ஒரு ஊர்ல . . . . என்றுதான் பெரும்பாலான கதைகள் அன்று தொடங்கின. அதனைச்
சொல்வதற்கு பெரும்பாலும் பாட்டிகளும், சில சமயம் பாட்டன்களும் இருந்தனர். கேட்பதற்கு
காதுகள் இருந்தன. ஒரு திரைப்படத்தினால் காட்சிப்படுத்த முடியாத சோலைகளும் வனங்களும்
அவரவர் கற்பனையில் காட்சிப்படுத்தப்பட்டன. அரசன் நல்லவனாக இருப்பான் அல்லது கொடியவனாக
இருப்பான். குடியானவன் நேர்மையானவனாக இருப்பான் அல்லது பொறாமைக்குணம் கொண்டவனாக இருப்பான்.
விலங்குகள் பழிதீர்க்கும் அல்லது புத்தி சொல்லும். எப்படி இருப்பினும் முடிவில் தீயவைத்
தோற்கும், நல்லவை வெல்லும். கதையைக் கேட்டவன் அதை மற்றவனிடம் ஒப்புவிப்பான். மற்றவன்
பிரிதொருவனிடம் ஒப்புவிப்பான். அது தொடர்ந்து ஒப்புவிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.
கதையின் ஊடே சொல்லப்பட்ட ஒழுக்கமும் நீதியும் அலைவரிசை இல்லாமலேயே அவரவர் மனங்களில்
பதிவாகும்.
கதை என்பது கற்பனையாக இருந்தாலும், அதில் வரும் நிகழ்வுகள் உண்மை போலவே
உரைக்கப்பட்டன. அதனால்தான், வில்லிபுத்தூரருக்குத் தெரியாத மகாபராதக் கிளைக்கதைகள்
விறகு பொறுக்கும் கிழவிக்குத் தெரிந்திருந்தது. படிக்காத பாட்டிக்கு எங்கு கதையை நிறுத்த
வேண்டும் எங்கு மீண்டும் தொடங்க வேண்டும் எனும் வித்தைகள் தெரிந்திருந்தது. நிறுத்திய
இடத்திலிருந்து மறுநாள் கதை தொடங்கும்வரை, கதையைக் கேட்டவன், தன் கற்பனையில் கதை செய்வான்.
பட்டி விக்கிரமாதித்தனின் கதையைக் கேட்டவனுக்கு விக்கிரமாதித்தனின் தலை சுக்கு நூறாக
வெடித்திடுமோ என்ற பயம் இருக்கும். அது சிந்திக்கும் ஆற்றலை விளையாட்டாய் சொல்லித்
தரும் வித்தை.
பள்ளிகளில், நீதி வகுப்பு என்ற பெயரில், கதை சொல்லுவதற்கென்றே பாடவேளைகள்
இருந்தன,. புதிது புதிதாகக் கதைகள் சொல்லுவதற்கு, அம்புலிமாமா, கோகுலம், அணில் போன்ற
சிறுவர் இதழ்களைத் தேடி அலைந்து, படித்து, கதைச் சொல்லும் போக்கு மாணவர்களிடம் இருந்தது.
பஞ்சதந்திரம், பரமார்த்தகுருக்கதை, பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றவை கதையின்
ஊடே நீதியைச் சொல்லிச் சென்றன. இன்று அத்தகைய கதைகளும் இல்லை, இதழ்களும் இல்லை, மாணவர்களும்
இல்லை என்பதே உண்மை.
எங்கு போயினர் அந்த கதைச் சொல்லும் பாட்டிகள். எங்கு போயினர் கதைக்கேட்ட
சிறுவர்கள். தொலைந்து வெகுநாட்கள் ஆயிற்று.
வேகம் வேகம் என்று ஓடிக்கொண்டே வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த முரண்தொடர்
போலவே.
வாய்வழியே உண்டதை வாய்வழியே கழிக்கும் வவ்வால் போல், கல்வி என்பது
மனனம் செய்து கக்குதல் எனும் மாற்றம் அடைந்தபின், புத்தகங்கள் பொதி மூட்டைகள் ஆனபின்,
தாய்மொழியில் பேசினால் தண்டனை என்று ஆனபின், விரல்கள் ஒடிய வீட்டுப்பாடம் தினிக்கப்பட்டபின்,
முட்டாள் பெட்டிக்கு அடிமையானபின், விளையாட்டு
என்பதும் கதைக் கேட்டல் என்பதும் வழக்கொழிந்துபோகாமல் என்ன செய்யும்.
மூன்றுபேர் கொண்டது குடும்பம் என்று ஆனபின், சகிப்புத்தன்மைகள் இல்லையென்றானபின்,
முதியோர்க்கென்று இல்லங்கள் வந்தபின், பாட்டி என்பவர் ஒருவகை உறவினர் என்றானபின், கதைகள்
சொல்ல பாட்டிகள் ஏது?
தாய்மொழி என்பது இரண்டாம் மொழியானபின், தாய்மொழியின்றியும் கல்வி பயிலலாம்
என்றானபின், தாய்மொழியில் படிக்கத் தெரியாது என்பது பெருமையானபின், எந்த மொழியில் கதையைச்
சொல்வது அல்லது கேட்பது?
கதை சொல்லும் கலை இப்போது சொல்ல
மறந்த கலை.
அடுத்து…. நாட்டுதும் யாம் ஓர்
No comments:
Post a Comment