளன. வீரமாமுனிவர் காலத்தில்தான் மீண்டும் மெய்யெழுத்துக்களுக்கு மேல் புள்ளிவைத்தல் தொடங்கியதாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன. பேச்சு மொழியிலிருந்து சற்று வேறுபட்டு எழுத்துநடை இருந்தாலும், அதனை உரைநடை வடிவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தவர் வீரமாமுனிவர்தான். நிறுத்தற்குறிகளை வழக்கில் கொண்டுவந்தவரும் அவர்தான். “எ” எனும் வரிவடிவம் “எ” மற்றும் “ஏ” இரண்டிற்கும் பொதுவாக இருந்ததை, கீழே நீட்டி “ஏ” வையும், “ஒ” எனும் வரிவடிவம் “ஒ” மற்றும் “ஓ” இரண்டிற்கும் பொதுவாக இருந்ததை, கீழே சுழித்து “ஓ” வையும், வழக்கில் கொண்டுவந்தவரும் அவர்தான்.

      பின்னர், தந்தைப் பெரியார் அவர்களின் எழுத்துச் சீர்திருத்தம், முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும், கீழ்வரும் வடிவங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று வழக்கில் உள்ளன.

பெரியாரின் வரிவடிவம்

      எனவே காலந்தோரும், எழுத்துக்கள் ஒலியிலும், வரியிலும் மாற்றம் பெற்றுக்கொண்டேதான் இருக்கின்றன.

      “சரி, என்ன சொல்ல விழைகிறீர்கள்?” என்று கேட்பது காதில் விழுகிறது.



அடுத்தும் .. கால வகையினானே-2…

15 August, 2014

என் தமிழ் ஆசிரியர்கள்-2



 
என் ஆசிரியர்களுக்கு


      இந்த வலைப்பூவைத் தொடர்ந்து வாசித்துவரும் என் மகள், ஒரு நூல் “இரட்டைக் காப்பியங்கள்”. மற்ற நூல்களின் பெயர்கள் ஞாபகம் இல்லையா என்று கேட்டாள். அவளுக்காக, மற்ற மூன்று நூல்களின் பெயர்களையும் நினைவிலிருந்து வரிசைப்படுத்துகிறேன்.

-                                                                            சிற்பி பாலசுப்ரமணியன் அவர்களின் -  “நிலவுப்பூக்கள்”
-                                                                            கவிதாயினியின் – “கவிதை மலர்கள்”
-                                                                             உலகப்பெரும் கவிஞர்கள் – (ஆசிரியர் நினைவில்லை).

      ஆனால் மிகவும் வருத்தமானது என்னவென்றால், அதில் ஒருபுத்தகம் கூட தற்போது என்னிடம் இல்லை.  ஓலை வேய்ந்த வீட்டில், மரப்பெட்டியில் வைத்திருந்தேன். நான்கு நூல்களையும் கரையான் பசியாறிவிட்டது. வேறொரு நிகழ்வில் பரிசாகப் பெற்ற, மொழியாக்கம் செய்யப்பட்ட ஒரு கதைப் புத்தகம், படித்துவிட்டு தருகிறேன் என்று வாங்கிச் சென்றவரால் களவாடப்பட்டது. கரையானின் பிடியிலிருந்து காப்பாற்றி பல நூல்களைப் பதிப்பித்த தமிழ்த் தாத்தா வாழ்ந்த பூமியில்தான் நானும் இருந்திருக்கிறேன். இழந்திருக்கிறேன்.

      ஆனால் நான் செய்த பேறு சிறு வயதிலேயே இலக்கிய புத்தகங்களைப் பரிசாக பெற்றுச் சொந்தமாக்கிக் கொண்டதுதான். ஏனென்றால், அன்றையச் சூழல், பள்ளிப் புத்தகங்களையே வாங்கமுடியாமல் இருந்தேன். எனவே, தமிழ் இலக்கியங்களை வாசிக்கும் தகுதி பெறாமலேயே சொந்தமாக வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

      எனது அடுத்த தமிழாசிரியர், திரு நாராயணசாமி அவர்கள். தமிழ் இலக்கியமும் இலக்கணமும் சொல்லிக் கொடுத்தவர். தமிழை வாசிக்கச் சொல்லி வாய்ப்பளித்தவர். செய்யுளைப் பதம் பிரித்து உரைத்து அதை எளிமையாக்கியவர்.

      அதற்கு அடுத்த வகுப்பின் தமிழாசிரியர் (பெயர் வேண்டாம்). கடனே என்று பாடம் நடத்தியவர். அவரிடம் பெரிதாக எதையும் கற்கவில்லை.

