24 January, 2015

உத்தமம் தானா சொல்லுங்கள்?

       அகழ்வு பதிவிட்டு வெகு நாட்களாகிவிட்டது. அகழ்வு எழுதத் தொடங்கியதே புதுச்சேரியில் நடைபெற்ற 13வது உலகத் தமிழ் இணைய மாநாட்டின் பொருட்டு அறிவித்த வலைப்பூ போட்டிக்காகத்தான். 

            தமிழை மெத்தப் படிக்காத ஒரு எளிய மனிதன் தமிழின்பால் கொண்டிருக்கும் மதிப்பினால் அவனுக்குத் தோன்றிய கருத்துக்களையும், தமிழால் அவனுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும்அகழ்வாகபதிவிடத் தோன்றியது.

            போட்டியை நடத்திய புதுவை அமைப்பினர், வலைப்பதிவு போட்டிற்கு வைத்த நிபந்தனைகளுடன்அவர்களிடம் தலைப்பிற்கு அனுமதி பெற்று பதிவிடத்தொடங்கினேன்.
போட்டியானது மூன்று நிலைகளில் தேர்வு செய்யப்படும் என்று அறிவித்திருந்தனர்.
1.       பள்ளி மாணவர்களுக்கானது
2.       கல்லூரி அளவிலானது
3.       பொதுமக்களுக்கானது.
நான் மேற்சொன்ன முதல் இரு பிரிவுகளில் கலந்துகொள்ள முடியாது. அதனால் மூன்றாவது பிரிவானபொதுமக்கள்பிரிவில் கலந்துகொண்டேன்.

            போட்டியை நடத்திய அமைப்பினர், நான் எழுதுவதற்கு அனுமதி அளித்தனரே தவிர, பிற போட்டியாளர் எழுதும் வலைப்பூக்களின் முகவரியினைத் தெரிவிக்கவில்லை. நானும் அதனைப் பெரிதாகக் கருதவில்லை. ஏனெனில், பிற போட்டியாளரின் பதிவினைப் படிக்க நேர்ந்தால், நாம் எழுதும் இலக்கு மாறிப்போய்விடும் அபாயம் உள்ளதால், அதனைத் தவிர்த்தேன். இருப்பினும் போட்டியாளர்களின் கடமையான, ‘பங்குபெறும் வலைப்பூக்களின் முகவரியைத் தெரிவித்தல்என்பது இல்லாமலேயே, போட்டி தொடர்ந்து கொண்டிருந்தது.

              போட்டிக்கான இறுதிநாள் முடிந்தபின்பும் கலந்துகொண்டவர்களின்வலைப்பூமுகவரியினை அவர்கள் தெரிவிக்கவில்லை. புதுச்சேரியின் உலகத் தமிழ் இணைய மாநாடு நடைபெற இரண்டு நாட்களே இருந்த நிலையிலும் முடிவுகளையும் அறிவிக்கவில்லை.

            பங்குபெறுபவர்களுக்கே உள்ள ஆர்வத்தின் காரணமாக, போட்டி அமைப்பாளரை நான் மின்னஞ்சலில் தொடர்புகொண்டதற்கு, முடிவுகள் விழாவிற்கு முதல் நாள் அறிவிக்கப்படும் என்றார்இது உலகம் முழுமைக்கும் (அல்லது தமிழகம் முழுமைக்கும்) நடத்தப்படும் போட்டியல்லவா? வெற்றி பெற்றவர்கள் வெகு தொலைவில் இருந்தால் அவர்கள் (மறுநாள்) பரிசளிப்பு விழாவில் எப்படி கலந்து கொள்ளமுடியும் என்று அப்பாவியாய்க் கேட்டேன். வெற்றி பெற்றவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது என்று பதில் வந்தது. முடிவை அறிவிக்காமலேயே எப்படி வெற்றி பெற்றார்கள் எனக் கேட்டபின், வெற்றி பெற்றவர்களின் விவரம் அவர்கள்தளத்தில்வெளியிடப்பட்டது.

            வெற்றி பெற்றோர் விவரம் என்பது, போட்டியாளரின் பெயர் மற்றும் ஊர் எனும் அளவில் இருந்ததேயன்றி, அவர்களின் வலைப்பூ முகவரி தெரிவிக்கப்படவில்லை. அதைவிட அதிர்ச்சிதேர்வின் நிலை என்பது இரண்டாகக் குறைக்கப்பட்டு – (1) பொதுமக்கள் (2) மாணவர்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை இங்கே பாருங்கள்.



