ஒவ்வொரு
மாணவனுக்கும் முதல் மொழி ஆசிரியர் அவரது பெற்றோர்தான். ஒவ்வொரு ஆசிரியருக்கும் முதல்
மாணவன் கண்டிப்பாக அவரது பிள்ளைகளாக இருக்க முடியாது. ஆனால் ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும்
அனைத்து மாணாக்கர்களையும் தங்களின் பிள்ளைகளாகத்தான்
பார்க்கின்றனர். அப்படிப் பார்த்தால்தான் அவர்கள் ஆசிரியர்கள்.
நான்
எழுதும் ஒவ்வொரு எழுத்திலும் என் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். என் ஆசிரியர்கள் என்பது
1967 – 1979 காலத்தில் எனக்குக் கற்பித்தவர்கள்.
புதுச்சேரியில்
அப்போதெல்லாம் விரல்விட்டு எண்ணக்கூடிய பள்ளிகளே இருந்தன. அதுவும் அரசுப்பள்ளிகள் மட்டுமே.
தனியார் பள்ளிகள் இரண்டு மட்டுமே என் நினைவிற்கு தெரிந்தவரையில் இருந்தன. அவை ஆங்கிலவழிக்
கூடங்கள். அரசுப்பள்ளிகள் அனைத்தும் தமிழ்வழிக் கல்வியே.
அது
ஒரு ஆரம்பப் பள்ளி. ஐந்து வகுப்பு வரையில் மட்டுமே. முதலியார்பேட்டை எனும் ஊரில் இருந்தது.
ஆரம்ப வகுப்பில் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களின் பெயர்கள் நினைவில் இல்லை. நான்காம் வகுப்பில்
கற்பித்த ஆசிரியர் – திரு. பரமதயாளன். தனியாகத் தமிழ் ஆசிரியர் இல்லை என்றபோதும், அவர்
தமிழும், தமிழ் வழியில் பிறபாடங்களையும் கற்பித்தார். புன்னகையின் புதல்வர். அவரே ஐந்தாம் வகுப்பிலும் ஆசிரியர். தமிழைக் கற்பித்தவர்.
அதே பள்ளியில், பயிற்சி ஆசிரியராக வந்த ஒரு ஆசிரியர் எங்கள் பாடங்களைப் பாட்டாக நடத்தினார்.
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு எனத் தொடங்கும் அந்தத் திரைப்பாடலின் ஓசையில், தமிழ் இலக்கியங்களின்
பெயர்களைக் கற்பித்தார். பலவரிகள் மறந்துபோனாலும், இந்த வரிகள் இன்னமும் என் நினைவில்.
சிலப்பதிகாரம்
தந்த இளங்கோ உண்டு – அந்த
சிந்தாமணித்
திருத்தக்க தேவருண்டு
மணிமேகலையை
இயற்றித்தந்த சாத்தனுண்டு
மேலும்
இங்கே கம்பன் காளிதாசனுண்டு
காப்பியங்களின் பெயர்களுடன் அவற்றின் ஆசிரியர்களின்
பெயரையும் இணைத்து கற்பித்தார். அதுதான் எனக்கு முதல் இலக்கிய அறிவு என்றும் கூறலாம்.
ஐந்தாம்
வகுப்புடன் முடிவுற்ற அப்பள்ளியிலிருந்து விடுபட்டு, உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றலானேன்.
அந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து பதினோராம் வகுப்பு வரை கற்பித்தனர். அப்பொழுதுதான்
அந்தப்பள்ளி கட்டிமுடிக்கப்பட்டு, திறப்பு விழாவிற்காக காத்திருக்காமல் செயல்பட தொடங்கியது.
வேறொரு பள்ளியில் படித்த மாணவர்கள் ஏழாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரையில்
அங்கு மாற்றப்பட்டனர். ஆனால் முதன்முதலில் புதிய மாணவர்களாக ஆறாம் வகுப்பில் அந்த பள்ளியில்
நாங்கள் சேர்ந்தோம் என்பது மகிழ்விற்குரிய நிகழ்வு. அங்குதான் தமிழுக்கு என்று தனியாக
மொழியாசிரியர்கள் கற்பித்தனர்.
தமிழாசிரியையின்
பெயர் – இராசலட்சுமி (இராஜலக்ஷ்மி). மாணவர்களைத் தமது பிள்ளைகளாகப் பாவித்த கன்னித்தாய்.
வாய்விட்டுப் படிக்கச் சொல்லி, வாசிப்பைத் திருத்துவார். ஒரு மெல்லிய சோகம் எப்போதும்
அவரிடம் குடிக்கொண்டிருக்கும். அது ஏன் என்று அப்போது புரியவில்லை. இப்போது தெரியும்.
அந்த
ஆண்டின் இறுதியில் பள்ளிக்குத் திறப்பு விழா நடைபெற்றது. பள்ளிக்கு பொதுவுடைமைத் தலைவர்
ப. ஜீவானந்தம் அவர்களின் பெயர் சூட்டப்பட்டது.
![]() |
பொதுவுடைமை |
![]() |
என் பள்ளி |
விழாவையொட்டி
நடைபெற்ற போட்டிகளில் இரண்டில் தேர்வுசெய்யப்பட்டு, நாவலர் நெடுஞ்செழியன் அவர்களிடமும்,
மக்கள் தலைவர் வ. சுப்பையா அவர்களிடமும் (முன்னவர் – தமிழக கல்வி அமைச்சர், பின்னவர்
– புதுவையின் வேளாண் அமைச்சர்), புத்தகங்கள் பரிசாகப் பெற்றேன். பரிசாகப் பெற்ற புத்தகங்களை
என் ஆசிரியையிடம் காண்பித்தபோது, அவர் தமது சோகம் கலைந்து, மகிழ்வுடன் என்னைப் பாராட்டியது
இன்றும் என் நினைவில் வாழ்கிறது. பரிசாகப் பெற்ற புத்தகங்களில் ஒன்று – திரு வ.சுப.
மாணிக்கனார் அவர்கள் திறனாய்வு செய்து எழுதிய – இரட்டைக் காப்பியங்கள் எனும் நூல்.
அடுத்து … என் தமிழ் ஆசிரியர்கள் - தொடர்ச்சி
No comments:
Post a Comment