03 September, 2014

நாட்டுதும் யாம் ஓர்


பொன்னகையால் புன்னகை இழந்தவள்
கால் நகையால் கழுத்து நகை இழந்தவள்
(கவிக்கோ)


            தமிழ் இலக்கியங்கள் கடவுளையும் மன்னர்களையும் கதை நாயகர்களாகக் கொண்டு படைக்கப்பட்டு வந்த காலத்தில், ஒரு எளிய வணிகனின் வாழ்க்கையைக் காவியமாகப் படைத்தவர் இளங்கோ எனும் இளைய மன்னன்.

            இதுதான் கதை என்று முன்னுரையிலேயே மூன்று வரியில் காப்பியத்தின் கருவினை உரைத்தவர் இளங்கோ.
                        அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்,
                        உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,
                        ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்,
                        சூழ் வினைச் சிலம்பு காரணமாக,
                        சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
                        நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்என-

Ø  அரசை ஆளும் மன்னன் தவறிழைக்கக் கூடாது
Ø  கற்புடைப் பெண்டிரை உலகம் வணங்கும்
Ø  ஊழ்வினைப் பயனை ஒவ்வொருவரும் அனுபவித்தே தீர வேண்டும்.

            இவை மூன்றும், சிலம்பு எனும் கருவியின் மூலம் எப்படி நடந்தேறியது என்பதை காப்பியமாகத் தருகிறேன் என்று சிலம்பினைத் தந்தார்.

            ஆராயாது செய்த தீர்ப்பின் விளைவாய், யானோ அரசன் யானே கள்வன் என்று பாண்டி நெடுஞ்செழியன் மாண்டுபோவான்.

            யான் பத்தினி என்பது உண்மையானால், இந்த மதுரை எரிந்து போகட்டும் என்று மதுரையை எரிந்து போகச் செய்வாள் கண்ணகி.

            முற்பிறப்பில் வேறொரு வணிகனின் கொலைக்கு காரணமானதால்  இப்பிறப்பில் தண்டனையாக கொலைக்களம் புகுந்து உயிர் துறப்பான் கோவலன்.

            இது போகிறபோக்கில் கதையாகத் தெரிந்தாலும், இம்மூன்று கருத்துக்களும் அன்றைய வாழ்வோடு இணைந்த வழிமுறைகள்.

            இது இன்று பொருந்துமா என்பது கேள்விக்குறியது.

ஒன்று: அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்

            அரசியலில் பிழை செய்தால் அறம் என்பதே எமனாக வந்து உரிய தண்டனையைக் கொடுக்கும். அப்படியென்றால், இன்றைய அரசியல் உலகில் கூற்றுவனுக்கு நிறையப் பணிச்சுமை இருக்கும்.

            அறம் என்பதற்கு தனி மனித ஒழுக்கம் எனஅறம் செயஎனும் பதிவில் எழுதியிருந்தேன். மன்னன் என்பவன், தனி மனித ஒழுக்கத்துடன் அரசாட்சி செய்யவேண்டும். அப்பொழுதுதான் அவனைப் பின்பற்றும் அவனது குடிமக்கள் தாமும் தனி மனித ஒழுக்கத்துடன் வாழ்வர். இன்றைய காலத்தில் அரசன் என்பதற்கு ஆட்சி அல்லது நிர்வாகிக்கும் பொறுப்புள்ளவன் என்று பொருள் கொள்வதே முறை. அதனால் அப்பொறுப்பில் உள்ளவர்கள் அறம் தவறி நடக்கக்கூடாது. ஆனால் இன்று பிழை செய்து வாழ்தலே மன்னவர் தொழில் என்று ஆனபின், கூற்றுவன் என்ன செய்வான். ஆடை என்பது அரையில் கட்டிய காலம் போக, இப்போதெல்லாம் முகம் மூடி செல்வதற்கல்லவா பயன்படுகிறது.


இரண்டு: உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்

            கற்புடைப் பெண்டிரை பத்தினி என அழைத்தனர். அதாவதுகொழுனன் தொழுதெழுவாள்என்பவள் மிகச் சிறந்த பத்தினி என்ற காலம் அது. இன்று அவ்வாறு சொல்ல முடியுமா? கற்பின் இலக்கணம் இப்போது மாறிவிட்டது. இருகட்சிக்கும் பொதுவில் வைக்கப்பட்ட காலமிது. வள்ளுவனைப் பிடிக்கவில்லையென்றால் வாசுகி விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம். எனவே, கற்புடைப் பெண்டிரை உயர்ந்தோர் போற்றுவர் என்றால், பிற பெண்டிர், கையில் சிலம்பின்றியே எரிக்க வருவர்.

