24 September, 2017
22 January, 2017
நாங்கள் நடத்திய போராட்டம்:
நாங்கள்
நடத்திய போராட்டம்:
அது நடந்தது 2006. புத்தாண்டின் தொடக்கத்தில்
புதுச்சேரி அரசு அல்லோகலப் பட்டுக் கொண்டிருந்தது. ஆம், அமைச்சக ஊழியர்கள் அனைவரும்
சட்டசபை எதிரில் உள்ள பூங்காவில் ஒன்று கூடி மூன்று மாதங்கள் நடத்திய மிகப்பெரும் போராட்டம்.
கொஞ்சம் பின்னோக்கி போவோம்.
புதுச்சேரியில் உள்ள அமைச்சக ஊழியர்கள் பல்லாண்டுகாலமாக
வஞ்சிக்கப்பட்டு வந்து கொண்டிருந்தார்கள். அதாவது இரண்டாவது ஊதியக் குழு வரையில் நல்ல
அடிப்படை ஊதியம் வாங்கி வந்தவர்கள், குறிப்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், செவிலியர்கள்
ஆகிய இவர்களைக் காட்டிலும் உயர் அடிப்படை ஊதியம் பெற்று வந்தவர்கள், பின்னர் மிகவும்
வஞ்சிக்கப்பட்டு, தொடர்ந்து வந்த ஊதியக்குழுவில் புறக்கணிக்கப்பட்டார்கள். அது இன்றுவரையில்
தொடர்கிறது என்பது இருக்கட்டும், 2006-க்கு வருவோம். அன்றைய தேதியில்(2006), இள நிலை
எழுத்தர்களின் ஊதியமானது 950 அடிப்படை ஊதியமாக இருக்க, எடுத்துக் காட்டாக - இவர்களைவிட
முன்பு குறைவாக வாங்கிவந்த ஆசிரியர்கள், செவிலியர்களின் அடிப்படை ஊதியமானது, 4000,
5000 என உயர்ந்திருந்தது. இந்தச் சூழலில் புதுவை அரசனாது, ஒரு நபர்க்குழு என ஒன்றை
அறிவித்து, பல பதவிகளுக்கு உயர் அடிப்படை ஊதியத்தை அமைத்து கொடுத்தது. ஆனால் அமைச்சக
ஊழியர்கள் வைத்த கோரிக்கையினை தொடர்ந்து புறக்கனித்து வந்தது. அப்போது புதுவையில் இயங்கி
வந்த மூன்று பெரிய ஊழியர் சங்கங்கள், திடீரென விழித்துக் கொண்டு, அமைச்சக ஊழியர்களை
ஓரணியில் திரட்டி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. அதில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
கோரிக்கைகளைப் பார்த்து வியந்து போய், புதுவை மாநிலத்திலேயே முதல் முறையாக, அனைத்து
அமைச்சக ஊழியர்களும் ஒன்று திரண்டு ஊழியர் சங்கங்களின் பின்னால் அணிவகுத்து நின்றோம்.
எங்கள் கனவுகளில் மிகை மதிப்பு அடிப்படை ஊதியம் கிடைத்துவிட்டதாக புல்லரித்து கிடந்தோம்.
ஆனால் நடந்தது வேறு.
மூன்று ஊழியர் சங்கங்கள் ஒன்று கூடி நடத்திய குழுவானது,
“தாழி உடைந்த கதையாக” போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்பு “வழுக்கல்” பேச்சு நடத்த
தொடங்கியது. அதாவது, “அரசு நமது கோரிக்கையை பரிசீலிக்கிறேன் என்று சொல்லிவிட்டது, எனவே
நாம் போராட்டத்தினைக் கலைத்து விடுவோம்” எனக் கூறியது. இதுவரையில், போராட்டம் என்றால்
என்னவென்றே தெரியாத, எந்த சங்க அமைப்பிலும் இல்லாத எங்களுக்கு, இவர்களின் பதில் எரிச்சலையும்,
கோபத்தினையும் ஏற்படுத்தியது.
நான் அன்றிரவு போராட்ட வாசகங்கள் கொண்ட,
எழுச்சி மிகு நீண்டதொரு கவிதை வடிவிலான வாக்கியங்களை
உருவாக்கினேன். மறுநாள் காலை, மூன்று ஊழியர்சங்கங்களும், ஒன்று கூடி போராட்டத்தினை
விலக்கிக் கொள்வது குறித்து விவாதித்து முடிவெடுப்பது போல் சற்று தொலைவில் தனியாக நாடகம்
நடத்திக் கொண்டிருந்தபோது, நான் அங்கு கூடியிருந்த
என் சக அமைச்சக ஊழியர்கள் மத்தியில், நான் எழுதிய வாக்கியங்களை வாசிக்க ஆரம்பிக்க,
ஒத்தக் கருத்துடைய அனைத்து ஊழியர்களும் ஒன்று கூடி ஆதரித்து, கோரிக்கை நிறைவேறாத நிலையில்
போராட்டத்தினை தொடர வேண்டும் என்று வெகுண்டெழுந்தனர்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத, அந்த மூன்று
ஊழியர் சங்கங்களும், போராட்டத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து விட்டு, வெளியேறிவிட்டனர்.