      பின்னர் வந்தவர், திரு இராமசாமி. அப்போது இரண்டு இராமசாமிகள் இருந்தனர். இருவரும் தமிழாசிரியர்கள். உடையை வைத்து அடையாளப் பெயர் சூட்டப்பட்டது. ஒருவர் (வேட்டி அணிந்தவர்) வேட்டி-இராமசாமி. நன்றாகப் பாடம் நடத்துவார் என்று அவர் வகுப்பு மாணவர்கள் கூறுவர். மற்றொருவர் (முழுக்கால்சட்டை அணிந்தவர்) பேண்ட்-இராமசாமி. எங்கள் வகுப்பிற்கு கற்பித்தவர் திரு. பேண்ட்-இராமசாமி.

      திரு. பேண்ட்-இராமசாமி, அவர்தான் தேமா புளிமாவை அழகாக நடத்தியவர். வெண்பாவின் இலக்கணத்தை நடத்தியதோடு, வெண்பா எழுதும் முறையையும் சொல்லிக் கொடுத்தவர்.

      செப்பலோசை உடையதாய், ஈற்றடி முச்சீராய், ஏனைய அடி நாற்சீராய், இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் விரவி வர, நாள், மலர், காசு, பிறப்பு எனும் ஓரசைச் சீரால் முடிய வேண்டும் – என்று பாடம் நடத்தியவர்.

      அலகிட்டு வாய்ப்பாடு கூறுதலில் எங்கள் வகுப்பு மாணவர்கள் எப்பொழுதும் முழு மதிப்பெண் பெறுவர். புண்கணீர் பூசல் தரும் – என்று நடத்தியபோது, கண்ணில் நீர் கசியப் பாடம் நடத்தியவர். நீண்டு நெய்த ஆடை, வேண்டிய அளவிற்கு வெட்டப்பட்டதால் வேட்டி என்றும், துண்டிக்கப்பட்டதால் துண்டு என்றும் பெயர்வரக் காரணம் என்றும் தமிழரின் பாரம்பரிய உடையைச் சிறப்பித்துக் கூறியவர்.

      தமிழாசிரியர்கள் என்று வகைப்படுத்தினாலும், நான் தமிழ் வழிக் கல்வியில் பயின்றதால், பிற பாடங்களைத் தமிழில் நடத்திய ஆசிரியர்களும் அந்தப் பட்டியலில் வருவர். அவர்களில் சிலர்:

1.   கணிதப்பாடத்தை எளிமையாக நடத்தியவர். மாணவர்களை அடிக்காமலேயே அவர்களைத் தமது நையாண்டிப் பேச்சால் அடக்கி வைத்தவர் – திரு. சம்பத் – கணித (மேதை) ஆசிரியர்.
2.   வரலாற்றுப் பாடங்களை நாடக உரையாடலுடன் நடத்துவதுடன், ஆங்கில இலக்கணத்தையும் தமிழில் நடத்தியவர் – திரு. திருமூர்த்தி – வரலாறு பாட ஆசிரியர்.
3.   பிற பாடங்களைப் பயிற்றுவித்த திருமதி  இலட்சுமி, திருமதி ஜமுனா பேகம், திரு கிளமெண்ட், திரு அனந்தசயனன், திரு பொய்யாடாமூர்த்தி, திரு சுபாசு, திரு சுடலையாண்டி போன்றோர்.

      அகழ்வில், சொந்தக் கதையைப் பதிவிட்டிருந்தாலும், பழைய நினைவுகளைப் பதிவு செய்ய இது ஒரு வாய்ப்பு அல்லவா?. ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் எனக்குப் பாடங்களை நடத்திய ஆசிரியர்களையும் அவர்தம் நினைவுகளையும் பதிவிட முடிகிறது என்றால், அவர்கள் ஆசிரியர்களாகப் பாடம் நடத்திய முறை அவ்வாறு இருந்தது.

      ஆனால் இன்று மாணவர்கள் தமது ஆசிரியர்களை அவ்வாறு பெயர் குறிப்பிட்டு கூறுவார்களா என்பது கேள்விதான். ஏனென்றால், இன்று ஆசிரியர் – மாணவர் உறவு வணிகமாகவும், ஆங்காங்கே வரும் செய்திகளில் ஆசிரியர்களின் உறவுநிலைப் பிறழ்வும், பெற்றோரின் பார்வையில் ஆசிரியரின் கண்டிப்பு என்பது தண்டனைக்குரிய குற்றமாகவும் விரவிக்கிடக்கின்றன.

