புதுச்சேரியில்
உள்ள மோதிலால் நேரு தொழில் நுட்பக் கல்லூரியில், வணிகவியல் பட்டயக் கல்வி 1978-79 தொகுப்பில்
பயின்ற நாங்கள் மொத்தம் 30 பேர். முப்பது பேரில் முதலில் தொலைந்து போனவன் சடகோப இராமானுஜன்.
இருபத்தைந்து வயதிற்குள் தன்னைத்தானே தொலைத்துக் கொண்டான். அடுத்து, ஆறேழு ஆண்டுகளுக்கு
முன்பு தொலைந்து போனவன், பச்சையப்பன். அவனைத் தொலைத்தது தொடர் குடி எனும் மது. முதலாமவன்
தொலைந்தபோது, எங்களுக்கு வருத்தம் இருந்தது. இரண்டாமவன் தொலைந்தபோது, வருத்தமும் சற்று
வெறுப்பும் இருந்தது. ஆனால் நேற்று (24.11.16) அதிகாலை மூன்றாவதாக ஒருவன் தொலைந்து
போனான். அவன் பெயர் சுந்தரராஜன். கோத்தாரி சுகர் & கெமிகல், அரியலூர் நிறுவனத்தில்
பணிக்குழு மேலாளர் (Personnel Manager) ஆக பணிபுரிந்து வந்தவன். விடியற்காலையில் ஏற்பட்ட
மாரடைப்பு அவனைத் தொலைத்து விட்டது. பணிக்கு தானக சென்றவன், நேற்று புதுச்சேரிக்கு
“அதுவாக” கொண்டுவரப்பட்டான். இன்று காலை அவன் உடலை எங்கள் நண்பர்கள் குழு ஒன்றுகூடி
தொலைத்து விட்டது. இனி அவன் புகைப்படங்களில் மட்டுமே சிரித்துக் கொண்டிருப்பான். எங்கள்
குழுவில் விரைவில் (22 வயதில்) திருமணம் நடந்தது அவனுக்குத்தான், அதுபோல் விரைவில்
இயற்கையாய் சென்றவனும் அவன்தான்.
முதல்
இரண்டுபேர் தொலைந்துபோனதில் ஏற்படாத வருத்தமும் பயமும் இப்போது இவன் மூன்றாவதாக தொலைந்தபோது
எங்களுக்கு ஏற்பட்டு விட்டது. நன்றாக பேசிக் கொண்டிருந்தவன், நடையைக் கட்டிவிட்டான்.
எங்களுக்குள் பேசிக் கொண்டோம். வயது 50-க்கு மேல் ஆகிவிட்டாலே, நடைகட்ட வேண்டிய காலம்
என்பதை அவனின் மறைவு எங்களுக்குள் ஏற்பட்டுவிட்டது. எங்களின் நண்பர்களில் ஒருவன் சொன்னான்,
“நண்பா, இனிமேல் யாரிடமும், அவன் பகைவனாக இருந்தாலும் வெறுப்புக் காட்டப்போவதில்லை,
வாழ்க்கை அவ்வளவுதான், இனிமேல் மறுபடியும் பிறக்கவா போகிறோம், அப்படியே பிறந்தாலும்
யார் எங்கே பிறக்கப்போகிறோம் என்று தெரியாது”. யதார்த்தமான உண்மை. மூன்றாமவனின் பிரிவு
எங்களை வேதாந்தி ஆக்கிவிட்டது. மெல்ல கலைந்து பிரிந்தோம். அடுத்து நான்காவதாக தொலையப்போவது
யார் என்று தெரியவில்லை. கணக்கில் நானும் இருக்கலாம்.
No comments:
Post a Comment