இப்பொழுதெல்லாம் நாளிதழ்களிலும், தொலக்காட்சி செய்திகளிலும் அடிக்கடி வரும் செய்தி, 500 ரூபாய் இலஞ்சம் வாங்கியவர் கைது, 2000 ரூபாய் இலஞ்சம் வாங்கியவர் கைது, 7000 ரூபாய் இலஞ்சம் வாங்கியவர் கைது என்பவை தான். அதுவும் கைது செய்யப்பட்டவர், தம் கைகளால் முகத்தை மூடிப் போகும்போது அவர் படும் அவஸ்தை இருக்கிறதே, அப்பப்பா….. இவற்றைப் படிக்கும்போதும், பார்க்கும்போதும் எனக்கு பாவமாக இருக்கிறது. ‘ச்சே, சரியா வாங்கத் தெரியாம வாங்கி மாட்டிக்கிட்டாங்களே’ என்பதுதான்.
இலஞ்சம் வாங்க முயற்சிப்பவர்களுக்கும், இலஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டவர்களுக்கும், ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று தோன்றிற்று. ‘மாட்டிக் கொள்ளாமல் இலஞ்சம் வாங்குவது எப்படி?’ என குறிப்புகள் கொடுத்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும் அல்லவா? சில முக்கியக் குறிப்புகள் இவை:
1. முதலில் 2x2 அளவுள்ள அடர் நிறம் கொண்ட கைக்குட்டை ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள்.
2. உங்கள் அலுவலக மேசையில் நிறைய கோப்புகளைப் பரப்பி அடுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதாவது நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்பது அடுத்த மேசைக் காரருக்கு தெரியக் கூடாது.
3. உங்கள் பின்புறம் உள்ள சுவற்றில் ‘இலஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தவறு’ , ‘புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கெடுதல்’ எனும் வாக்கியங்களை ஒட்டி வையுங்கள்.
4. உங்கள் சட்டைப் பையில், நன்கு தெரிவது போல் ஒரு முழு சிகரெட் பாக்கெட்டை வைத்துக் கொள்ளுங்கள். அதாவது, பின்னால் உள்ள புகைப்பிடித்தல் தீங்கானது எனும் வாக்கியம் ஒரு சம்பிரதாய சடங்கு என்றும், ஆனால் நீங்கள் புகைப்பிடிப்பீர்கள் என்பதையும், குறிப்பாக உணர்த்துங்கள். இதைப்பார்க்கும் எவரும் இலஞ்சம் வாங்குவது தவறு என ஒட்டியிருப்பதும் சம்பிரதாயமே என்றும், அதனால் நீங்கள் இலஞ்சம் வாங்குவீர்கள் என்பதையும் குறிப்பால் உணர்ந்து கொள்வார்கள்.
5. உங்களுக்கு வரும் கோப்புகளை/அனுமதிக்க வேண்டிய பில்களை நன்கு படித்து, ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணங்களையும், நிராகரிக்க வேண்டிய காரணங்களையும் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
6. கோப்பு / பில் தொடர்பாக உங்களைச் சந்திக்க வருபவர்களை(பார்ட்டி), உங்கள் இருக்கைக்கு அருகில் சிறு இருக்கை போட்டு அதில் அமர வற்புறுத்துங்கள். அவர் அமர்ந்தவுடன், அவரது வேலை எளிதில் முடியாது அல்லது நிராகரிக்கப்படும் நிலையில் உள்ளதாக மெலிதாகப் பயமுறுத்துங்கள். அவ்வாறு சொல்லும்போது, உங்கள் மேசையை அடிக்கடி இழுத்து மூடுங்கள்.
7. ‘பார்ட்டி’ பயந்துவிட்டதா? என்பதை நோட்டமிடுங்கள். இதேபோல் வேறு ஒரு கோப்பு வேறு விதத்தில் முடிக்கப்பட்டதாகவும், ஆனால் நீங்கள் நேர்மையானவர்போலவும், வந்துள்ள நபருக்கு உதவி செய்யும் எண்ணத்தில் இருப்பதுபோலவும் காட்டிக் கொள்ளுங்கள்.
8. உங்களைத்தவிர மற்றவர்கள் ‘எதிர்பார்ப்பார்கள்’ என்பதுபோல நாசுக்காக தெரிவியுங்கள். இதற்காக பார்ட்டி நிறைய முறை வந்துபோக வேண்டி இருக்கும் என்றும் சொல்லுங்கள்.
9. பார்ட்டி பிடிகொடுக்கவில்லை என்றால், நிராகரிக்க உள்ள காரணங்களைப் பட்டியிலிட்டு, கோப்பினை/பில்லை மேலதிகாரிக்கு அனுப்பி வைத்துவிடுங்கள். டிமாண்டு செய்யாதீர்கள். ஏனென்றால் அது இலஞ்சம் கொடுக்க முன்வராத பார்ட்டியாக இருக்கலாம்.
10. பார்ட்டி பிடிகொடுத்து, ‘கொஞ்சம் பார்த்து முடியுங்கள் சார்’ என்றால், உங்கள் காட்டில் மழை. ஒரு குறிப்பிட்ட தொகையைச் சொல்லி, அதில் எல்லோர்க்கும் பங்குண்டு என்பதுபோலவும், உங்களுக்கு பெரிதாக ஒன்றும் தேறாது என்பதுபோலவும் நடியுங்கள். உங்களால் கொடுக்க முடிந்ததைக் கொடுங்கள் என்று சொல்லி வையுங்கள்.