      ஆசிரியர்கள் தமது பண்பு நெறியிலிருந்து சிறிதும் விலகாமலும், மாணவர்கள் தமது ஆசிரியர்களைக் கல்விக் கடவுளாகவும், பெற்றோர்கள் தம் மக்களின் மீது வைக்கும் பாசம் கலந்த நம்பிக்கையைவிட, ஆசிரியர்கள் மீது மதிப்பு மிக்க மரியாதையையும் வைப்பார்களேயானால், கல்வியின் ஒழுக்கம் உயரும் என்பதில் ஐயமில்லை.



அடுத்து …  கால வகையினானே ..

13 August, 2014

என் தமிழ் ஆசிரியர்கள்



     ஒவ்வொரு மாணவனுக்கும் முதல் மொழி ஆசிரியர் அவரது பெற்றோர்தான். ஒவ்வொரு ஆசிரியருக்கும் முதல் மாணவன் கண்டிப்பாக அவரது பிள்ளைகளாக இருக்க முடியாது. ஆனால் ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் அனைத்து  மாணாக்கர்களையும் தங்களின் பிள்ளைகளாகத்தான் பார்க்கின்றனர். அப்படிப் பார்த்தால்தான் அவர்கள் ஆசிரியர்கள்.

     நான் எழுதும் ஒவ்வொரு எழுத்திலும் என் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். என் ஆசிரியர்கள் என்பது 1967 – 1979 காலத்தில் எனக்குக் கற்பித்தவர்கள்.

     புதுச்சேரியில் அப்போதெல்லாம் விரல்விட்டு எண்ணக்கூடிய பள்ளிகளே இருந்தன. அதுவும் அரசுப்பள்ளிகள் மட்டுமே. தனியார் பள்ளிகள் இரண்டு மட்டுமே என் நினைவிற்கு தெரிந்தவரையில் இருந்தன. அவை ஆங்கிலவழிக் கூடங்கள். அரசுப்பள்ளிகள் அனைத்தும் தமிழ்வழிக் கல்வியே.

     அது ஒரு ஆரம்பப் பள்ளி. ஐந்து வகுப்பு வரையில் மட்டுமே. முதலியார்பேட்டை எனும் ஊரில் இருந்தது. ஆரம்ப வகுப்பில் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களின் பெயர்கள் நினைவில் இல்லை. நான்காம் வகுப்பில் கற்பித்த ஆசிரியர் – திரு. பரமதயாளன். தனியாகத் தமிழ் ஆசிரியர் இல்லை என்றபோதும், அவர் தமிழும், தமிழ் வழியில் பிறபாடங்களையும் கற்பித்தார். புன்னகையின் புதல்வர்.  அவரே ஐந்தாம் வகுப்பிலும் ஆசிரியர். தமிழைக் கற்பித்தவர். அதே பள்ளியில், பயிற்சி ஆசிரியராக வந்த ஒரு ஆசிரியர் எங்கள் பாடங்களைப் பாட்டாக நடத்தினார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு எனத் தொடங்கும் அந்தத் திரைப்பாடலின் ஓசையில், தமிழ் இலக்கியங்களின் பெயர்களைக் கற்பித்தார். பலவரிகள் மறந்துபோனாலும், இந்த வரிகள் இன்னமும் என் நினைவில்.

     சிலப்பதிகாரம் தந்த இளங்கோ உண்டு – அந்த
     சிந்தாமணித் திருத்தக்க தேவருண்டு
     மணிமேகலையை இயற்றித்தந்த சாத்தனுண்டு
     மேலும் இங்கே கம்பன் காளிதாசனுண்டு

காப்பியங்களின் பெயர்களுடன் அவற்றின் ஆசிரியர்களின் பெயரையும் இணைத்து கற்பித்தார். அதுதான் எனக்கு முதல் இலக்கிய அறிவு என்றும் கூறலாம்.

     ஐந்தாம் வகுப்புடன் முடிவுற்ற அப்பள்ளியிலிருந்து விடுபட்டு, உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றலானேன். அந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து பதினோராம் வகுப்பு வரை கற்பித்தனர். அப்பொழுதுதான் அந்தப்பள்ளி கட்டிமுடிக்கப்பட்டு, திறப்பு விழாவிற்காக காத்திருக்காமல் செயல்பட தொடங்கியது. வேறொரு பள்ளியில் படித்த மாணவர்கள் ஏழாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரையில் அங்கு மாற்றப்பட்டனர். ஆனால் முதன்முதலில் புதிய மாணவர்களாக ஆறாம் வகுப்பில் அந்த பள்ளியில் நாங்கள் சேர்ந்தோம் என்பது மகிழ்விற்குரிய நிகழ்வு. அங்குதான் தமிழுக்கு என்று தனியாக மொழியாசிரியர்கள் கற்பித்தனர்.