மூன்று: ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்

            முற்பிறவியில் செய்த நல்வினையும் தீவினையும் இப்பிறவியிலும் தொடரும் என்பதே இதன் பொருள். அதாவது எல்லாவற்றிற்கும் முற்பிறப்பில் செய்த வினையே காரணம். விதிப்படியே அனைத்தும் நடக்கிறது. இக்கருத்தை இப்போது சொல்லமுடியுமா? விதியில் நம்பிக்கை இல்லாத, முற்பிறப்பில் நம்பிக்கை இல்லாத, மறுபிறவியில் நம்பிக்கை இல்லாத மனிதர்களும், மதங்களும் வாழும் நாட்டில், அவர்களுக்கு எதிரானக் கருத்தைத் தினிக்க முடியுமா?. ஆகவே இக்கருத்தும் பொய்த்துப் போகிறது.

            எனவே இளங்கோ கூறிய மூன்று கருத்துக்களும் இப்போது நடைமுறைக்கு ஒவ்வாதவை என்று சொல்லிவிடலாம். அதில் ஓரளவு உண்மையும் உள்ளது.

ஆனால் சற்று மாற்றி யோசித்தால் . . . .

ஒன்று:

            வணிகம் செய்ய வந்தவர்கள்  அரசியல் செய்தார்கள்
            அரசியல் செய்ய வந்தவர்கள் வணிகம் செய்கிறார்கள்
என்று எப்பொழுதோ படித்திருக்கிறேன்.

            இது உண்மையும் கூட. இன்று அரசியல் என்பதும், அதிகாரம் என்பதும், வணிக நடவடிக்கைகள் நிறைந்த களமாகிவிட்டது. அதில் முதலீடுகளும், இலாபமும் நட்டமும் தவிர்க்கப்பட முடியாதவையாக நியாயப்படுத்தப்படுகிறது. அதனால் பிழை மலிந்து தழைக்கிறது.

            பிழை என்பதை வரைமுறைப் படுத்தினால்விதிமுறை மீறல்கள், ஆதாயம் சேர்த்தல், வரைமுறையற்ற ஆசை, கையூட்டு என அது நீண்டு கொண்டே செல்லும். பிழை செய்வோர் தண்டிக்கப்படுவதில் கூட விதிமுறை மீறல்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. பின்பு எப்படி அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றுவன் ஆவான்?

            கூற்றுவன் ஆக முடியும். சட்டம் என்பது நான்கு சட்டங்களுக்குள் முடங்கிவிடாமல் அதன் கரங்கள் கனவாய் மீனின் கைகளைப் போல நீண்டு வளைந்து துழாவ வேண்டும். அது காறி உமிழும் கருப்பு மை, பிழைபுரிந்தவன் கண்களைக் குருடாக்க வேண்டும். தண்டனைகளில் தயவு தாட்சன்யம் கூடாது. தீர்ப்புகள் என்பது திருத்தப்பட முடியாத தீர்ப்புகளாக இருக்கவேண்டும். தவறானத் தீர்ப்பு வழங்கிடும்போது வழங்குபவருக்குப் பாண்டிய நெடுஞ்செழியனின் நினைவு வரவேண்டும்.

            சட்டம் என்பதற்கு நெறிமுறைகள், நெறிமுறைகள் என்பதற்கு அறம் என பொருள் தொடர்ந்து வருவதால், அரசியல் பிழைத்தோரை அறமே கூற்றுவனாக தொடரவேண்டும்.

            இன்று நீதிமன்றங்கள் அரசியல் பிழைத்தோரைக் குட்டத் தொடங்கிவிட்டன. மக்களும் அவர்களைப் பார்த்து குமட்டத் தொடங்கி விட்டனர். அவ்வாறெனில் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றுவன் ஆகும் காலம் மீண்டும் தொடங்கிடும்.

இரண்டு:

            உரைசால் பத்தினி என்றால் மதிப்பு மிக்க கற்புடைப் பெண்டிர் என வேங்கடசாமி நாட்டார் அவர்கள் உரை செய்துள்ளார். கற்பு என்பதன் அளவு கோல் யாது? அன்றுஇறக்கும்வரை ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்த மகளிர். இன்றுஇருக்கும்வரை ஒருவனுக்கு ஒருத்தி எனும் வாழும் மகளிர். கால மாற்றம். கற்பிற்கு இலக்கணங்கள் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமாக வரையறுக்கப்படுகின்றன.

            பெண் என்பவள் தெய்வமாகத் தொழத்தக்கவள் என வரையறை இருந்தபோது, அதை நிலை நிறுத்த நம் முன்னோர்கள் தம்மை வரையறைப் படுத்திக் கொண்டனர். பெண்ணடிமை எனும் சொல் விவாதத்திற்குரிய சொல்லாக மாறியபோது, அதை திடமாக வரையறுக்கத் தவறியதன் விளைவும், தமிழில் பிறமொழிக்கலப்பைத் தவிர்க்கக் காட்டிய தீவிரத்தை, தமிழ் மரபில் பிறர் (மேலை) மரபு கலப்பதைத் தவிர்க்க காட்டவில்லை என்பதாலும், நமது தமிழ் மரபின் மாண்பினைத் தொலைத்து விட்டு நிற்கிறோம். அடிமைத்தனத்திற்கும், அடக்கம் என்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டினைப் புரிந்துகொள்ளத் தவறி விட்டோம். அதன் விளைவுதான் இன்று குடும்பச் சிதைவுகள்.

