அண்டம்
அளவிடமுடியா பெரும் விரிவு. விளங்கமுடியா பெரும் உண்மை. ஆதியும் அந்தமும் இல்லா பருப்பொருள்.
இதில் எண்ணிலடங்கா பிரபஞ்சங்கள். அதில் பால்வீதி எனும் பிரபஞ்சமும் அடங்கும். பால்வீதியில்
எண்ணிலடங்கா விண்மீன் குடும்பங்கள். அதில் ஒன்றுதான் பரிதி எனும் சூரியனும் அதன் குடும்பமும்.
நீலப் பளிங்குக் கோள் எனும் பூமி அக்குடும்பத்தில் ஒரு உறுப்பினர்.
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
என அவ்வை பிராட்டி கூறுவார். புவனத்தை நான்முகன்
படைத்தாரோ அல்லது வேறு எவரேனும் படைத்தனரோ, எவரும் அறியிலர். கண்டவர் விண்டிலர், விண்டவர்
கண்டிலர் என்பது முற்றிலும் உண்மை.
ஆனால்
வெகுகாலமாக பூமி தட்டையானது, பூமியின் கிழக்கே சூரியன் தோன்றி மேற்கில் மறைகிறான்.
வைகறையில் தோன்றும் சூரியன் பதினாறு குதிரைகள் பூட்டியத் தேரில் பவனி வருகிறான் என்றுதான்
பொதுவில் கதைக்கப்பட்டு வந்தது. புவனத்தை ஒரு சிறு விரலில் பூமகள் தாங்கிக் கொண்டிருப்பதாகவும்
சொல்லப்பட்டது.
ஏறக்குறைய
திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திய மேலை நாட்டு அறிஞர் தாலமிக்கூட பூமி நிலையானது என்றும்,
சூரியனும் பிறக்கோள்களும் பூமியைச் சுற்றிவருவதாகக் கூறினார். அது தாலமியின் கொள்கை
என்றே அழைக்கப்படலாயிற்று. அதன் பின்னர் வந்த பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோபர்
நிகோலஸ் மற்றும் கலிலியோ பூமி உருண்டை என்றும், அது சூரியனைச் சுற்றி வருகிறது என்றும்
நிரூபித்து, ஆனால் பழமை வாதிகளால் அக்கருத்திற்காக எதிர்க்கப்பட்டனர் என்றும் பதிவுகள்
தெரிவிக்கின்றன.
இவர்களுக்கு
முன்பே பூமி உருண்டை என்பது நமது தமிழர்களால் அறியப்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி
அது சுழல் தன்மைக் கொண்டது என்பதும் நம் முன்னோர்களால் அறிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.
அவ்வளவு ஏன், இந்த பிரபஞ்சத்தில் சூரியன் அடக்கம் என்பதை அவ்வை, இனியது பற்றிக் கூறும்போது
பதிவு செய்கிறார்.
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல் – என்கிறார்.
ஏகாந்தம்
என்பதற்கு தனிமை என்று மட்டும் கொள்ளாமல், எல்லையிலா அமைதியானப் பெரும் விரிவு என்றும்
பொருள் கொள்ளலாம். அப்படியென்றால், பிரபஞ்சத்தையும் ஏகாந்தம் என்ற சொல்லுக்குள் கொண்டுவரலாம்.
இங்கு ஆதி என்பது சூரியன் என்பது தெளிவு. இந்த பிரபஞ்சத்தில் உள்ள சூரியன் நாம் வாழ்வதற்கு
ஒளியை வழங்குவதால் அதனைத் தொழுதல் இனிது என்று பதிவிட்டுச் செல்கிறார். அன்று இலக்கியம்
என்பது இறைவனையும், வேந்தனையும் உயர்த்துதல் அல்லது புகழ்தல் என்றபோக்கில் இருந்ததால்,
வாழ்வியல் உண்மைகளைப் போகிறபோக்கில் பதிவிட்டு சென்றனர்.
ஆனால்
வாழ்வியலுக்கு வழிகாட்டிய திருவள்ளுவர் பெருந்தகை, மன்னனையும் இடித்துரைக்க வேண்டும்
என்று சொன்னவர். வானுறையும் தெய்வம் என்று தெய்வத்தை தொலைவில் வைத்தவர். அவர் தமது
பதிவில் இந்த பூமியைப் பற்றி பதிவிட்டுள்ளார்.
உழவு
எனும் அதிகாரத்தில், உழவின் மேன்மையைக் கூற முற்படும்போது –
சுழன்று மேர்ப்பின்ன துலக மதனா
லுழந்து முழவே தலை. (குறள்: 1031)
[சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை]
என்று பதிவிடுகிறார்.
அதாவது
இந்த உலகம் எவ்வளவுதான் சுழன்றாலும், அது உழவிற்கு காரணமான ஏர் கலப்பையின் பின்னால்தான்
உள்ளது. எனவே, உழவுதான் தலையானது என்கிறார்.
[தமிழறிஞர்கள் மன்னிக்க – இது வேறு ஒரு கோணத்தில் உரை – இதுவும் பொருந்தும்]
இங்குதான்,
வள்ளுவப் பெருந்தகை ஒரு அறிவியல் உண்மையை போகிறபோக்கில் பதிவிட்டுச் சென்றுள்ளார்.
அதாவது, இந்த உலகம் சுழல் தன்மைக் கொண்டது என்கிறார். திருவள்ளுவர் அறிவியலாளர் அல்ல,
அவர் புதிதாகப் பதிவிடுவதற்கு. அப்படியென்றால், உலகம் சுழல்கிறது என்பது அன்றையக் காலத்தில்
அனைவரும் அறிந்த ஒரு உண்மையாக இருந்திருக்க வேண்டும். எனவேதான் அதனை எடுத்துக்காட்டிற்கு
பயன்படுத்தியுள்ளார்.
தமிழர்கள்
இலக்கியத்திலும் ஆன்மீகத்திலும் ஈடுபாடுகாட்டி அதனைப் பதிவிட்டுச் சென்ற அளவிற்கு தாம்
அறிந்த அறிவியல் உண்மைகளைப் பதிவிட்டுச் செல்லவில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை.
அதுவே, நமது முன்னோர்கள் அறிந்த அல்லது அறிவித்த அறிவியல் உண்மைகள் வெளி உலகிற்கு தெரியாமல்
போனதற்குக் காரணமாயிற்று.
இந்த
பூமி சுற்றுகிறது என்பதை முன்னமே அறிந்தவன் தமிழன் என்பதில் ஐயமில்லை.
அன்று
தமிழன் அறிந்திருந்த அறிவியல் உண்மைகள் எத்தனை எத்தனையோ? அவற்றை முறைமைப் படுத்தினால்
எண்ணற்ற அறிவியல் உண்மைகளை வெளிக்கொனரலாம். அறிஞர் பெருமக்கள்தான் முயற்சிக்க வேண்டும்.
அடுத்து…….
அறம் செய ……
No comments:
Post a Comment