     தமிழாசிரியையின் பெயர் – இராசலட்சுமி (இராஜலக்ஷ்மி). மாணவர்களைத் தமது பிள்ளைகளாகப் பாவித்த கன்னித்தாய். வாய்விட்டுப் படிக்கச் சொல்லி, வாசிப்பைத் திருத்துவார். ஒரு மெல்லிய சோகம் எப்போதும் அவரிடம் குடிக்கொண்டிருக்கும். அது ஏன் என்று அப்போது புரியவில்லை. இப்போது தெரியும்.

     அந்த ஆண்டின் இறுதியில் பள்ளிக்குத் திறப்பு விழா நடைபெற்றது. பள்ளிக்கு பொதுவுடைமைத் தலைவர் ப. ஜீவானந்தம் அவர்களின் பெயர் சூட்டப்பட்டது.

பொதுவுடைமை

     
என் பள்ளி

விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் இரண்டில் தேர்வுசெய்யப்பட்டு, நாவலர் நெடுஞ்செழியன் அவர்களிடமும், மக்கள் தலைவர் வ. சுப்பையா அவர்களிடமும் (முன்னவர் – தமிழக கல்வி அமைச்சர், பின்னவர் – புதுவையின் வேளாண் அமைச்சர்), புத்தகங்கள் பரிசாகப் பெற்றேன். பரிசாகப் பெற்ற புத்தகங்களை என் ஆசிரியையிடம் காண்பித்தபோது, அவர் தமது சோகம் கலைந்து, மகிழ்வுடன் என்னைப் பாராட்டியது இன்றும் என் நினைவில் வாழ்கிறது. பரிசாகப் பெற்ற புத்தகங்களில் ஒன்று – திரு வ.சுப. மாணிக்கனார் அவர்கள் திறனாய்வு செய்து எழுதியஇரட்டைக் காப்பியங்கள் எனும் நூல்.




அடுத்து … என் தமிழ் ஆசிரியர்கள் - தொடர்ச்சி

09 August, 2014

வாசி … வாசி ….





      இப் புவியில் வாழும் உயிர்களை அவற்றின் உணர்திறன் அடிப்படையில் ஒன்று முதல் ஆறு அறிவு வரை வகைப்படுத்திக் கூறுகிறது தொல்காப்பியம். அதன் பொருளாதிகாரத்தில், முதற்பாடல் (571) இவ்வாறு உரைக்கிறது.

          ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
            இரண்டறி வதுவே அதனொடு நாவே
            மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
            நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
            ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
            ஆறறி வதுவே அவற்றொடு மனனே
            நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.


      உயிரியல் தோற்றக் கருத்தின்படி, அமினோ அமிலங்கள் உயிர் மூலகூற்றின் முதல்படி. பின்னர் அதிலிருந்துதான் ‘தன்னைப் பிரதியெடுத்தல்’ எனும் நிகழ்வில், உயிரினங்கள் தங்களை உருவாக்கிக் கொண்டுள்ளன. ஐந்தாம் அறிவு வரையில் தம்மை உயர்த்தி வாழ முற்பட்ட உயிரினங்களில் இருந்துதான் மனிதன் தோன்றினான். ஆறாம் அறிவைப் பெருவதற்குத் தன்னை உட்படுத்திக் கொண்டான். அங்க அசைவுகளால் தன் இனத்தவரைத் தொடர்பு கொண்டவன், பின்னர் ஒலி எழுப்பித் தொடர்பு கொண்டான். ஒலியை வார்த்தையாக்கி அதனை பிறர் உணரும் பொருளாக்கி வாசிக்கத் தொடங்கியபோதுதான் மொழி வளர்ச்சி அடையத் தொடங்கியது. தமிழும் வாசிப்பில் வளர்ந்த தொல் மொழி.

      தமிழ் மொழியின் வாசிப்பு – பேச்சு மொழியும் எழுத்து மொழியும் கொண்ட இருவகைக் கோர்வை. பேச்சு-மொழி என்பது வட்டாரங்களுக்கு ஏற்ப மாறுபட்டது. ஆனால் எழுத்து-மொழி என்பது இலக்கண வறைமுறைகளுக்கு உட்பட்டது.

      எனவே, எழுத்து-மொழியின் வாசிப்பு ஒரு மொழியின் கட்டுக்கோப்பான, செழுமையான வளர்ச்சிக்கு மிக அவசியமான ஒன்று. இதைக் கருத்தில் கொண்டுதான் அன்றைய கல்வியாளர்கள், மாணவர்களின் வாசிப்புத் திறனுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்தனர்.



      வகுப்பில் மாணவனை எழுந்து நின்று வாசிக்கச் சொல்லி, முறைப்படுத்தினர். செய்யுள்களை மனனம் செய்து கூறச் செய்தனர். ள, ல, ற, ர, ழ, ய, ந, ண, ன போன்ற எழுத்துக்களைக் கொண்ட சொற்களைப் படித்துக்காட்டி அச் சொற்களின் பொருள் வேறுபாட்டினையும் உரைத்தனர். நான் ஆரம்ப வகுப்பில் (40 ஆண்டுகளுக்கு முன்) படித்த வரிகள் இன்றும் என் நினைவில் உள்ளன.

      ஆற்றின் ஓரம் கரை            -      ஆடையில் உள்ளது கறை

      வலைஞர் வீசுவது வலை       -      தையல் அணிவது வளை

      இந்த வரிகளை வாய்விட்டு உச்சரிக்கும்போது ஏற்படும் ஒலி வேறுபாட்டினை வாசிக்கும் மாணவனும் உணர்ந்தான், அதனைக் கேட்கும் மாணவர்களும் உணர்ந்தனர். அதனைத் தனது பேச்சு மொழியிலும் இயல்பாகப் பயன்படுத்தும் நிலையும் ஏற்பட்டது. எந்த வட்டாரா மொழிப்பேசும் மாணவனாக இருந்தாலும், அவனால் ழகரம் தவறின்றி உச்சரிக்கப்பட்டது. மொழி ஆசிரியர்களும் அதற்கு பெருந்துணையாக இருந்தனர்.

      ஆனால் இன்று தமிழ் வாசிப்பு என்பது தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாகத்தான் இருக்கிறது (அது தமிழ் வாசிப்பே இல்லை என்பது வேறு). தற்போதும் பள்ளிப் பாடத்திட்டங்களில் இவை இருந்தாலும், போகிற போக்கில் சொல்லித்தரும் பாடமாகத்தான் இருக்கிறது. ஏனெனில் மொழிப்பாடம் என்பது இரண்டாம் மொழியாகத்தான் இருக்கிறது. அதுவும் விருப்பத் தேர்வாகத்தான் இருக்கிறது. தமிழை மொழிப்பாடமாகத் தேர்ந்தெடுப்பது ஏதோ இயலாத மாணவர்கள் படிக்கும் பாடமாகத்தான் இருக்கிறது.

      அன்று பாடங்களை வாய்விட்டுப் படிக்கும் முறை இருந்தது. படிப்பவனுக்கும் பெருமையாக இருந்தது. பெற்றோர்க்கும் பெருமையாக இருந்தது. படிக்கும்போது பிழையாகப் படித்தால் திருத்தம் செய்யும் சூழலும் இருந்தது. ஆனால் இன்று பள்ளிகளில் “சத்தம் போட்டு படிக்காதே” என்று மாணவனைத் தடுக்கும் போக்குதான் உள்ளது. வாசிக்கத் தடை போட்டால் வார்த்தைகளை உச்சரிக்கும் பழக்கம் எப்படி ஏற்படும். உச்சரிக்கும் பழக்கம் இல்லையெனில் நல்ல தமிழ் எப்படிக் கிடைக்கும்?  

          சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
            வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்நித்தம்
            நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
            கொடையும் பிறவிக் குணம் – என்றார் ஔவை.

நாப்பழக்கம் இல்லாமல் செந்தமிழ் இல்லை. புரிந்து படித்து மனதில் நிறுத்துதல் இல்லாமல் கல்வி இல்லை.

      வாசிப்பு நின்று போனால், சுவாசிப்பும் நின்று போகும் அபாயம் உள்ளது. எனவே மாணவர்களுக்குத் தமிழை வாசிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டியக் கடமை கல்வியாளர்களுக்கு அதிகம் உண்டு. என்னைப் போன்றவர்களுக்கும் உண்டு.

                  தமிழை வாசிக்கக் கற்றுக் கொடுப்போம்.


… அடுத்து – என் தமிழ் ஆசிரியர்கள்


சென்ற பதிவின் முடிவில் அடுத்து … வேட்டி.. என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அன்றைய தினம் தமிழக சட்டசபையில் வேட்டி அணிவதற்கான சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால், வேட்டியினைப் பதிவு செய்யவில்லை. ஆனாலும் அடுத்த பதிவில் “வேட்டி” சிறப்பிக்கப்படும்.