நாங்கள் தலைமையில் இல்லாமல், வழி நடத்துவோர்
இல்லாமல் தனித்து விடப்பட்டோம். அதைத்தான் அரசும் அவர்களும் எதிர்பார்த்தனர்.
ஆனால் “சில வேடிக்கை மனிதரைப்போல் வீழ்வோம்
என நினைத்தாயோ” என நாங்கள் ஒன்று கூடி, ஒரு குழு அமைத்து, போராட்டத்தினை தொடர்ந்து
நடத்துவது எனத் தீர்மானித்தோம்.
முதல்வர், துனைநிலை ஆளுனர், தில்லியில் உள்துறை
அமைச்சகம் என அனைத்து நிலைகளிலும் பேச்சு வார்த்தை நடத்தி, ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு
போராட்டத்தினை நடத்தினோம்.
இதில் குறிப்படத்தக்க செய்தி என்னவென்றால்,
எங்களில் யாருக்கும் சங்க நடவடிக்கைகள், போராட்டங்கள் ஆகியவற்றில் முன் அனுபவமே கிடையாது.
எந்த சங்கத்திலும் உறுப்பினர்களும் கிடையாது. ஆனாலும் போராட்டம் ஒரு கட்டு கோப்பாக,
எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியாகவே தொடர்ந்தது. எங்கள் முகங்கள், ஊடகங்களில் தெரிய
ஆரம்பித்தது.
போராட்டத்தின் முடிவானது, அடிப்படை ஊதியக்
கட்டமைப்பு என்பதிலிருந்து விலகி, மத்தியில் உள்ளது போல் பதவிக் கட்டமைப்பு எனும் நிலைக்கு
மாற்றம் அடைந்து வெற்றி பெற்றோம். அதுவரையில், இள நிலை எழுத்தராக பணியில் சேரும் ஒருவர்,
பெரும்பாலும் முது நிலை எழுத்தராக ஓய்வு பெறும் நிலைதான் இருந்தது. அதனை மாற்றி, எட்டு,
பதினைந்து ஆண்டுகளில் அடுத்தக்கட்ட பதவி உயர்வு கிடைக்கும் வகையில், பதவிகளை மறுசீரமைப்பு
செய்து, வெற்றியடைந்தோம்.
இந்த
போராட்டத்தில், எங்களுக்கு உதவ வந்த எந்த அரசியல் கட்சியினரையும் நாங்கள் அனுமதிக்கவில்லை,
வேறு எந்த அமைப்புகளையும் அனுமதிக்கவில்லை. ஒரு கட்டுகோப்பான நிலையில், எங்களிடம் இருந்த
நியாமான நம்பிக்கைக் கலந்த ஒற்றுமையே எங்களை வெற்றியடையச் செய்தது.
நாங்கள் போராட்டத்தில் வெற்றிபெற்றபோது,
ஒரு முது நிலை அமைப்பாளர் கூறிய கருத்து இதுதான் –
“போராட்டத்திற்கு
எவ்வளவு பேரை ஆதரவுக்குக் களத்தில் கொண்டுவருகிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு
முக்கியம் அவர்களுக்கு சிறு காயமும் (பாதிப்பும்) இல்லாமல், போராட்டத்தில் இருந்து
வெற்றியுடன் வெளியேற்ற வைப்பதும் முக்கியம்”
இதுதான் சத்தியமான உண்மை. இது எந்த காலத்திற்கும்,
எந்த பொதுவான எழுச்சி மிகு போராட்டத்திற்கும், பொருந்தக் கூடியது.
இது
தற்போதைய ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கும் பொருந்தும்.
[அது சரி, உங்கள் போராட்டக் குழு இப்போது
என்னாயிற்று எனக் கேட்கிறீர்களா? அது தற்போது இன்னொமொரு “சங்கமாக” வடிவம் மாறிவிட்டது.
என்னைப் பொருத்தவரையில், தவறான, நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை முன்வைத்து ஊழியர்களின்
நாக்கில் தேன் தடவக்கூடாது என்பதில் தெளிவாக இருந்ததால், அச்சங்கத்தினை விட்டு வெளியில்
வந்து, நீண்ட நெடு ஆண்டுகள் ஆகிவிட்டன. சட்ட சபை எதிரில் உள்ள பூங்கா இப்போது பூட்டு
போடப்பட்டு, எந்த போராட்டத்திற்கும் அங்கு அனுமதி கிடையாது].
Subscribe to:
Posts (Atom)