11. பணத்தை ஒரு ‘கவரில்’ போட்டு எடுத்துவரச் சொல்லுங்கள்.
12. கவரை மறந்தும் கையால் தொடாதீர்கள். உங்கள் காலருகில் இருக்கும் குப்பைக் கூடையில் போடச் சொல்லுங்கள். அவர் கூடையில் போட்டவுடன், அதன்மீது, கொஞ்சம் பழைய காகிதங்களைக் கிழித்துப் போட்டு இயல்பாய் மறையுங்கள்.
13. இலஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்தாலும், உங்களுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று தப்பிக்கலாம் அல்லவா?
14. உங்கள் கண்கள் அந்நியர் எவரேனும் தென்படுகின்றனரா? பின்னால் கிராப் வெட்டியவர்கள் எவரேனும் தென்படுகின்றனரா? என்பதில் கவணம் கொள்ளட்டும்.
15. கவர் வந்தாயிற்று அல்லவா?. வந்தவரை இலாபம் என்று பார்ட்டியின் கோப்பினை/பில்லை அனுமதியுங்கள். அதுதான் தர்மம் அல்லவா?
16. அந்தக் கோப்பு அடுத்த மேசைக்கு சென்றவுடன் உங்கள் சுமை குறைந்துவிடும். அதன்பிறகு ‘பார்ட்டியின்’ தலையெழுத்தை அடுத்த மேசைக்காரர் முடிவு செய்வார்.
17. உங்கள் இருக்கையை விட்டு எழுந்து, சற்று உலாவல் செய்து சூழ்நிலையினை ஆராய்ந்து, எதுவும் உங்களுக்கு சந்தேகம் இல்லையென்றால், கூடையில் இருந்து கவரை எடுத்து, நீங்கள் பத்திரமான இடம் என்று நினைக்கும் இடத்தில் வைத்துவிடுங்கள்.
18. எக்காரணம் கொண்டும், கவரில் உள்ள பணத்தைக் கையால் தொடாதீர்கள்.இராசயன மை தடவப்பட்டிருக்கலாம்.
19. சாதகமான சூழ்நிலை வரும்போது, கவரை வீட்டிற்கு எடுத்துசென்று, கழிப்பறையில் அமர்ந்து பிரியுங்கள். கைகளை தண்ணீரால் கழுவுங்கள். கைகளில் கறை ஏதேனும் இல்லையென்றால், நீங்கள் கறைபடாத கைக்கு சொந்தக்காரர்.
20. கையில் கறை ஏதேனும் பட்டால், அது உங்களை சிக்கவைக்க செய்த ஏற்பாடு எனக் கண்டுபிடித்து, அத்தனை நோட்டுகளையும் கிழித்து, கழிவுக்கோப்பையில் போட்டு, தண்ணீர் ஊற்றி வெளியேற்றம் செய்துவிடுங்கள்.
21. இதை மீறியும், நீங்கள் அகப்பட்டுக் கொண்டீர்கள் என்றால், முதல் பத்தியில் கூறிய 2x2 அளவுள்ள அடர் நிறம் கொண்ட கைக்குட்டை உங்கள் முகத்தை மூடிக்கொள்ள நிச்சயம் பயன்படும்.
![]() |
[மன்னிக்க வேண்டும் மூதாதையரே - வேறு படம் போட்டால் பிரச்சனை வரும் - நீங்கள் அழகாகவும் இருக்கின்றீர்] |
அதன்பிறகு –
1. கம்பிகளுக்கு நடுவில் நீங்கள்.
2. நீங்கள் வாங்கிய இலஞ்ச பணமும், உங்களிடம் பையிலுள்ள இதர பணமும் பறிமுதல் செய்யப்படும், எவ்வளவு அழுதாலும் அது உங்களுக்குக் கிடைக்காது.
3. சிறையில் வழங்கப்படும் எந்த உணவும் உங்கள் தொண்டைக் குழியில் இறங்காது.
4. உங்கள் மானமும் மரியாதையும், உங்கள் குடும்பத்தாரின் மானமும் மரியாதையும், கப்பலேறிப் போகும்.
இதனை, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இலஞ்சம் தவிர் எனும் தலைப்பில் ஒரு ஞானி வெண்பாவாக எழுதியுள்ளார் –
கட்டி யழுதாலும் கால்காசு வாராது
வட்டிலிட்ட சோறிங்கு வாய்ருசிக்கச் செல்லாது
மட்டில்லா மானம் மதியிழந்து போகும்காண்
கைநீட்டி லஞ்சம் பெற.
இலஞ்சம் தவிர்.
.இம்புட்டு..விசயமும் அவர்களுக்கு தெரியும்....தலீவா...! வேறு ஏதாவது பாயிண்ட் இருந்தால் கூறுங்கள் ..
ReplyDeleteஅன்பு நண்பருக்கு, தண்டனைகள் கடுமை ஆகாத வரையில் குற்றங்கள் குறையாது. தண்டனைகளைக் கடுமையாக்க சொன்னால், அதை எதிர்த்து கொடிபிடிக்கும் கூட்டம் உள்ளவரையில் நம் போன்றோர் புலம்பிக் கொண்டு இருக்க வேண்டியதுதான்,
ReplyDelete