            பொதுமக்கள் பிரிவில், பரிசிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மூவரும் கல்லூரியைச் சார்ந்தவர்கள். எப்படி அவர்களைப் பொதுமக்கள் பிரிவில் கொண்டுவந்தார்கள் என்பதும் தெரியவில்லை.  ஒரு கல்லூரியில் தமிழ் படிக்கும் மாணவன் அல்லது தமிழ் நடத்தும் ஆசிரியரை, ஒரு எளிய பொதுமக்களோடு எப்படிஒப்புமைசெய்ய முடியும். அவர்கள் திறன்வேறு, பொதுமக்களின் திறன் வேறு அல்லவா?

            சரி போகட்டும் என்று, வெற்றி பெற்றவர்களின் வலைப்பூ முகவரிகளைத் தெரிவியுங்கள் என்று மின்னஞ்சல் செய்தேன். அதற்கு கிடைத்த பதில், தவிர்க்க முடியாத காரணத்தால் தர இயலவில்லை என்பதுதான்.

            போட்டி என்று வரும்போது, வெற்றி பெற்ற படைப்புகளைப் பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதுதானே முறை. கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டிகதைப்போட்டி என போட்டிகள் எப்படி இருப்பினும், வெற்றி பெற்ற படைப்புகளைப் பொதுவில் வைப்பதுதானே முறை. அப்போதுதானே அந்த படைப்பின் சிறப்பு பலரைச் சென்று அடையமுடியும். மறைத்துவைத்துக் கொடுப்பதற்கு இது என்ன இராணுவ இரகசியமா? அரசின் அதி முக்கியக் கோப்பின் தகவல்களையேதகவல் பெறும் உரிமைச் சட்டத்தில்பெறமுடியும் எனும் நிலை உள்ள இந்த நாட்டில், இது கேலிக் கூத்து அல்லவா?

தேர்வு செய்த முறையில் நான் எந்தக் குற்றமும் சொல்ல முன்வரவில்லை. ஆனால், பொதுவாக போட்டி என்று வரும்போது, பொறுப்பு வகிப்பவர்களைச் சார்ந்தோர் போட்டியில் கலந்து கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். வணிக நோக்கமுள்ள நிறுவனங்கள் கூட தமது நிறுவனத்தில் பணிபுரிவோர் மற்றும் அவர்தம் உறவினர்கள் போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தும். ஆனால் இங்கே போட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் கல்லூரிகளைச் சார்ந்தவர்களே இந்த உத்தமம் அமைப்பின் நிகழ்ச்சிக்கும் பொறுப்பாளர்கள் எனும் போது, சந்தேகம் எழுவது தவிர்க்க முடியவில்லை.


            இன்றுவரையில் (ஐந்து மாதங்கள் ஆகியும்) வெற்றிபெற்றவர்களின் வலைப்பூ முகவரியை உத்தமம் (உலகத் தமிழ் இணைய மாநாடு) அமைப்பினர் வெளியிட மறுப்பதன் காரணம் என்ன என்பது தெரியவில்லை.



            அதுமட்டுமல்ல, இந்த போட்டியில் பங்குபெற்றவர்களுக்கு (பரிசு பெறாவிட்டாலும்) சான்றிதழ் வழங்கப்படும் என்று அறிவித்தனர். அதுவும் இன்று வரை யாருக்கும் வழங்கியதாகத் தெரியவில்லை.

            இந்த நிலையில்  14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் நடக்க இருப்பதாகப் பார்த்தேன்.

            மொழி என்பது தகவல் பரிமாற்றத்திறகான அடிப்படைக் கருவி என்றாலும், நான்குபேர் கூடி அதன் வளர்ச்சியைத் தீர்மானிக்க முடியாது. அந்த மொழி பேசும் பொதுமக்களின் பங்களிப்பும் வரவேற்பும் இல்லாமல் எந்த மொழியும் செம்மொழி ஆக முடியாது. உத்தமம் அமைப்பினர் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.


   சட்ட நடைமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றும் சிங்கப்பூரில் நடைபெற உள்ள 14 வது உலகத் தமிழ் இணைய மாநாட்டிலாவது, உத்தமம் (உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மையம் - INFITT)  தம் குறைகளைக் கலையுமா?

            வாழ்க தமிழ்தமிழின் பெயரால் வாழ்க உத்தமம்