            குடும்பச் சிதைவுக்கான காரணிகள் பற்றி நீண்டதொரு பதிவினை எழுதலாம். நம் தலைப்பையொட்டிய காரணியான, பிறனில் விழைதல் அதாவது கற்பு நெறி தவறுதலை மட்டும் இங்கு காண்போம். வள்ளுவர் காலத்தில் பிறனில் விழையாமை என்பது ஆடவருக்கு வகுத்துக் கொடுக்கப்பட்ட நெறிமுறை, ஆனால் இன்று அது இருபாலருக்கும் பொதுவாய்ப் போனது. இன்றைய நாளேடுகளில், நிச்சயம் ஒரு செய்தி, பிறனில் விழைந்ததைப் பற்றியதாகத்தான் இருக்கிறது. கற்பு நெறி களவாடப்படுகிறது அல்லது களவு கொடுக்கப்படுகிறது. விளைவு - கொலையும் செய்வாள்(ன்) பத்தினி. விளைவு - சிதைந்துபோன குடும்பம். விளைவு - சிதைந்து போன குழந்தைகளின் எதிர்காலம். யார் தவறுக்கு யார் பலியாவது?

            நல்ல குடும்பம் பல்கலைக் கழகம். அதற்கு வேந்தர் தலைவனாக இருக்கலாம். ஆனால் துணை வேந்தர் நிச்சயம் குடும்பத் தலைவியாகத்தான் இருக்க வேண்டும். நல்லொழுக்கம் மிக்க ஒரு தாயால்தான், குடும்பம் எனும் பல்கலைக் கழகம் விழுதுகள் விட்டு வாழ முடியும். அந்த நல்லொழுக்கம்தான், கற்பெனப்படும். அதைப் போற்றும் பெண்டிர்தான் பத்தினிப் பெண்டிர். அத்தகைய உயர்ந்த பெண்டிரை, உரைசால் பத்தினியை மட்டுமே உயர்ந்தோர் ஏற்றுவர்.

மூன்று:

            ஊழ்வினை எனும் சொல்லிற்கு, விதிக்கப்பட்ட செயல் எனும் பொருளில்தான் இளங்கோ அதனைக் கையாள்கிறார். அதை கதைப்போக்கிற்காக கோவலன் தன் முற்பிறவியில் செய்த வினை இப்பிறவியில் உருத்து வந்து ஊட்டுவதாக காட்சிப்படுத்தியிருப்பார். கம்பனில் கூட தயரதன் இறப்பிற்கு முன்வினையே காரணமாக இருக்கும். அது அக்கால நம்பிக்கை. ஒருவனின் வாழ்வில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தாம் முன்னர் செய்த நல்வினைகளும் தீவினைகளுமே காரணம் என்பதுதான். அதாவது வினை விதைத்தால் வினையையே அறுக்க வேண்டும், உன் நிகழ்வுகளுக்கு நீயே காரணம், அது முற்பிறவியாகவும் இருக்கலாம், இப்பிறவியாகவும் இருக்கலாம்.

            அதைத்தான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்றார் ஔவையார். பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் என்றார் திருவள்ளுவர். இது நீதி நெறியினை விளக்கும் பாங்கு. இதைத்தான், இன்றைய சோவின் கோட்பாடு (Chaos theory) ‘எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரு தொடர்புண்டுஎன நிரூபிக்க முயல்கிறது.

            எனவே ஊழ்வினை என்பது, தத்தமது வினைகளுக்கு தாமே காரணம் என்பதை வலியுறுத்தும் கோட்பாடாகும். பிறவி நம்பிக்கை இருப்போர்க்கு, எப்பிறவியிலும் தீங்கு செய்யாதே, அது உன்னைத் தொடர்ந்து வரும் என்பதும், பிறவி நம்பிக்கை இல்லை என்போர்க்கு, எவருக்கும் தீங்கு செய்யாதே அதன் விளைவுகள் நிச்சயம் உன்னை உன்வாழ் நாளிலேயே பாதிக்கும் என நல்வழிப்படுத்தும் கோட்பாடாகும். அதுவே ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் எனும் நிலைப்பாடாகும்.

   ஆக, இளங்கோ தமது பாட்டுடைச் செய்யுளில் வழங்கிய மூன்று குறிப்புகளும், வாழ்வினைச் செம்மையுடன் வழிநடத்தும் கோட்பாடுகளே.


                        முன்னம் உரைத்த நிமித்திகன் சொல்லினைத்
                        தின்னமாய்     நீக்கியே மாமுனி யானாய்
                        சிலம்பெனும் காப்பியம் செய்தனை நன்றாய்
                       வளமார் தமிழினில் வாழ்ந்து.


அடுத்துஎலக்கணம் புரியவில்ல

1 comment: