15 August, 2014

என் தமிழ் ஆசிரியர்கள்-2



 
என் ஆசிரியர்களுக்கு


      இந்த வலைப்பூவைத் தொடர்ந்து வாசித்துவரும் என் மகள், ஒரு நூல் “இரட்டைக் காப்பியங்கள்”. மற்ற நூல்களின் பெயர்கள் ஞாபகம் இல்லையா என்று கேட்டாள். அவளுக்காக, மற்ற மூன்று நூல்களின் பெயர்களையும் நினைவிலிருந்து வரிசைப்படுத்துகிறேன்.

-                                                                            சிற்பி பாலசுப்ரமணியன் அவர்களின் -  “நிலவுப்பூக்கள்”
-                                                                            கவிதாயினியின் – “கவிதை மலர்கள்”
-                                                                             உலகப்பெரும் கவிஞர்கள் – (ஆசிரியர் நினைவில்லை).

      ஆனால் மிகவும் வருத்தமானது என்னவென்றால், அதில் ஒருபுத்தகம் கூட தற்போது என்னிடம் இல்லை.  ஓலை வேய்ந்த வீட்டில், மரப்பெட்டியில் வைத்திருந்தேன். நான்கு நூல்களையும் கரையான் பசியாறிவிட்டது. வேறொரு நிகழ்வில் பரிசாகப் பெற்ற, மொழியாக்கம் செய்யப்பட்ட ஒரு கதைப் புத்தகம், படித்துவிட்டு தருகிறேன் என்று வாங்கிச் சென்றவரால் களவாடப்பட்டது. கரையானின் பிடியிலிருந்து காப்பாற்றி பல நூல்களைப் பதிப்பித்த தமிழ்த் தாத்தா வாழ்ந்த பூமியில்தான் நானும் இருந்திருக்கிறேன். இழந்திருக்கிறேன்.

      ஆனால் நான் செய்த பேறு சிறு வயதிலேயே இலக்கிய புத்தகங்களைப் பரிசாக பெற்றுச் சொந்தமாக்கிக் கொண்டதுதான். ஏனென்றால், அன்றையச் சூழல், பள்ளிப் புத்தகங்களையே வாங்கமுடியாமல் இருந்தேன். எனவே, தமிழ் இலக்கியங்களை வாசிக்கும் தகுதி பெறாமலேயே சொந்தமாக வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

      எனது அடுத்த தமிழாசிரியர், திரு நாராயணசாமி அவர்கள். தமிழ் இலக்கியமும் இலக்கணமும் சொல்லிக் கொடுத்தவர். தமிழை வாசிக்கச் சொல்லி வாய்ப்பளித்தவர். செய்யுளைப் பதம் பிரித்து உரைத்து அதை எளிமையாக்கியவர்.

      அதற்கு அடுத்த வகுப்பின் தமிழாசிரியர் (பெயர் வேண்டாம்). கடனே என்று பாடம் நடத்தியவர். அவரிடம் பெரிதாக எதையும் கற்கவில்லை.

      பின்னர் வந்தவர், திரு இராமசாமி. அப்போது இரண்டு இராமசாமிகள் இருந்தனர். இருவரும் தமிழாசிரியர்கள். உடையை வைத்து அடையாளப் பெயர் சூட்டப்பட்டது. ஒருவர் (வேட்டி அணிந்தவர்) வேட்டி-இராமசாமி. நன்றாகப் பாடம் நடத்துவார் என்று அவர் வகுப்பு மாணவர்கள் கூறுவர். மற்றொருவர் (முழுக்கால்சட்டை அணிந்தவர்) பேண்ட்-இராமசாமி. எங்கள் வகுப்பிற்கு கற்பித்தவர் திரு. பேண்ட்-இராமசாமி.

      திரு. பேண்ட்-இராமசாமி, அவர்தான் தேமா புளிமாவை அழகாக நடத்தியவர். வெண்பாவின் இலக்கணத்தை நடத்தியதோடு, வெண்பா எழுதும் முறையையும் சொல்லிக் கொடுத்தவர்.

      செப்பலோசை உடையதாய், ஈற்றடி முச்சீராய், ஏனைய அடி நாற்சீராய், இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் விரவி வர, நாள், மலர், காசு, பிறப்பு எனும் ஓரசைச் சீரால் முடிய வேண்டும் – என்று பாடம் நடத்தியவர்.

      அலகிட்டு வாய்ப்பாடு கூறுதலில் எங்கள் வகுப்பு மாணவர்கள் எப்பொழுதும் முழு மதிப்பெண் பெறுவர். புண்கணீர் பூசல் தரும் – என்று நடத்தியபோது, கண்ணில் நீர் கசியப் பாடம் நடத்தியவர். நீண்டு நெய்த ஆடை, வேண்டிய அளவிற்கு வெட்டப்பட்டதால் வேட்டி என்றும், துண்டிக்கப்பட்டதால் துண்டு என்றும் பெயர்வரக் காரணம் என்றும் தமிழரின் பாரம்பரிய உடையைச் சிறப்பித்துக் கூறியவர்.

      தமிழாசிரியர்கள் என்று வகைப்படுத்தினாலும், நான் தமிழ் வழிக் கல்வியில் பயின்றதால், பிற பாடங்களைத் தமிழில் நடத்திய ஆசிரியர்களும் அந்தப் பட்டியலில் வருவர். அவர்களில் சிலர்:

1.   கணிதப்பாடத்தை எளிமையாக நடத்தியவர். மாணவர்களை அடிக்காமலேயே அவர்களைத் தமது நையாண்டிப் பேச்சால் அடக்கி வைத்தவர் – திரு. சம்பத் – கணித (மேதை) ஆசிரியர்.
2.   வரலாற்றுப் பாடங்களை நாடக உரையாடலுடன் நடத்துவதுடன், ஆங்கில இலக்கணத்தையும் தமிழில் நடத்தியவர் – திரு. திருமூர்த்தி – வரலாறு பாட ஆசிரியர்.
3.   பிற பாடங்களைப் பயிற்றுவித்த திருமதி  இலட்சுமி, திருமதி ஜமுனா பேகம், திரு கிளமெண்ட், திரு அனந்தசயனன், திரு பொய்யாடாமூர்த்தி, திரு சுபாசு, திரு சுடலையாண்டி போன்றோர்.

      அகழ்வில், சொந்தக் கதையைப் பதிவிட்டிருந்தாலும், பழைய நினைவுகளைப் பதிவு செய்ய இது ஒரு வாய்ப்பு அல்லவா?. ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் எனக்குப் பாடங்களை நடத்திய ஆசிரியர்களையும் அவர்தம் நினைவுகளையும் பதிவிட முடிகிறது என்றால், அவர்கள் ஆசிரியர்களாகப் பாடம் நடத்திய முறை அவ்வாறு இருந்தது.

      ஆனால் இன்று மாணவர்கள் தமது ஆசிரியர்களை அவ்வாறு பெயர் குறிப்பிட்டு கூறுவார்களா என்பது கேள்விதான். ஏனென்றால், இன்று ஆசிரியர் – மாணவர் உறவு வணிகமாகவும், ஆங்காங்கே வரும் செய்திகளில் ஆசிரியர்களின் உறவுநிலைப் பிறழ்வும், பெற்றோரின் பார்வையில் ஆசிரியரின் கண்டிப்பு என்பது தண்டனைக்குரிய குற்றமாகவும் விரவிக்கிடக்கின்றன.

      ஆசிரியர்கள் தமது பண்பு நெறியிலிருந்து சிறிதும் விலகாமலும், மாணவர்கள் தமது ஆசிரியர்களைக் கல்விக் கடவுளாகவும், பெற்றோர்கள் தம் மக்களின் மீது வைக்கும் பாசம் கலந்த நம்பிக்கையைவிட, ஆசிரியர்கள் மீது மதிப்பு மிக்க மரியாதையையும் வைப்பார்களேயானால், கல்வியின் ஒழுக்கம் உயரும் என்பதில் ஐயமில்லை.



அடுத்து …  கால வகையினானே ..

No comments:

Post a Comment